Shadow

காலா நிகழ்த்தும் வண்ணக்கோலங்கள்

Kaala's unhappen magic

என்னுடைய அண்மைக்கால கொள்கையில் ஒன்றாக, இயன்றளவு கேளிக்கைக்குக் குறைவாகப் பணம் செலவழிப்பது என்று எண்ணத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறேன். விலையில்லாமலே எவ்வளவோ சிறந்த புத்தகங்களும், நல்ல எழுத்துகளும், தரமான ஆவணப்படங்களும் காணக் கிடைக்கின்ற இக்காலத்தில், ஏனோ நாம் peer pressure-இல் அதிக பணம் செலவழித்து, புதிய படங்களைப் பார்க்க ஓடுகிறோம். அதுவும் ரஜினிகாந்த் போன்ற செல்வாக்கான, பெரும் ஆளுமைகள் நடித்த திரைப்படம் என்றால் நம் ஆவல் கட்டுக்கடங்காமல் பெருகி விடுகிறது. தற்போது வெளியாகியிருக்கும் ‘காலா’ திரைப்படத்தைப் பற்றி நிறைய எதிர்பார்ப்புகள் பெருகி வர, திரைப்படத்தின் இயக்குநர் பா. ரஞ்சித்தின் பேட்டிகளும், முந்தைய படங்களும் முக்கிய காரணமாக அமைந்துவிட்டது.

‘நான் திரைப்படம் எடுக்க வந்திருப்பதே, நான் நம்பும் கருத்தியலை, பொதுமக்களுக்கான வெளியில் பேசுவதற்காகத்தான்’ என்று தெளிவாகக் குறிப்பிடுகிறார். இதுதான் என் போன்றோரின் ஆர்வத்தை அவர் படைப்புகளில் குவிக்க வைக்கிறது. திரை ஊடகத்தை இப்படியானதொரு தெளிவான நோக்கத்துடன் பயன்படுத்துவதன் மூலம்தான் காலத்தில் அழியாத படைப்புகள் உருவாகியிருக்கின்றன. தற்போதைய தமிழக அரசியல் சூழலில், ரஜினிகாந்த் அடுத்ததொரு பெரிய நகர்விற்குத் தன்னைத் தயார்படுத்திக் கொள்ளும் நிலையில், இந்தத் திரைப்படம் அதிக முக்கியத்துவத்தைப் பெறுகிறது.

காலா திரைப்படத்தின் அரசியல் நோக்கை முதலில் பார்த்துவிடலாம். திரைப்பட அழகியலை எல்லாம் முந்தி, துருத்திக் கொண்டு இருப்பது அதுதான். இந்தியத் தேசிய அரசியல் வெளியில் இந்துத்வக் கருத்தியல் ஒரு மிகப்பெரும் polarization (ஒருமுனைப்படுத்துதல்) உருவாக்கி வரும் காலத்தில், ரஞ்சித் அதற்கு எதிரானதொரு அறிக்கையைத் தன் திரைப்படத்தின் வாயிலாக முன்வைக்கிறார். ‘ஒற்றைத்தலை இராவணன்’ என காலா சித்திரிக்கப்படுகிறார். காலாவை முற்றிலும் அழிக்க முனையும் இறுதிக்காட்சியில் இராமாயண போரின் உபன்யாச உரையைப் பின்னணியில் வைத்து உள்ளங்கை நெல்லிக்கனியென, தன்னுடைய அரசியல் நிலைப்பாட்டைக் காட்டிவிடுகிறார். இதிகாசங்கள் வழியே பல்வேறு பார்வைகளை முன்வைக்கும் போக்கில், ஒடுக்கப்பட்டோருக்கான அடையாளமாக, அசுரர்களின் வரலாற்றை முன்வைப்பதும் ஒரு தரப்பாகப் பார்க்கப்படுகிறது. உண்மையில், இந்தியாவில் வழங்கப்படும் தொல் இதிகாசங்கள் இரண்டின் நாயகர்களும் காலாக்கள்தான் (கருப்பர்கள்தான்). ஆனால் நடைமுறை பொதுpபுத்தியில் இராமனும் கிருஷ்ணனும் வேறுவகையாக அடையாளப்படுத்தப்படுவதால், இராவணன் பாத்திரம் மாற்று அரசியலில் முக்கியத்துவம் பெறுகிறது.

“The Ramayana story is one of Aryan expansion to the south” என்று ஜவகர்லால நேரு, தன்னுடைய இந்தியாவைக் கண்டறியும் புத்தகத்தில் குறிப்பிடுகிறார். உலகின் முதன்மை நாகரிகமான சிந்துசமவெளி நாகரிகம் திராவிடர்களுடையது என்றும், ஆரியர்களின் தொடர் வருகையால், திராவிடர்கள் தெற்குபக்கம் இடம் மாறினர் என்றும், அதன் தொடர்ச்சியாக ஆரியர்களின் தெற்கு நோக்கிய நகர்வைக் குறிக்கும் கதைகளின் ஒன்றாக நேரு இராமாயணத்தைக் குறிப்பிடுகிறார். அவருக்கு முன்னாலான பல கருத்துருவாக்கங்களைத் தொகுப்பாக அந்தப் புத்தகத்தில் முன்வைக்கிறார். இத்தகைய கருத்துருவாக்கத்தின் இருபத்தோராம் நூற்றாண்டின் நீட்சியாக காலா திரைக்கதை இருக்கிறது. தங்கள் நிலத்தை இழந்து துரத்தப்பட்ட இனத்தின் பிறிதொரு அனுபவமாக தாராவி தமிழர்களின் நிலையைக் காட்டுகிறது.

ரஞ்சித் குறிப்பிடுவது போல, அவர் தன்னுடைய உரையாடலை, பொதுத்தளத்தில் முன்வைக்க திரைப்பட ஊடகத்தைக் கொண்டிருக்கிறார் என்றால், அதற்கு அடிப்படையான ஒரு கதையாடலை எடுத்துக் கொண்டிருக்கலாம். ஏனோ, மரியோ பூசோ காலத்து காட்ஃபாதரின் தொடர்ச்சியாக, எண்ணற்ற முறைகள் சொல்லப்பட்ட கதைக்களனை எடுத்துக் கொண்டிருக்கிறார். அதன் அழகியல் மற்றும் சொல்லப்பட்ட விதத்திலாவது புதுமை எதுவும் இருக்கும் என்றால், பல காலமாக பார்த்து புளித்துப்போன அதிநாயக பிம்பக் கட்டமைப்பை, ரசிகர்கள் குழாமைக் குறிவைத்து, விசில்களை வாரிக் குவிக்கும் க்ளோரிஃபிகேஷன் காட்சிகள் நிறைந்த காட்சியமைப்புகள் நம்மை ஏமாற்றத்தில் ஆழ்த்துகின்றன. யதார்த்த காட்சிகளும், அதீத நாயகபாவனையை வெளிப்படுத்தும் காட்சிகளும் முன்னும்பின்னுமாக ஊசலாட்டம் ஆடுகின்றன. ஒரு குடையைக் கொண்டு பத்து பதினைந்து அடியாட்களைப் பந்தாடி கொலை செய்யும் அதிதீர சண்டைக் காட்சி ஓர் எடுத்துக்காட்டு.

திருநெல்வேலியிருந்து, தாராவிக்குப் புலம்பெயர்ந்து வேரூன்றிய வேங்கையன் குடும்பம், அவருக்கு அடுத்த தலைமுறையான கரிகாலன் காலத்தில் நெல்லை வட்டார மொழியில் இயல்பாகப் பேசுவது சரி. மூன்றாம் தலைமுறையினத்தவரான, மும்பையில் பிறந்து வளர்ந்த செல்வனும் லெனினும் அதே அளவு கலப்படமில்லா வட்டார மொழியைப் பேசுவதும், நாலாவது தலைமுறையினத்தவரான கரிகாலனின் பேரப்பிள்ளைகள் பொதுவான தமிழில் பேசுவதும் திரைப்பட உருவாக்கத்தில் முழுமையான சிந்தனை ஓட்டம் ஏற்படவில்லை என்பதைக் காட்டுகிறது. தாராவிக்கு காலா சேட்டைச் சந்திக்க வரும் ஹரி தாதாவுடனான மோதல் காட்சி அதீதபடுத்துதலாக இருக்கிறது. பதட்டத்தை வரவழைக்க வேண்டிய காட்சி, மாறாக ஆயாசத்தைத்தான் கூட்டுகிறது.

ஆனால், ஈஸ்வரி ராவுடன் காரில் வந்தபடியே, தன்னுடைய பராக்கிரமத்தைப் பற்றிப் பீற்றிக்கொண்டு வரும் காலாவின் காரை விபத்திற்குள்ளாகும் காட்சி உறைய வைக்கிறது. ஈஸ்வரி ராவின் நொடிக்கொரு முறை மாறும் முகபாவனைகளுடனான, யதார்த்த நடிப்பு, காட்சிகளுக்கு மிகப்பெரும் பலம். அந்தப் பாத்திரத்தின் மறைவு காலாவின் குடும்பத்தாரை விட பார்வையாளர்களுக்கு பெரும் இழப்பாக அமைந்துவிட்டது.

சில வாரங்களுக்கு முன்னர் ரஜினிகாந்த், சென்னையில் நிகழந்த ஓர் ஆர்ப்பாட்டத்தில் நிகழ்ந்த ஒரு வன்முறைச் சம்பவத்தை முன்னிறுத்தி, தன்னுடைய அரசின்பாற்ப்பட்ட பற்றின் வெளிப்பாடாக ‘சீருடை அணிந்த போலீசாரை, அவருடைய பணிநேரத்தில் தாக்கப்படும் வன்முறையைக் கடுமையாகக் கண்டிக்கிறேன்’ என்று சொல்லியிருந்தார். பிரச்னை என்னவென்றால், அதற்கு ஒரு வாரம் முன்புதான், சீருடை அணிந்திருந்த போக்குவரத்துப் போலீசார், தங்களிடம் வாக்குவாதம் செய்த ஒரு பொதுநபரை, கம்பத்தில் கட்டி வைத்துக் கையை உடைக்க முயலும் வீடியோ ஒன்று வைரலாகச் சுற்றிக் கொண்டிருந்தது. இரண்டு வன்முறைச் சம்பவங்களையும் கண்ணுற்ற பல்லாயிரக்கணக்கானோர்க்கும், ரஜினிகாந்த் ஏன் ஒரு தரப்பிலான வன்முறையை மட்டும் அதிதீவிரமாக கண்டிக்கிறார் எனக் கேள்வி எழும்பும். போலீசாரைத் தாக்கியவரைக் கண்டுபிடித்துக் காணாமல் போக்கக் கூடிய தீவிரமும் வலிமையும் கொண்ட அரசு, பொதுவில் விதிகளை மீறித் தாக்குதலில் இறங்கும் போலீசைப் (இயன்றவரை) பாதுகாக்கத்தான் தலைப்படும். போலீசார் விதிகளை மீறும்போது பொதுமக்களிடமிருந்தோ, அல்லது அரசியல் கட்சிகள் தரப்பிலிருந்தோ செய்யக்கூடிய சரியான செயலைப் பற்றி காலா அழுத்தமாக சொல்கிறது. ரஜினிகாந்த்திற்கு அது புரிந்திருக்குமா என்பது வேறு கேள்வி.

இறுதிக்காட்சியின் சர்ரியலிஸத்தன்மைக்கு இயக்குநர் ரஞ்சித்திற்கு ஒரு பெரும் பூங்கொத்து. அந்த வண்ணஜாலங்கள் வழியே வருங்காலத்தின் பிரகாசத்தைப் பற்றிய நம்பிக்கை நம்மை வந்தடைகிறது. தன்னுடைய விரிந்த வணிக சந்தையைக் கொண்டு ஒரு மாறுபட்ட பொலிடிகல் ஸ்க்ரிப்ட்டில் நடிக்க முன்வந்ததற்கு ரஜினிக்கும் ஒரு பூங்கொத்து.

அடிப்படையில் ஒரு குறை என்னவென்றால், தாராவி தமிழர்கள் என்பது ஒரு புலம்பெயர்ந்த கூட்டம். தாராவியை விட்டு வேறொரு வசதியான இடத்திற்குச் செல்ல நினைக்கும் மகனைப் பார்த்து, ‘தன் வேரை விட்டுப் போகக் கூடாது’ எனக் கரிகாலன் அறிவுரை சொல்லும்போது, வேங்கையன் நெல்லையை விட்டுப் புலம்பெயர்ந்த நிலை பற்றிக் கேள்வி எழுகிறது.

உண்மையில் இது தாராவி தமிழர்களின் நடைமுறை பிரச்னையான நிலப் பட்டா பெறுவதைப் பற்றி பேசுகிறதா என்றால், குழப்பம்தான். பன்னெடுங்காலமாக அப்பகுதியில் வாழ்ந்துவரும் கூட்டத்தினரின் இருப்பை அங்கீகரித்து பட்டா வழங்க வேண்டியது அரசு. கரிகாலன் அல்லது தாராவி மக்கள் தரப்பிலிருந்து அதற்கு என்ன மாதிரியான முயற்சிகள் எடுத்தார்கள் என்பது தெரியவில்லை. ஆனால் செரினா, லெனின் போன்றோர் ஒரு என்ஜிஓ (என நினைக்கிறேன்) மூலமாக முயன்று, ஏதோ ஓர் அரசுத் திட்டத்தின் கீழ் தாராவியை அழகுபடுத்த டெண்டரெல்லாம் கோரி வெற்றி பெறுகிறார்கள். அவர்களை முன்வைத்து ஹரிதாதாவின் கட்டுமான நிறுவனம், தாராவி நிலத்தைத் தனதாக்கிக் கொள்ள சூழ்ச்சி செய்கிறது. தாராவி மக்களுக்கான அடுக்குமாடி குடியிருப்பிற்கான விலையாக அப்பகுதியில் ஒரு கோல்ஃப் மைதானம் ஒன்றை அமைக்க திட்டம் போடுகிறார்கள். இப்படியொரு எளிய சூழ்ச்சியைப் புரிந்து கொள்ள முடியாத தத்திகளாக அந்த என்ஜிஓ-க்களும், அதன் முனைப்பான செயல்வீரர்களான லெனினும் செரினாவும் இருக்கிறார்கள். ஹரிதாதா + அரசின் கூட்டான சூழ்ச்சிக்கு எதிராக கரிகாலன் + மற்றும் தாராவி தமிழர் எவ்வகை தீர்வைக் கோருகின்றனர் என்பதைச் சற்று அழுத்தமாகக் காட்டியிருக்கலாம். வெற்று சவடால் நிறைந்த மோதல் காட்சிகள் அதற்கு பதிலாக திரையை நிறைத்துக் கொண்டிருக்கின்றன.

நிலம் என்பது ஓர் இனத்திற்கான முக்கிய தேவை. அதைத் தெளிவாக சொல்கிற திரைப்படம், போதுமான அழுத்தத்துடனும் அழகியலுடனும் சொல்லியிருந்தால் சிறந்ததொரு படைப்பாக மிளிர்ந்திருக்கும்.

ஸ்ரீதர் நாராயணன்