Shadow

Godzilla X King: The New Empire விமர்சனம்

பூமியின் மேற்பரப்புக்குக் கீழுள்ள பூமியின் அடியாழத்திலிருந்து (Hollow Earth) புது அச்சுறுத்தல் முளைத்திட, கிங் காங்கும், காட்ஸில்லாவும் இணைந்து தடுக்கின்றனர். பூமிக்கு மேற்பரப்பில் இருக்கும் காட்ஸில்லா, டைட்டன்கள் எனும் இராட்சச ஐந்துகளிடம் இருந்து உலகைக் காப்பாற்றிக் கொண்டு ரோம் நகரத்து கொலசியத்தில் ஓய்வு எடுத்துக் கொண்டுள்ளது. கிங் காங்கோ, பூமியின் அடியாழத்தில் வேட்டையாடிக் கொண்டு தன் காட்டு வாழ்க்கையில் மகிழ்வாக இருக்கிறது. இந்நிலையில், பூமியின் அடியாழத்தில் இருந்து வினோதமான சமிக்ஞைகள் வருகின்றன. அதே சமயம், வாய் பேசமுடியாத காது கேளாதவளும், ஐவி பழங்குடியின் கடைசி நபரும், ஐலீனின் தத்து மகளுமான ஜியாவிற்கும் அந்த சமிக்ஞைகளை உணருகிறாள். தன்னை யாரோ, பூமியின் அடியாழத்திலிருந்து உதவி கேட்பதாக உணருகிறாள். அந்த சமிக்ஞையை உணரும் காட்ஸில்லாவும் நகரத் தொடங்குகிறது.

ஜியா, ஐலீன், பெர்னி ஹேயஸ், ட்ரேப்பர் ஆகியோர் பூமியின் அடியாழத்திற்குச் செல்கின்றனர். கிங் காங், பூமியின் அடியாழத்திலுள்ள அறியப்படாத நிலப்பகுதியில், தன்னைப் போல் பெரிய மனிதக்குரங்குகளைச் சந்திக்கின்றன. கிங் காங், இளவயது மினி காங்கான சுகோவைச் சந்திக்கிறது. சுகோ, பிற மனிதக்குரங்குகள் வாழும் இடத்திற்கு கிங் காங்கை அழைத்துச் செல்கிறது. அங்கே, ஸ்கார் கிங் எனும் வில்லன் மனிதக்குரங்கையும், ஷிமோ எனும் பனி காட்ஸில்லாவையும் சந்திக்கிறது கிங் காங். ஜியா, மோத்ராவின் உதவியுடன் காட்ஸில்லாவை பூமியின் அடியாழத்திற்கு அழைத்து வருகிறது. கிங் காங்குடன் இணைந்து, ஷிமோவையும், ஸ்கார் கிங்கையும் எதிர்க்கிறது.

படத்தின் கலகலப்பிற்கு உதவியுள்ளார் பெர்னி ஹேயஸாக நடித்துள்ள ப்ரையன் டைரீ ஹென்றி. அவர், “I am no stranger to danger” எனும் பொழுது திரையரங்கில் சிரிப்பொலி எழுகிறது. இந்தப் படத்தின் அழகான ஆச்சரியம், மினி காங்காக வரும் சுகோதான். சுகோக்கும், காங்கிற்குமான உறவு உரசலில் இருந்து மெல்ல ஆழமான பந்தத்தில் முடிவது மிகவும் ரசிக்க வைக்கிறது. முதற்பாதி படம் வழக்கமான மான்ஸ்டர் வெர்ஸ் படங்கள் போல் இருக்க, அடியாழத்திற்குச் சென்ற பிறகு படம் வேகமெடுப்பதோடு, ஒரு மேஜிக்கையும் நிகழ்த்துகிறது. பூமியின் அடியாழத்து அழகும், மான்ஸ்டர்களுக்கு இடையேயான சண்டையும், மிருகங்களின் முகபாவனைகளும், VFX தொழில்நுட்ப உதவியால் நேர்த்தியாக அமைந்துள்ளன. குழந்தைகளுடன் சென்று குதூகலிக்க ஏற்ற வகையில் நிறைவானதொரு மான்ஸ்டர் வெர்ஸ் படமாக வந்துள்ளது காட்ஸில்லா X காங்கின் இந்தப் புது சாம்ராஜ்ஜியம்.