Shadow

கோப்ரா – தமிழ் பேசும் இர்ஃபான் பதான்

‘சீயான்’ விக்ரம் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘கோப்ரா’ படத்தின் பாடல்கள் வெளியிட்டு விழா சென்னையில் உள்ள பிரம்மாண்டமான பீனிக்ஸ் சிட்டி வணிக வளாகத்தில் அமைக்கப்பட்ட பிரத்தியேக அரங்கத்தில் நடைபெற்றது.

இயக்குநர் அஜ்ய ஞானமுத்து, “இர்ஃபான் பதானைச் சந்தித்து கதையைச் சொன்னபோது, ‘என்னால் நடிக்க முடியுமா?’ எனக் கேட்டார். ‘உங்களால் முடியும்’ என்று நம்பிக்கை அளித்தேன். அத்துடன் அவருக்காகத் தமிழ் மொழி பயிற்சியாளர் ஒருவரை நியமித்து, தமிழை எப்படி உச்சரிக்க வேண்டும் என்று கற்பித்தோம். உடன் நடிப்பு பயிற்சியையும் அளித்தோம். சில தினங்களிலேயே தமிழ் மொழி உச்சரிப்பைத் தெளிவாக உச்சரித்து நடித்து அசத்தினார்.

‘கே.ஜி.எஃப்’ படத்தின் முதல் பாகம் வெளியாகி இருந்த நிலையில் நடிகை ஸ்ரீநிதி ஷெட்டியைச் சந்தித்தோம். அந்தப் படத்திற்கும், ‘கோப்ரா’ படத்திற்கும் முற்றிலும் வித்தியாசமான கதாபாத்திரம். அவரின் வேறு காணொளிகளைக் கண்டு, அவரின் திறமைக்காகவே இதில் நடிக்க ஒப்பந்தம் செய்தோம்.

‘யாரை போல் ஆக வேண்டும்?’ எனக் கேட்டால், ‘இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமாரைப் போல் தொடர்ந்து வெற்றியை அளித்த இயக்குநர் போல் ஆக வேண்டும்’ என சொல்வேன். இதன் காரணமாகவே இந்தப் படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் அவரிடம் நடிக்க கேட்டேன். அவரும் ஒப்புக்கொண்டு நடித்திருக்கிறார்” என்றார்.

விக்ரம், “இர்ஃபான் பதான் எப்போதும் எனக்கு ஹீரோ தான். அவர் பெஸ்ட் ஆல்ரவுண்டர். இந்தப் படத்திலும் ஏராளமான சிக்ஸர்களை அடித்திருக்கிறார். மலையாள நடிகர் ரோஷன் மேத்யூ இந்தப் படத்தில் வித்தியாசமான வில்லன் வேடத்தில் நடித்திருக்கிறார். ஆனந்த்ராஜ், கே.எஸ்.ரவிக்குமார், மீனாட்சி கோவிந்தராஜன், மிருணாளினி ரவி, ரோபோ சங்கர் என ஏராளமான நட்சத்திரங்களுடன் பணியாற்றியது மறக்க இயலாத மகிழ்வான அனுபவம்.

இந்த விழாவிற்கு வருகை தந்திருக்கும் துருவ் விக்ரம் அவர்களுக்கு நன்றி. மகான் படத்தில் நன்றாக நடித்திருந்தீர்கள். அதற்காக உங்களது தந்தை பெருமை கொள்வார் என நினைக்கிறேன்” என்றார்.