பாரம் படத்திற்குத் திரைக்கதை எழுதிய ராகவ் மிர்தாத் இயக்கியுள்ள முதற்படம். ஆனால் சீரியசான படமாக இல்லாமல், ரொமெடி (ரொமாண்டிக் காமெடி) வகையைச் சேர்ந்த படமாகக் காலங்களில் அவள் வசந்தம் படத்தை இயக்கியுள்ளார் ராகவ்.
ராதேவிற்கு, ஷ்யாமின் மீது முதல் பார்வையிலேயே காதல் எழுகிறது. சினிமாவில் காணும் ரொமான்ஸைத் தனது வாழ்க்கையில் நடைமுறைப்படுத்த வேண்டுமென உன்னத லட்சியம் உடைய ஷ்யாம், ராதேவைக் கல்யாணம் செய்து கொள்கிறான். எல்லாப் பெண்ணுகளிடமும் ஒரே ரொமான்ஸ் பேட்டர்னை முயற்சி செய்யும் ஷ்யாமின் ரொமான்ஸ் பொய்யானது எனச் சுட்டிக் காட்டுகிறாள் ராதே. அவர்களுக்கு இடையேயான ஊடல் பிரியும் அளவு பெரிதாக, முடிவில் இணைந்தார்களா இல்லையா என்பதே படத்தின் கதை.
அறிமுக நாயகனான கெளஷிக் ராம், ஷ்யாம் கதாபாத்திரத்திற்கு மிக அழகாகப் பொருந்தியுள்ளார். படத்தில் சிரித்த முகத்துடனேயே வரும் ராதே பாத்திரத்தை ஏற்றிருக்கும் அஞ்சலி நாயருடனான கெளஷிக்கின் ரொமான்ஸ் ரசிக்க வைக்கிறது. அஞ்சலி நாயரும், அநாயாசமாகத் தானேற்ற பாத்திரத்தை நடித்திருந்தார். இரண்டாம் நாயகியாக வரும் ஹெரோஷினிக்குத்தான் சொல்லிக் கொள்ளும்படியாகப் பாத்திரமோ, காட்சிகளோ அமையவில்லை.
படம், வசந்த காலத்திலே தான் தொடங்குகிறது. பிறகு, கோடை காலம் வருகிறது. ஆனால், திரைக்கதையில், கதாபாத்திரங்களுக்கு இடையேயான உறவுச் சிடுக்குகள் மிக மேலோட்டமாகக் கட்டமைத்துள்ளதால், வசந்த காலமாகவே முழுப்படமும் உள்ளது. எமோஷன்களின் ஏற்ற இறக்கத்திற்கான காரணிகளில் மட்டும், இயக்குநர் ராகவ் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருந்தால், படம் டெக்னிக்கலாகப் பார்ப்பதற்கு மட்டும் வசந்த காலமாக இல்லாமல், மனதோடும் மாயாஞாலம் நிகழ்த்தியிருக்கும்.