Shadow

ஜோதி விமர்சனம்

உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் குழந்தைக் கடத்தலை மையப்படுத்திய படம் என்பதால் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது படம். மேலும், படத்தின் முதல் ஏழு நிமிட வீடியோவையே படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

அருள்ஜோதி எனும் பெண்ணின் வயிற்றைக் கிழித்து, ஒரு மர்ம நபர் குழந்தையைக் கடத்திக் கொண்டு செல்கிறார். அந்தப் பெண்ணின் எதிர் வீட்டில், சக்தி சிவபாலன் எனும் காவல்துறை அதிகாரி வசிக்க, அவர் உடனே விசாரணையை மேற்கொள்கிறார். குழந்தை எப்படிக் கிடைத்தது, யார் கடத்தியது என்பதுதான் படத்தின் கதை.

அருள்ஜோதியின் கணவர் அஷ்வினாக, ராட்சசனில் க்றிஸ்டோஃபராக அசத்திய நான் சரவணன் நடித்துள்ளார். ஆனால், இந்தப் படத்தில் அவர் நடிப்பு சொல்லிக் கொள்ளும்படியாக அமையவில்லை. படத்திலேயே மிக மோசமான நடிப்பை வழங்கியிருப்பது இவர் மட்டுமே. எதிர் வீட்டுப் பெண்ணாகவும், காவல்துறை அதிகாரி சக்தி சிவபாலனின் மனைவி ஜானகியாக க்ரிஷா குரூப் நடித்துள்ளார். நாயகி என்று சொல்ல முடியாதபடிக்குத் திரையில் அவரது பாத்திரம் மிகக் குறைவாகவே பயன்படுத்தப்பட்டுள்ளது. குழந்தையை எப்படியாவது மீட்க வேண்டுமென்ற உறுதியுடன் விசாரணை செய்யும் சக்தி சிவபாலன் பாத்திரத்திற்கு நடிகர் வெற்றி கச்சிதமாகப் பொருந்துகிறார்.

படத்தின் நாயகன் வெற்றி என்றாலும், கதையின் நாயகன் என்றால், அது, சமூக அக்கறையுடைய ரங்கா எனும் பாத்திரத்தில் வரும் தயாரிப்பாளர் ராஜா சேதுபதி தான். அவர் நேரடியாகப் பார்த்த ஒரு சம்பவத்தைக் கொண்டே கதையை உருவாக்கியுள்ளார். அந்த சம்பவத்தின் தாக்கம் எந்தளவுக்கு இருந்தது என்பதை அவரது பேச்சுகளில் காண முடிகிறது. திரைப்படத் துறையில் படத்தொகுப்பாளராகப் பணிபுரிந்து வரும் ராஜா சேதுபதியை, அச்சம்பவம், இப்படத்தின் தயாரிப்பாளராக மாற்றியுள்ளது. தனது உதவியாளர் சத்யமூர்த்தியைப் படத்தொகுப்பாளராக இப்படத்தில் அறிமுகப்படுத்தியுள்ளார்.

படம் ஒரு நல்ல த்ரில்லர் அனுபவத்தைத் தருவதற்குப் பொறுப்பெடுத்துள்ளனர் படத்தொகுப்பாளர் சத்யமூர்த்தியும், ஒளிப்பதிவாளர் செசி ஜெயாவும். ‘ஒரு ஆணோட கோபத்தை விட ஒரு பெண்ணோட அமைதி ஆபத்தானது’ என்ற கருத்தாக்கத்தில் நம்பிக்கையுள்ள இயக்குநர் A.V.கிருஷ்ண பரமாத்மா, அதை மையப் பாத்திரமான அருள் ஜோதிக்கு அத்தன்மையைக் கொடுத்துள்ளார்.

குழந்தையைப் பறி கொடுத்த அருள் ஜோதியாக ஷீலா ராஜ்குமார் நடித்துள்ளார். படத்தின் நாயகியாக க்ளைமேக்ஸில் அவர் எடுக்கும் முடிவும் அவதாரமும், படத்தின் முடிவைக் கனமானதாக மாற்றுகிறது. ஆனால், படத்தின் மையமான குழந்தைக் கடத்தலைத் தாண்டி அருள்ஜோதி எனும் தனிப்பட்ட பெண்மணியின் சாகசமாக மாறி விடுகிறது படம்.

குழந்தைக் கடத்தலைப் பற்றிய புள்ளி விவரங்கள் மிகவும் அச்சுறுத்துகின்றன. நாகரீக சமூகத்தில்தான் வாழுகிறோமா என்ற பயத்தை விளைவிக்கிறது. கடத்தப்பட்ட 11000 குழந்தைகளில் 10800 குழந்தைகள் தான் கிடைத்துள்ளன என்கிற செய்தி தரும் வலி மிகவும் ரணமிக்கதாய் உள்ளது. படம் அந்த ரணத்தைக் கடத்தாவிட்டாலும், பெற்றோர்கள் விழிப்புணர்வுடன் இருந்து தங்கள் குழந்தைகளைக் காப்பாற்றிக் கொள்ளவேண்டிய அவசியத்தினை உணர்த்துகிறது.