Shadow

இந்தியாவின் முதல் தபால் மனிதன் – ‘ஹர்ஹாரா’ ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்

கலர்ஃபுல் பீட்டா மூவ்மென்ட் (Kalorful Beta Movement) தயாரிப்பில், நடிகர் இயக்குநர் ராம் அருண் காஸ்ட்ரோ, அவரே நடித்து இயக்கியிருக்கும் ஹர்காரா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. இப்படத்தில் மற்றொரு நாயகனாக காளி வெங்கட் நடித்துள்ளார். தபால்காரர்களைக் கௌரவப்படுத்தும் வகையில் உருவாகியிருக்கும் இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரைத் தமிழ்நாடு தபால் துறை தலைமை அதிகாரி வெளியிட்டுள்ளார்.

நாயகனின் வித்தியாசமான தோற்றத்துடன், இந்தியாவின் முதல் போஸ்ட்மேன் எனும் டேக்லைனுடன், வெளியாகியிருக்கும் “ஹர்காரா” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

வி1 மர்டர் கேஸ் படம் மூலம் நாயகனாக அறிமுகமான ராம் அருண் காஸ்ட்ரோ இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். இந்தியாவின் முதல் தபால் மனிதனின் கதையைச் சொல்லும் பின்னணியில் ஓர் அருமையான கமர்ஷியல் படமாக இப்படம் உருவாகியுள்ளது.

தற்காலத்தில் டிஜிட்டல் வசதிகள் எதுவுமே இல்லாத ஒரு மலைக்கிராமத்திற்குச் செல்லும் போஸ்ட்மேன் அங்குப் படும் அவஸ்தையும், அங்கு வாழும் மக்களின் வாழ்க்கையும், பின்னணியாகக் கொண்டு இப்படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது. இதன் பின்னணியில் இந்தியாவின் முதல் போஸ்ட்மேன் பற்றிய ஆச்சரிய அத்தியாயமும் படத்தில் உள்ளது.

படத்தினால் ஈர்க்கப்பட்டு இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கைத் தமிழ்நாடு தலைமை போஸ்ட் மாஸ்டர் ஜெனரல் திருமதி சாருகேசி வெளியிட்டார். அவர் படம் குறித்து, “பல நூற்றாண்டுகளாகத் தகவல் தொடர்புக்கான ஒரு ஊடகமாக சேவை செய்யும் அஞ்சல் துறை, நமது குடிமக்களின் இதயங்களில் எப்போதும் சிறப்பு இடத்தைப் பிடித்துள்ளது. தபால்காரர்களின் சிறப்பான பங்களிப்பைக் கெளரவிப்பதற்கும், அவர்களின் பயணம், சவால்கள் மற்றும் வெற்றிகள் குறித்து வெளிச்சமிட்டுக் காட்டுவதற்கும் இந்தத் திரைப்படம் ஒரு வாய்ப்பாக அமையும். இப்படிப்பட்ட ஒரு சிறந்த படைப்பு மிகப் பெரிய வெற்றியடைய எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த சினிமா முயற்சியானது, நமது அஞ்சல் துறையின் முக்கியத்துவம் மற்றும் தபால்காரர்களால் ஆற்றப்படும் தன்னலமற்ற சேவையைப் பற்றி இன்றைய தலைமுறைக்குத் தெரியப்படுத்தும்” என்றார்.

இயக்குநர் ராம் அருண் காஸ்ட்ரோ மற்றும் காளி வெங்கட் இப்படத்தில் நாயகர்களாக நடித்துள்ளனர். நாயகியாக கௌதமி நடித்துள்ளார். பிச்சைக்காரன் ராமமூர்த்தி, ஜெயப்பிரகாஷ் ராதாகிருஷ்ணன் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். முழுக்க முழுக்க தேனி அருகில் மலைக் கிராமங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது.

தொழில்நுட்பக் குழு:

தயாரிப்பு நிறுவனம் – KALORFUL BETA MOVEMENT
தயாரிப்பு – N.A.ராமு / சரவணன் பொன்ராஜ்
இணை தயாரிப்பு – அரவிந்த் தர்மராஜ் / தீனா
இயக்கம் – ராம் அருண் காஸ்ட்ரோ
ஒளிப்பதிவு – பிலிப் R. சுந்தர் / லோகேஷ் இளங்கோவன்
இசை – ராம் சங்கர்
படத்தொகுப்பு – டானி சார்லஸ்
கலை – VRK ரமேஷ்