Shadow

ராட்சசன் விமர்சனம்

Ratsasan-movie-review

கொலை என்று பதற்றத்துடன் கடந்து விட முடியாத அளவுக்கு, மிகக் கொடூரமான முறையில் சித்ரவதை செய்யப்பட்டு பள்ளி மாணவிகள் ஒவ்வொருவராகக் கொலை செய்யப்படுகின்றனர். குலை நடுங்க வைக்கும் கொலைகள் அவை. புராணங்களில், வரும் ராட்சஷர்கள் யாரும் சைக்கோக்கள் கிடையாது. இதில் வரும் சைக்கோவைச் சித்தரிக்க, ராட்சசன் எனும் சொல் சரியயானதுதானா என்பது ஐயமே! சைக்கோவை எஸ்.ஐ. அருண் எவ்வாறு பிடிக்கிறார் என்பதுதான் படத்தின் கதை.

த்ரில்லர் ரசிகர்களுக்குச் செமயான விருந்தளிக்கும் படம். ஆனால் அதே அளவு நடுக்கத்தையும் தருமளவு மிக இன்டன்ஸாக எடுக்கப்பட்டுள்ளது. இந்தளவுக்கு ஒரு படம் எடுக்கப்பட வேண்டியது அவசியம்தானா எனக் கேள்வியெழுமளவு மெனக்கெட்டுள்ளார் முண்டாசுப்பட்டி படத்தின் இயக்குநர் ராம் குமார். ஸ்பைடர் படத்திலும் இப்படிக் காட்சிகள் வரும். ஆனால், கவரில் சுற்றப்பட்டுப் பிடுங்கப்பட்ட பள்ளி மாணவியின் கண் குழிக்குள் இருந்து பூச்சிகள் பறப்பதாக இப்படத்தில் காட்டப்படும் காட்சி, நம் தூக்கத்தைக் கெடுக்கப் போதுமானதாக உள்ளது. முண்டாசுப்பட்டி போன்ற ஒரு ஜாலியான படம் தந்த இயக்குநரிடம் இருந்து இதை எதிர்பார்க்கவே இல்லை. கலை இயக்குநர் கோபி ஆனந்த் உங்கள் நடுக்கத்திற்குப் பொறுப்பேற்றுக் கொள்கிறார்.

ஒரு மாதிரி சைலன்ட் ஸ்பெக்டேட்டராகப் படம் பார்வையாளத்களைக் கட்டிப் போட்டு விடுகிறது. அந்த வேலையைக் கச்சிதமாகச் செய்வது, ஜிப்ரானின் பின்னணி இசை. ஒரு த்ரில்லருக்கான மூடைத் (mood) துல்லியமாக செட் செய்கிறது P.V.ஷங்கரின் ஒளிப்பதிவு. பத்தாம் வகுப்பு மாணவிகளைக் கூட, குறைவான மதிப்பெண் போன்ற விஷயங்களைக் காட்டி அச்சுறுத்திப் பாலியல் தொந்தரவு தரமுடியுமென்பதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ஆனால், எதுவும் நடக்கும் காலகட்டத்தில் இருப்பதால் ஒன்றும் சொல்வதற்கில்லை.

யார் கொலையாளி எனத் தெரிந்த பின்பு கூட, படம் நீள்வது லேசாகச் சுணக்கத்தை ஏற்படுத்துகிறது. அதுவும் சைக்கோ, தன் பேட்டர்னை மாற்றித் தனிப்பட்ட முறையில் பழிவாங்க முற்படுவது எல்லாம் ஏற்றுக் கொள்ளச் சிரமமாக உள்ளது. சைக்கோ, தன் கடையை மூடி விட்டு வேறு ஊரில் காலம் தாழ்த்தி தன் கைவரிசைகளைக் காட்டுவான். அதை விடுத்து, காவல்துறையினர்க்குச் சவால் விடும் சூப்பர் வில்லன் போல் எதற்கும் அஞ்சாத வழக்கமான வில்லன் ஆகிவிடுகிறான். தான் கண்டுபிடிக்கும் முக்கியமான விஷயத்தை, அதுவும் படம் முடியும் தருவாயில், நேரில் தான் சொல்வேன் என அமெச்சூர் காதலன் போல் ராதாரவி ஃபோனில் அடம்பிடிப்பது கடுப்பை ஏற்படுத்துகிறது. மெகா சீரியல் போல், சட்டென படத்தை முடித்து விட மனம் இல்லாமல் ஜவ்வாய் இழக்கவே அக்காட்சி பயன்படுகிறது.

நகைச்சுவைக் கதாப்பாத்திரத்திலேயே பார்த்துப் பழகிய முனீஸ்காந்தை குணசித்திர வேடத்தில் களமிறக்கியுள்ளார் ராம் குமார். அமலா பால், விஷ்ணு விஷால் காட்சிகள் த்ரில்லர்க்கு ஸ்பீட் பிரேக்கர் போடாத வண்ணம் அமைந்திருப்பது சிறப்பு. ஆனால், நாயகன் மீது நாயகிக்கு அபிப்ராயம் வர வைக்க அரத பழசான டெக்னிக்கையே ஃபாலோ செய்துள்ளார் இயக்குநர். எஸ்.ஐ. அருண் பாத்திரத்திற்கு விஷ்ணு விஷால் மிகக் கச்சிதமாகப் பொருந்துகிறார்.

கொரியன் படங்கள் அளவு மனதை உறைய வைக்கும்படி படங்கள் தமிழில் வர வாய்ப்பில்லை என்று அங்கலாய்ப்பவர்கள் எல்லாம் தவறாமல் பார்க்க வேண்டிய படம்.

1 Comment

Comments are closed.