
அமெரிக்கா, கனவுகளின் தேசம். தகுதியும் திறமையும் உள்ளவர்களுக்கு வாய்ப்புகளையும் வசதிகளையும் வாரி வாரி வழங்கிய, வழங்கிக்கொண்டிருக்கிற தேசம். இங்குக் கொட்டிக்கிடக்கும் இயற்கை வளம், தொழில் வாய்ப்புகள் உலகெங்கிலும் இருந்து தொழில் முனைவோரைத் தன்பக்கம் தொடர்ந்து ஈர்த்துக் கொண்டே இருக்கிறது. புதிய தொழில் நுட்பங்கள், அவற்றின் வர்த்தகம், விரிவாக்கம் என அமெரிக்கப் பொருளாதாரம் எல்லாத் திசைகளிலும் வளரத் துவங்கியபோது அதை நிர்வகிக்க, முன்னெடுக்கத் தொழிலாளர்கள், வேலையாட்கள், தொழில்நுட்ப வல்லுநர்களுக்கான தட்டுப்பாடு உருவானபோது, உலகெங்கிலும் இருந்து அடுத்தகட்ட குடியேற்றங்கள் அமெரிக்க மண்ணில் நிகழத்துவங்கின. இதனால்தான் நூற்றாண்டுகள் கடந்தும் போட்டிபோட்டுக் கொண்டு உலகெங்கிலும் இருந்து அமெரிக்க மண்ணில் கனவுகளோடு வந்து இறங்குகிறவர்களின் எண்ணிக்கை குறைவதாக இல்லை.
வேலைதேடி அமெரிக்காவிற்கு வருகிறவர்களை நெறிப்படுத்தும் சட்டவடிவு முதல் முறையாக 1864ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இது பெரும்பாலும் விவசாயப் பண்ணை வேலைகள் மற்றும் தொழிற்சாலைகளுக்கான ஆட்களை வேலைக்கு அமர்த்துவதை அடிப்படையாகக் கொண்டிருந்தது. அடுத்த நூறு வருடங்களில் இந்தச் சட்டவடிவு பல்வேறு திருத்தங்களுக்கு உட்படுத்தப்பட்டது. 1952ஆம் ஆண்டில்தான் H1 Visa என்கிற பிரிவு அறிமுகமானது. அதாவது தகுதியான திறமையான வேலையாட்களை ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டும் அமெரிக்க மண்ணில் வேலை செய்ய அனுமதிப்பது என்கிற அடிப்படையில் கொண்டுவரப்பட்டது. இதன்படி வருடத்திற்கு 58000 வெளிநாட்டினரை அமெரிக்க மண்ணில் வேலையில் அமர்த்த வழிவகையானது.
1990ஆம் ஆண்டு “Immigration Reform and Control Act of 1990” என்கிற புதிய சட்டவடிவு அதிபர் புஷ் அரசாங்கத்தால் கொண்டு வரப்பட்டது. இதுதான் இன்றைக்கு நடைமுறையில் இருக்கும் H-1B விசாவுக்கான ஆரம்பப்புள்ளி. இதன்படி வருடத்திற்கு 140000 வெளிநாட்டினரை வேலைக்கு அமர்த்தலாம் என்றும் அதில் 65000 வேலையிடங்கள் திறமையான தொழில் நுட்பப்பிரிவினருக்கு உள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதுதான் இன்றைக்கு அமெரிக்காவிற்கு வரவிரும்பும் இந்தியர்கள் மத்தியில் பரபரப்பாக விவாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் H-1B விசா.
கடந்த பதினெட்டு வருடங்களில் அமெரிக்கா வழங்கிய H-1B விசாக்களில் பாதிக்கும் மேற்பட்ட விசாக்கள் இந்தியர்களுக்குத்தான் வழங்கப்பட்டிருப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. மென்பொருள் தொழில்நுட்பத்தில் இந்தியர்களின் திறமையும், தேவையும் அமெரிக்க நிறுவனங்களுக்கு தேவையாக இருப்பதே இதற்குக் காரணம். இதே காலகட்டத்தில் நமது அண்டை நாடான சீனாவுக்கு வெறும் 10 சதவிகிதத்திற்கும் கீழான H-1B விசாக்களே கிடைத்திருக்கிறது.இந்த விசா வைத்திருப்பவர்கள் 3-6 வருடங்கள் வரை அமெரிக்காவில் தங்கி வேலை பார்க்கலாம். வேலை இழந்தவர்கள் அறுபது நாட்களுக்குள் தங்கள் தாயகம் திரும்பிவிட வேண்டும் என்பது முக்கிய நிபந்தனை.
அமெரிக்க நிறுவனங்கள் தங்களுடைய ஊழியர்களுக்கு வழங்கிடும் சலுகைகளான சம்பளத்துடன் கூடிய விடுமுறை, மருத்துவக் காப்பீடு, ஓய்வூதிய திட்டத்திற்கான செலவுகள் என எதையும் வெளிநாட்டில் இருந்து வரும் H-1B வேலையாட்களுக்குத் தரத்தேவையில்லை என்பதால் குறைந்த செலவில் திறமையான பணியாளர்களினால் தங்களின் லாபம் அதிகரிப்பதைக் கண்ட பல நிறுவங்கள் போட்டிபோட்டுக் கொண்டு H-1B ஆட்களுக்கு வேலைகளைத் தரத்துவங்கின. இதனால் ஒரு நிறுவனத்தில் பணி முடிந்தவுடன் இன்னொரு நிறுவனத்தில் வேலைக்குச் சேர்வதும் இந்தியர்களுக்கு எளிதானது. இந்த இடைக்காலத்தில் நிரந்தர வசிப்புரிமை அல்லது குடியுரிமை கிடைத்துவிடுவதும் நிறைய இந்தியர்களை அமெரிக்கா பக்கம் இழுத்தது. இன்றும் இழுத்துக் கொண்டிருக்கிறது.
தங்கள் திறமைக்கான அங்கீகாரம். அமைதியான, பாதுகாப்பான வாழ்க்கைச்சூழல், குழந்தைகளுக்குச் செலவில்லாத அடிப்படைக் கல்வி, மேம்பட்ட வாழ்க்கைத்தரம் போன்ற காரணங்கள்தான் பெரும்பாலான இந்தியர்கள் அமெரிக்காவைத் தெரிவு செய்யக் காரணம். மேற்படிப்பு படிப்பதற்காக வருகிறவர்கள், வேலை தேடி வருகிறவர்கள் இந்தக் காரணங்களினால் இங்கேயே நிரந்தரமாகத் தங்கிவிடத் தீர்மானிக்கிறார்கள்.
இந்த H-1B விசா பணியாளர்கள் பல்வேறு வகையில் அமெரிக்காவுக்குக் கொண்டுவரப்படுகின்றனர். முதலாம் பிரிவில் அமெரிக்க நிறுவனங்கள் நேரடியாக வேலைக்கு அமர்த்துவது, இரண்டாவது பிரிவில் இந்திய நிறுவனங்கள் தங்கள் அமெரிக்க வாடிக்கையாளர்களின் தேவைகளை முடித்துத்தரும் வகையில் தங்கள் நிறுவன ஆட்களை அனுப்புவது, மூன்றாவது பிரிவாக அமெரிக்காவில் இருக்கும் வேலைவாய்ப்பு ஏஜென்சிகள் வழியாக எனப் பலவாகிலும் இந்திய மென்பொறியாளர்கள் அமெரிக்க மண்ணிற்கு வந்து சேர்கின்றனர். ஒரு கட்டத்தில் அமெரிக்காவில் குடியேற H-1B விசா ஒரு வழியாகக் கருதப்பட்டு திறமையில்லாதவர்கள் கூட ஏஜென்சிகளுக்கு நிறைய பணம் கொடுத்து அமெரிக்கா வருவதும் நடந்து கொண்டுதான் இருக்கிறது.
வெளிநாட்டுப் பணியாளர்களினால் அமெரிக்கர்களின் வேலைவாய்ப்புகள் பறிபோவது பற்றிய முணுமுணுப்பும் பல்வேறு அரசியல் மற்றும் சமூக தளங்களில் விவாதங்கள் எழத்துவங்கின. 1998இல் க்ளிண்ட்டன் ஆட்சி காலத்தில் H-1B விசாக்களின் எண்ணிக்கை 65000ல் இருந்து 115,000 உயர்த்தப்பட்டு பின்னர் படிபப்டியாகக் குறைக்கப்பட்டு 2001இல் பழைய 65000 எண்ணிக்கைக்கே திரும்பியது. லாபநோக்குடன் இயங்கிய அமெரிக்க நிறுவனங்களுக்கு, வருடத்திற்கு 65000 பணியாளர்களுக்குத்தான் விசா தரப்படும் என்கிற அரசின் கட்டுப்பாடுகள் பெரும் இடைஞ்சலாக இருந்தது.
தகுதியான அமெரிக்கர்கள் கிடைக்காவிட்டால் மட்டுமே அந்த வேலைகளுக்கு H-1B ஆட்களைப் பணியமர்த்த வேண்டும் என்கிற அரசின் கட்டுப்பாடு, அத்துடன் தங்களிடம் இருக்கும் வேலைகளுக்கு ஏற்ப கூடுதல் H-1B ஆட்கள் கிடைக்காத நிலையில் அமெரிக்க நிறுவனங்கள் தங்களுடைய வேலைகளை Business process outsourcing செய்ய ஆரம்பித்தன. இதனால் உள்ளூர் அமெரிக்கர்களின் வேலைவாய்ப்புகள் பெருமளவில் பறிபோக ஆரம்பிக்க உள்ளூர் தொழிற்சங்கங்களும், அரசியல்வாதிகளும் விழித்துக் கொண்டனர். இதைச் சரியான முறையில் பயன்படுத்திக் கொண்டவர் தற்போதைய அதிபரான ட்ரம்ப்.
அதிபர் தேர்தலின் போது ட்ரம்ப் முன்வைத்த அமெரிக்கத் தேசியம், ‘Buy American, Hire American’, ‘America First’ போன்ற தேர்தல் முழக்கங்கள் பெருமளவு அமெரிக்கர்களுக்குப் பிடித்துப் போனது. பதவிக்கு வந்த நாள் முதல் நாட்டை விட்டு வெளியேறிய வேலைவாய்ப்புகளை மீண்டும் கொண்டு வருவது. உள்நாட்டில் அமெரிக்கர்களுக்கான வேலைவாய்ப்புகளை உறுதி செய்வதற்காக வெளிநாட்டிலிருந்து வேலைக்கு வருவோருக்கான கட்டுப்பாடுகளை அதிகரிப்பது என ட்ரம்ப் காட்டும் மும்முரத்தில் பெருமளவு பாதிப்புக்குள்ளானது இந்தியர்கள்தான்.
முதற்கட்டமாக H-1B பணியாளர்களின் மனைவி மற்றும் கணவர்களின் வேலைவாய்ப்புகளைப் பறிக்கும் திட்டம் விரைவில் அமலுக்கு வருமெனத் தெரிகிறது. இதனால் ஒரு லட்சத்திற்கும் அதிகமான இந்தியர்கள் குறிப்பாக பெண்கள் பாதிப்புக்கு உள்ளாவார்கள் என ஒரு புள்ளி விவரக்கணக்குகள் தெரிவிக்கிறது.
ஏப்ரல் 18ஆம் தேதி அதிபர் டிரம்ப் கையொப்பமிட்ட, ‘Buy American Hire American’ என தலைப்பிடப்பட்ட நிர்வாக உத்தரவில் தற்போது நடைமுறையில் இருக்கும் குடியேற்ற சட்டங்களில் செய்ய வேண்டிய தேவையான மாற்றங்களைப் பரிந்துரைக்குமாறு பல்வேறு அரசு நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளார். இந்தப் பரிந்துரைகள் மிகக் கடுமையான நடைமுறைகளை உள்ளடக்கியதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்கர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்குவது, மிக மிகத் திறமையான வெளிநாட்டினருக்கு மட்டுமே விசா வழங்குவதுதான் இந்த உத்தரவின் அடிப்படை நோக்கமாகப் பார்க்கப்படுகிறது.
ட்ரம்ப்பின் இந்த நடவடிக்கைக்கு உள்நாட்டில் பெருமளவு வரவேற்பு கிடைத்திருக்கிறது. இந்த நடவடிக்கை முழுமை பெற்று நடைமுறைக்குவர சில காலம் ஆகலாம். ஆனால் அது இந்தியர்களுக்கு சாதகமாய் இருக்காது என்பது மட்டும் உண்மை.
குடியரசுக்கட்சியின் Chuck Grassley மற்றும் ஜனநாயகக் கட்சியின் Dick Durbin போன்றவர்கள் வெளிநாடுகளிலிருந்து பல லட்சங்கள் செலவு செய்து மேற்படிப்பிற்காக அமெரிக்கா வரும் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்குவதோடு , லாட்டரி முறையில் விசா வழங்குவதை தடை செய்து திறமையானவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்க வலியுறுத்துகிறார்கள். குடியரசுக்கட்சியின் Darrell Issa அறிமுகப்படுத்தியுள்ள ‘Protect and Grow American Jobs Act’ இல் உள்ளூர் மக்களின் வேலை வாய்ப்பினைத் தகர்க்கும் நிறுவனங்களின் மீது கடும் நடவடிக்கைகளை எடுக்கவும் , H-1B விசாவில் வேலை செய்கிறவர்களின் சம்பளமாக 100K வழங்கவும், அதற்குக் குறைவாக வழங்கினால் அவ்வேலைக்கு அமெரிக்கர்கள் கிடைக்கவில்லை என்பதை நிரூபணம் செய்ய வேண்டுமெனவும், லாட்டரி முறையில் விசா வழங்கிடவும் பரிந்துரைக்கிறார்.
நாடுகளின் அடிப்படையில் வழங்கி வரும் விசா முறையை நீக்கி விடவும், புதிதாகத் தொழில் செய்ய முனைவோருக்கு இருபது சதவிகித விசா வழங்கிடவும், அமெரிக்கப் பல்கலைக்கழகத்தில் பயிலும் வெளிநாட்டு மாணவர்களுக்கு எளிதில் வேலை வாய்ப்பும், நிரந்தர குடியுரிமை கிடைக்க வழி வகுக்கவும் ஆவனச் செய்ய குடியரசுக்கட்சியின் Zoe Lofgren அறிமுகப்படுத்தியுள்ள ‘High-Skilled Integrity and Fairness Act of 2017’இல் பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது. இப்படி அமெரிக்க அரசியல் மற்றும் அறிவு தளத்தில் இயங்குவோர் அனைவரும் தற்போதைய H-1B விசா நடைமுறைகளுக்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்டிருக்கின்றனர். இது வரும்காலத்தில் இந்தியர்களுக்கு பெரும் பின்னடைவாக இருக்கப்போவது உறுதி.
இப்போதே அமெரிக்காவில் இயங்கிவரும் இந்திய மென்பொருள் நிறுவனங்கள் ட்ரம்ப் அரசின் நிர்பந்தங்களுக்குப் பணிந்து பெருமளவில் அமெரிக்கர்களைத் தங்கள் நிறுவனங்களில் பணியமர்த்தத் துவங்கிவிட்டனர். இதுவரை இது தொடர்பில் இந்திய அரசு எந்தவிதமான உறுதியான நடவடிக்கையும் எடுத்திருப்பதாகத் தெரியவில்லை. இனியாவது காலம் தாழ்த்தாமல் இந்திய அரசு உயரிய மட்டத்தில் அமெரிக்க அரசுடன் பேச்சுவார்த்தைகள் மற்றும் உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளாவிட்டால் இந்திய இளைஞர்களின் அமெரிக்கக் கனவு..
கனவாகவே கலைந்துவிடும்.
– லதா