Shadow

பவித்ர் பிரபாகர் – சிலந்தியால் கடிப்படாத இந்திய ஸ்பைடர் மேன்

உலகெங்கிலும் உள்ள பார்வையாளர்கள் ‘ஸ்பைடர் மேன்: அக்ராஸ் தி ஸ்பைடர்-வெர்ஸ்’ படத்திற்காக ஆவலுடன் காத்திருக்கும் நிலையில், இந்திய ஸ்பைடர் மேனைக் காணும் ஆவலில் இந்திய ரசிகர்கள் உற்சாகத்துடன் உள்லனர். இப்படத்தில் முதல் இந்திய ஸ்பைடர் மேன் பவித்ர் பிரபாகர் அறிமுகமாகிறார். மேலும் அவருக்கு இந்தி மற்றும் ஆங்கிலத்தில் குரல் கொடுக்கிறார் இந்தியக் கிரிக்கெட் வீரர் ஷுப்மான் கில்.

ஸ்பைடர் மேனின் அசல் இந்தியப் பதிப்பை, ஷரத் தேவராஜன், சுரேஷ் சீதாராமன், ஜீவன் ஜே. காங் ஆகியோரால் ‘ஸ்பைடர் மேன்: இந்தியா காமிக் புத்தக’த்தில் ஜனவரி 2005 இல் அறிமுகப்படுத்தப்பட்டது. இப்போது இந்திய ஸ்பைடர் மேன் முதல் முறையாகப் பெரிய திரையில் தோன்றுகிறார்.

மல்டிவெர்ஸில், பவித்ர் பிரபாகர் மற்ற ஸ்பைடர் மேன்களில் இருந்து எப்படி வித்தியாசமானவர் என்பதைத் தெளிவுப்படுத்தினார் இயக்குநர் கெம்ப் பவர்ஸ். அவர், “பவித்ரின் சக்திகள் மந்திரத்தின் மூலம் வந்தது. எனவே அவர் கதிரியக்க சிலந்திகளால் கடிக்கப்பட்ட மற்ற ஸ்பைடர் மனிதர்களிடமிருந்து முற்றிலும் வேறுபட்டவர். அவர் உண்மையில் ஒரு மாய ஷாமனிடமிருந்து தனது சக்திகளைப் பெற்றார். பல ஸ்பைடர் மேன்களைப் போலவே, அவர் ஒரு இழப்பைச் சந்திக்க வேண்டியிருந்தது. அவருடைய விஷயத்தில் அது அவரது மாமாதான். ஆயினும்கூட, அவர் திரைப்படத்தில் வரும் மிகவும் நம்பிக்கையான கதாபாத்திரங்களில் ஒருவர். தனது கோப்பை எப்பொழுதும் பாதி நிரம்பியுள்ளது என வாழ்க்கையை மிக எதிர்மறையாக அணுகும் தன்னம்பிக்கை நிறைந்த பாத்திரம். அவர் மைல்ஸின் சமகாலத்தவராக வருகிறார்” என்றார்.

சோனி பிக்சர்ஸ் என்டர்டெயின்மென்ட் இந்தியா, ஆங்கிலம், ஹிந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், குஜராத்தி, மராத்தி, பஞ்சாபி மற்றும் பெங்காலி ஆகிய மொழிகளில் ‘ஸ்பைடர் மேன்: அக்ராஸ் தி ஸ்பைடர்-வெர்ஸ்’ திரைப்படத்தை ஜூன் 1, 2023 அன்று திரையரங்குகளில் மட்டுமே வெளியிடுகிறது.