“என் படத்துல, ஒண்ணு, நாயகன் கத்திப் பேசணும். இல்லன்னா, கத்தியால பேசணும்.”
– இயக்குநர் முத்தையா
நீதி, நேர்மை, நியாயம். அதற்காக அடி, வெட்டு, குத்து என களத்தில் இறங்கி வெளுக்கிறார் காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம். நீதி, நேர்மைக்காக அடிக்கிறார் எனப் பார்த்தால், ரிஷி ரித்விக்கை அடித்துவிட்டு அவரது கூலிங் கிளாஸை எடுத்துக் கொள்கிறார். ‘என்னய்யா உன் நியாயம்?’ என யோசித்தால், ‘என்னை அடிச்சுட்டான்’ என ரிஷி ரித்விக்கும் அவரது அப்பாவை மறுபடியும் சண்டைக்கு அழைத்து வருகிறார். ‘என்னங்கடா இது சின்னப்புள்ளத்தனமா இருக்கே!’ என பார்வையாளர்கள் நெற்றியைச் சுருக்க, காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கமோ அவரையும் சீரியசாகப் போட்டு வெளுக்கிறார். அவர் ஃப்ரேமில் சண்டை செய்து கொண்டேயிருக்க, படத்தில் மூன்று மூத்த வில்லன்கள், அவர்களது வாரிசுகளாக ஏழு இளைய வில்லன்கள்.
தமிழ்ச்செல்விக்கு 100 ஏக்கர் நிலமும், 6 பெரிய வீடுகளும் உள்ளன. அதற்காக அவரை, வேறு யாரும் கல்யாணம் செய்து கொள்ளாமல் பார்த்துக் கொள்கின்றனர் வில்லன்கள். சொத்துக்காக, நிச்சயம் செய்து விட்டுச் செல்லும் மணமகன்களைக் கொலை செய்கின்றனர். எத்தனை பேர் வந்தாலும் அடிக்கும் காதர் பாட்சா, தமிழ்ச்செல்வியைக் கல்யாணம் செய்து கொண்டு, வில்லன்களுக்குச் சொத்தையும் எழுதிக் கொடுத்துவிடுகிறார். ஆனாலும், கொலைவெறி அடங்காமல் உள்ளனர் வில்லன்கள். ‘ஏம்ப்பா! முக்கால்வாசி படத்துக்குச் சொத்து, சொத்துன்னு இல்ல அலைஞ்சீங்க? அதான் கிடைச்சிடுச்சே! அப்புறம் ஏன் இந்த வில்லத்தனம்?’ எனக் கேட்டால், “Once a villain always a villain” என மீசையை முறுக்கிக் கொண்டே உள்ளார்கள். கேரக்டர் ஆர்க்கை மெயின்டெயின் செய்கிறார்களாம். ‘அவன் தான் அடிக்கிறான்னு தெரியுது இல்ல? அப்புறமும் ஏன்டாப்பா இப்படி?’ என வில்லன்களைப் பார்த்து பரிதாப்படத்தான் முடிகிறது. ‘புள்ளக்குட்டிங்கள படிக்க வைங்க’ என முப்பத்தொரு வருஷத்துக்கு முன்னாடியே பெரிய தேவர் மகன் சக்திவேல் தேவர் சொன்னார். ஆடுகளம் நரேன், B.S.அவினாஷ், மதுசூதன ராவ் ஆகியோர் கேட்டிருக்கலாம்.
நாயகனாக ஆர்யா, நாயகியாக சித்தி இத்னானி, குணசித்திர வேடத்தில் சிங்கம்புலி ஆகியோர் நடித்துள்ளனர். வேட்டியைக் கழட்டி விட்டு ட்ரெளசருடன் சண்டையிடும் பாத்திரத்தில், சைக்கிளிங் செய்து இறுகியுள்ள ஆர்யாவின் தொடையை அழகாகக் காண்பித்துள்ளார் ஒளிப்பதிவாளர் வேல்ராஜ். இடைவேளையில், வெடிகுண்டு வெயிலானாக அறிமுகமாகும் தமிழ் மிரட்டலாக அறிமுகமாகிறார். பார்க்க ஆள் ஒரு சைஸா, மார்க்கமாக இருப்பதால் பெரிய சம்பவம் செய்வார் எனப் பார்த்தால், அவருக்கும் யோசிப்பது, திட்டம் தீட்டுவது எல்லாம் அலர்ஜி போல! இந்தப் படத்தின் வில்லன்களுக்கு நான் சொல்லிக் கொள்ள பிரியப்படுவது ஒன்றே ஒன்றுதான். படிக்காவிட்டாலும் பரவாயில்லை, தமிழ் சேனல்களில் வரும் சீரியலைப் பார்த்தாலே, அடுத்தவன் குடும்பத்தை எப்படி அழிக்கலாம் என்ற வில்லத்தனம் தானாகவே உங்களுக்குள் ஊற்றெடுக்கத் தொடங்கியிருக்கும். முத்தையாவின் வில்லன்கள், கத்தியை மட்டும் தீட்டிக் கொண்டிராமல் கொஞ்சம் புத்தியையும் தீட்டுவார்கள் என நம்புவோமாக! (எதார்த்தம் எனப் பார்த்தால், Money Heist பார்த்துவிட்டு, அது போல் தரமான சம்பவங்களை முயற்சி செய்யவே தொடங்கிவிட்டார்கள் நம்ம ஆட்கள். தமிழ் சீரியல் பார்த்தால் வில்லித்தனம் வரும் என்ற பிலாக்கணமே சங்ககாலத்து பூமர்த்தனமான விமர்சனம்).
“இங்க நடக்கிற எல்லாப் பிரச்சனையும் பொண்ணுக்காகவும் மண்ணுக்காகவும்தான். மண்ணுக்காக மகாபாரதமும், பொண்ணுக்காக ராமாயணமும் நடந்துடுச்சு” என்ற வாய்ஸ்-ஓவருடன் படம் தொடங்குகிறது. அதற்கு ஏற்றாற்போல், முதற்பாதி ஒரு கதை, 6 வில்லன்கள், இரண்டாம் பாதியில், வேற கதை, வேற வில்லன்கள். முதல் கதை மண்ணுக்கானது, இரண்டாம் கதை பெண்ணுக்கானதாக இருக்கும் எனப் பார்த்தால், அது பதவி வெறிக்கான கதையாக இருக்கிறது. முன்னாடியெல்லாம் தயாரிப்பாளர்களிடம்தான் ஒரு கதையைச் சொல்லிவிட்டு, வேறொரு கதையை எடுத்து வைப்பார்கள் இயக்குநர். இப்பொழுது எல்லாம், அந்த வித்தையை நேரடியாகப் பார்வையாளர்களிடமே காட்டத் தொடங்கிவிட்டனர் போலும். ப்ரீக்வெல், சீக்வெல் என இரண்டு பாகங்களாகப் பிரிக்க வேண்டிய படத்தை அழகாக ஒரே பாகத்தில் முடித்து அசத்தியுள்ளார் இயக்குநர் முத்தையா.