Shadow

தி சீக்ரெட் லைஃப் ஆஃப் பெட்ஸ் 2 விமர்சனம்

the-secret-life-of-pets-2-movie-review

வீட்டில் வளர்க்கப்படும் செல்லப் பிராணிகள், அதனை வளர்க்கும் உரிமையாளர்கள் வீட்டில் இல்லாத சமயத்தில் என்ன செய்யும் என்ற முதல் பாகத்தின் கதைதான், கலகலப்பான இரண்டாம் பாகத்தின் கதையும்.

மேக்ஸ், ட்யூக், கிட்ஜெட், ஸ்னோ பால் என தி சேக்ரெட் லைஃப் ஆஃப் பெட்ஸ் படத்தில் வந்த பிரதான கதாபாத்திரங்கள் அப்படியே வருகின்றன. மேக்ஸையும், ட்யூக்கையும் வளர்க்கும் கேட்டிக்குக் கல்யாணமாகி, லியாம் எனும் குழந்தையும் பிறக்கிறது. கைக்குழந்தையான லியாமிடம் மேக்ஸ் படும்பாடு கொஞ்சம் நஞ்சமில்லை. பின், லியாம் கொஞ்சம் வளர்ந்ததும், அவர்களுக்குள் பிரிக்கவியலாப் பந்தம் உருவாகிறது. குழந்தைகளுக்கும், செல்லப்பிராணிகளுக்குமான உறவு மிகவும் அலாதியானவை. படம் முடிந்ததும், சில அழகான லைவ் ஃபூட்டேஜையும் போட்டு அசத்துகின்றனர்.

படத்தில் மொத்தம் மூன்று கிளைக்கதைகள். கேட்டி தனது குடும்பத்தோடு ஒரு பண்ணை வீட்டுக்குச் சுற்றுலா போக, பயந்தாங்கொள்ளியான மேக்ஸ்க்கு அந்தச் சூழல் மிக அந்நியமாக உள்ளது. அங்குள்ள ரூஸ்டர் எனும் காவல் நாய், மேக்ஸின் பயத்தைப் போக்க உதவுகிறது. இது ஒரு கதை. மேக்ஸ், ஊருக்குப் போகும் முன், தனது பிரியமான தேனீ பொம்மையை, கிட்ஜெட்டிடம் கொடுத்து விட்டுச் செல்கிறது. எதிர்பாராத விதமாக, அந்த பொம்மை பூனைகள் சாம்ராஜ்ஜியத்தில் சிக்கிக் கொள்கிறது. கிட்ஜெட் எப்படி தேனீ பொம்மையை, பூனைகள் சாம்ராஜ்ஜியத்தில் இருந்து மீட்கிறது என்பது இரண்டாவது கதை. தன்னை ஒரு சூப்பர் ஹீரோவென நம்பிக் கொண்டிருக்கும் ஸ்னோ பாலிடம், சர்க்கஸில் சிறைபட்டிருக்கும் வெள்ளைப் புலியான ஹூ-வை மீட்க உதவி கேட்கிறது டெய்சி. இது மூன்றாவது கதை. இந்த மூன்று கதையும், ஒரு புள்ளியில் ஒன்றிணைய கலகலப்பான க்ளைமேக்ஸில் படம் முடிகிறது.

நாயான கிட்ஜெட், பூனை போல் நடிக்க எடுக்கும் ட்ரெயினிங்கும், அதைத் தொடர்ந்து பூனைகள் சாம்ராஜ்ஜியத்திற்குச் சென்று, அவர்களுக்கு ராணியாகும் அந்தக் காட்சி, அவ்வளவு கலகலப்பாக உள்ளது. சிரித்து வயிறே வெடித்துவிடும் எனச் சொல்லுமளவிற்கு, அந்தக் காட்சியை அதகளப்படுத்தியுள்ளார் திரைக்கதையாசிரியர் ப்ரையன் லின்ச். சிறுவர்களுக்கு, குறிப்பாக 10 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு, இப்படம் மிகவும் பிடிக்கும்.