Shadow

படவெட்டு விமர்சனம்

படவெட்டு (Battle) என்ற மலையாளச் சொல்லிற்குப் போராட்டம் எனப் பொருள் கொள்ளலாம். மலூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் மழை, காட்டுப்பன்றியுடன் போராடுகிறார்கள். அக்கிராமத்தைச் சேர்ந்த ரவி தனக்குள்ளேயே மிகப்பெரும் அகப்போராட்டத்தை நடத்துபவனாக இருக்கிறான். மேலும், தன்னுடனான அகப்போராட்ட்த்தில் இருந்து மீண்டு, அக்கிராமத்து நிலங்களை இலவசங்களால் ஆக்கிரமிக்க நினைக்கும் குய்யாலி எனும் அரசியல்வாதியின் அதிகாரத்தை எதிர்ப்பதோடு படம் முடிகிறது.

மிகச் சிறந்த ஓட்டப்பந்தய வீரனான ரவி, ‘மலூர் எக்ஸ்பிரஸ்’ எனப் புகழப்படுகிறான். ஒரு விபத்தில் அவன் கால் முறிந்து போக, அதோடு தன் வாழ்க்கையை முடிந்து விட்டதாக மனதிற்குள் புழுங்கிப் புழுங்கித் தனக்குள்ளேயே ஒடுங்கிக் கொள்கிறான். அவன் சிரிப்பதையே மறந்துவிட்டிருப்பதால், அவன் முகம் உறைந்து போனதுபோல் எப்பொழுதும் இறுகியே உள்ளது. அவனது முன்னாள் காதலியுடனான பார்வைப் பரிமாற்றங்கள் கூட அவனைப் பெரிதும் மாற்ற உதவவில்லை. ரவியின் இந்தச் சிக்கலான மனவார்ப்பை, மிக நேர்த்தியாகத் தன் முகபாவனையிலும் உடற்மொழியிலும் கொண்டு வந்துள்ளார் நிவின் பாலி.

மழையில் ஒழுகும் ரவியின் வீட்டைப் புணரமைத்துத் தந்து, ‘தலைவர் குய்யாலி ஸ்பான்சர் செய்த வீடு’ என கட்சிச் சின்னத்துடன் பெரிய பலகை வைக்கப்படுகிறது. ஒரு வேலையும் செய்யாமல் ஊரைத் திரியும் சோம்பிப் போயிருக்கும் ரவியைப் பார்த்து ஊரே, ‘ஸ்பான்சர் ரவி’ என ஏளனம் செய்கிறது. அவன் ஏற்கெனவே சுமக்கும் ரணத்துடன், இதுவும் சேர்ந்து அவனைப் பாடாய்ப்படுத்துகிறது.

‘நமக்கான திட்டம் நம்மிடம் இல்லாவிட்டால், இன்னொருவன் அவனுடைய திட்டத்தை நம் தலையில் கட்டிவிடுவான்’ எனப் புரிதல் ஏற்படும்பொழுது ரவியிடம் மாற்றம் ஏற்படுகிறது. அதில் தொடங்கி, ‘ஓடுவது (Athleticism) போல் தான் விவசாயமும்’ என்ற நம்பிக்கையைப் பெறுகிறான். இழந்த வாழ்க்கை கிடைத்தது போல் மீண்டும் துளிர் விட நினைக்கையில், குய்யாலியின் அரசியலுக்கு இலக்காகிறான் ரவி. படத்தின் முடிவிலேயே, ‘நம் மண், நம் வீடு, நம் நாடு’ என ரவியின் படவெட்டு (போராட்டம்) தொடங்குகிறது.

முக்கால்வாசி படத்திற்கு மேல், திகைப்பூண்டு மிதித்தவரைப் போலவே வலம் வருகிறார் நிவின் பாலி. காரணம், படத்தில் அவர் நாயகனாக இல்லை. ஊரில் ஒரு நபராகவே வருகிறார். அதிதி பாலனும் அவ்வாறே வருகிறார். மெல்ல நகரும் திரைக்கதையை மீறி, படத்தை ரசிக்க முடிவதற்கு நடிகர்களின் தேர்ந்த நடிப்பும், அட்டகாசமான  தீபக் D. மேனனின் ஒளிப்பதிவும், கேரள நில அமைப்பின் வசீகரமும், அம்மண்ணையும் மக்களையும் இணைக்கும் கோவிந்த் வசந்தாவின் இசையுமே முக்கிய காரணிகள்.

குய்யாலியாக, ஷம்மி திலகன் மிரட்டலாக நடித்துள்ளார். இலவசத்தால் ஆசையைத் தூண்டி, அந்த நிலத்தை ஆக்கிரமிக்கும் அவரது வில்லத்தனமான நடிப்பு, அவரது தந்தை திலகனை சில இடங்களில் நினைவுகூர வைக்கிறது. நந்தவனம் போல் இருக்கும் நிவின் பாலியின் வீட்டிற்குள் சென்று, அவரது ஆட்கள் செய்யும் அட்டகாசம் கொஞ்சம் நஞ்சமல்ல. தனது வீட்டிற்குள் அத்துமீறி நுழையும் கூட்டத்தைக் கலைப்பதற்காக ரவி சண்டையிடும் காட்சி அற்புதமாகப் படமாக்கப்பட்டுள்ளது. படம், அழுத்தமான தாக்கத்தை ஏற்படுத்தும் வண்ணம் இல்லாவிட்டாலும், இயக்குநர் லிஜு கிருஷ்ணா தான் பேச விழையும் அரசியலை வலுவாகவே கட்டமைத்துள்ளார்.