Shadow

மகளிர் மருத்துவ உள்நோக்கியியல் மாநாடு

IAGE

எண்டோஸ்கோப்பி என்பதன் தமிழாக்கமே ‘உள்நோக்கியியல்’ எனும் பதமாகும்.

பெண்ணின் வயிற்றினில் உள்ள குடல், பித்தப்பை, கர்ப்பப்பை, சினைமுட்டைப்பைக் கருக்குழாய்கள் போன்ற அனைத்து உறுப்புகளையும் சிறுதுளை மூலம் பார்க்கவும், தேவையானால் அறுவைச் சிகிச்சை செய்யவும் முடியும். கடந்த 40 வருடங்களில் மின்னல் வேகத்தில் பரவியுள்ள மிகச் சிறந்த மருத்துவமுறை இந்த உள்நோக்கியியல் என்று சொல்வது மிகப் பொருந்தும். சமீபத்தில் 87 வயது மூதாட்டிக்கு லேப்ராஸ்கோப்பி மூலம் கருப்பை மற்றும் சினைமுட்டைப்பையில் உள்ள புற்றுநோய் அகற்றப்பட்டது என்று ஜப்பான் பெருமையுடன் கூறிக் கொள்கிறது.

இந்திய மகளிர் உள்நோக்கியியல் கழகம் இரண்டாயிரத்து ஐந்நூறு சிறப்பு மருத்துவர்களை உறுப்பினர்களாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில், இந்தக் கழகத்தின் முதல் அகில இந்திய மகாநாடு 30/3/2018 முதல் 3 நாட்களுக்குத் தொடர்ந்து நடைபெறுகிறது. மகாநாட்டில் 150 சிறப்பு மருத்துவர்கள் மற்றும் 70 ஆராய்ச்சியாளர்கள் கலந்து கொள்கிறார்கள். இவ்- உள்நோக்கியியல் உள்ள தற்போதிய வளர்ச்சியைப் பற்றித் தெரிந்து கொள்ள 350 பிரதிநிதிகள் பதிவு செய்துள்ளார்கள்.

இந்நிகழ்வின் சிறப்பு விருந்தினராக பொதிகை தொலைக்காட்சியின் இயக்குநர் ஆண்டாள் பிரியதர்ஷினி கலந்து கொண்டார். “என் வாழ்வின் மிக முக்கியமான தருணமாக இதைக் கருதுகிறேன். இறைவனைத் தரிசித்த பொழுது எனச் சொல்வேன். மனிதர்களைப் பிரம்மன் படைத்தான் என்பார்கள். இல்லை, பெண் மருத்துவர்களாகிய நீங்கள் தான் பிரம்மனையே படைத்தவர்கள். ஒரிய மொழி பாடல் ஒன்றுண்டு.

‘எல்லோருக்கும் முன் நாம் இருந்தோம்;
பறவைகளுக்கு முன் இருந்தோம்;
கடலுக்கு முன் இருந்தோம்;
கடவுளுக்கும் முன் நாம் இருந்தோம்;
அனைவருக்கும் முன் இருந்தது பெண்களாகிய நாம்.’

என அந்தப் பாடல் போகும். ஓர் உயிரைப் பரிசாகக் கையில் தரும் அற்புதமான பணியைப் புனிதமான பணியை மருத்துவர்கள் நீங்கள் செய்கிறீர்கள். ஆக, நீங்கள் அத்தனைப் பேரும் தான் நாங்கள் கண்ணால் காணும் தெய்வங்கள்.

இங்கே மருத்துவர் காட்டிய காணொளியை (ஏழு மாத கர்ப்பிணிப் பெண்ணுக்கு அப்பெண்டிசிட்டிஸ் ஆப்ரேஷன் செய்யப்பட்ட சிக்கலான ஆப்ரேஷனின் காணொளி), அனைத்து கணவர்களுக்கும் மாமியார்களுக்கும் கண்டிப்பாகப் போட்டுக் காட்டவேண்டும். அப்போது தான் மருமகள்களின் வலியை மாமியார்கள் உணர்ந்து கொள்வார்கள்.

ஒரு பெண், ஒரு பெண் குழந்தையைப் பெற்றுவிட்டால், நம் சமூகத்தில் அவள் எவ்வளவு தூரம் சிலுவையில் அறையப்படுகிறாள் என்பது அனைவருக்கும் நன்றாகத் தெரிந்திருக்கும். அவளே ஆண் குழந்தயைப் பெற்றுவிட்டால், ராஜமகுமாரி போன்ற வரவேற்பு அவளுக்குக் கிடைக்கிறது. ஆண் குழந்தையாகினும், பெண் குழந்தையாகினும், பத்து மாதங்கள் ஒரே நரக வேதனை தான் பெண் அனுபவிக்கிறால் என்கிற போது ஏன் இந்தப் பாரபட்சம்? எனவே மருத்துவர்களாகிய உங்களைக் கையெடுத்து வணங்கி ஒரு வேண்டுகோளை வைக்கிறேன். இது போன்ற படக்காட்சிகளைக் கணவர்களுக்கும் மாமியார்களுக்கும் போட்டுக் காட்டவேண்டும்.

பெண் சிசுக் கொலை பற்றி பதினைந்து வருடங்களுக்கு முன் ஒரு நாவல் எழுதினேன். அதற்காக தர்மபுரி மாவட்டத்தில் ஆறு மாதம் தங்கியிருந்தேன். பெண் குழந்தையைப் பெற்றெடுத்தால், மருமகள்களை வீட்டுக்குள் அனுமதிக்க மாட்டார்கள். எனவே, பெண் குழந்தை பிறந்ததும் அதைப் பார்க்கக் கூடமாட்டார்கள், தாதியிடம் சொல்லிக் கொல்லச் சொல்லிவிடுவார்கள். அந்த தாதியும் குழந்தையைப் பத்து நிமிடம் தண்ணீரில் முக்கிக் கொன்று விடுவார்கள். அதைக் கண்ணால் பார்த்தேன். நரகத்தில் இருப்பது போல் உணர்ந்தேன். ஒரு மாதம் என்னால் சாப்பிட முடியவில்லை; தூங்க முடியவில்லை. நான் நானாக இல்லை. மனநலம் பாதிக்கப்பட்டு மீண்டேன். ஏன் இவ்வளவு கொடுமை? இப்படிப்பட்ட பெண்களுக்கு இந்த மாதிரி காணொளிகளைப் போட்டுக் காட்டி, அவர்களுக்குக் கற்பிக்க வேண்டுமா? ஒரு பெண் உயிரைக் கொடுத்து உயிரை உருவாக்குகிறார் என்பதைப் புரிய வைக்கவேண்டும். ஆண் பெண் இருவருக்கும் தானே, இந்தக் காற்றைச் சுவாசிக்க உரிமை இருக்கு; சூரியனைப் பார்க்க உரிமை இருக்கு; நட்சத்திரத்தைப் பார்க்க உரிமையிருக்குதானே?

மருத்துவர்களின் அறம் என்பது, இப்படியான காணொளிகளைப் பொதுமக்களையும் காணச் செய்து விழிப்பு ஊனர்ச்சி ஏற்படுத்த வேண்டும். இப்படியான காணொளிகளை அளித்தால், பொதிகைத் தொலைக்காட்சியில் அதைக் கண்டிப்பாக ஒளிபரப்புவேன் என உறுதியளிக்கிறேன்” என்றார்.

இந்த மருத்துவ மகாநாட்டின் சிறப்பான அம்சம் என்னவெனில், ‘உள்நோக்கியியல் வினாடி வினா’வில் முதல் பரிசு பெறுபவர்களுக்கு 16000/- மதிப்புள்ள புத்தகமும், மேலும் 20 சிறப்பு பரிசுகளும் இளம் ஆராய்ச்சியாளர்களுக்குக் கொடுத்து ஊக்குவிக்கப்படவுள்ளது.