Shadow

காரி விமர்சனம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள காரியூர் என்ற கிராம மக்களின் இறை நம்பிக்கை சார்ந்த ஒரு கதையைக் கையில் எடுத்துள்ளார் இயக்குநர் ஹேமந்த். ரியலிஸ்டிக்கான மேக்கிங்கால் படத்தையும் நெருக்கமாக உணர முடிகிறது.

குதிரை ஜாக்கியான சசிகுமார் சென்னையில் தன் தந்தை ஆடுகளம் நரேனோடு வசிக்கிறார். ஆடுகளம் நரேன் சிறு உயிர்களையும் தன் உயிரென நேசிக்கக் கூடியவர். சசிகுமார் வாழ்வையும் சமூகத்தையும் ஏனோதானோ என ஏற்பவர். சசிகுமாரின் சொந்தக் கிராமமான காரியூரில் கருப்பசாமியின் திருவிழாவை நடத்த வேண்டிய ஒரு சூழல் வருகிறது. அதை நடத்த சசிகுமாரின் வருகை தேவையாக இருப்பதால் ஊர் சசிகுமாரை நாடுகிறது. சசிகுமாருக்கும் ஊருக்குச் செல்வதற்கான ஒரு எமோஷ்னல் காரணம் அமைய, சசிகுமார் ஊருக்குச் சென்று தன் ஊரின் வேரை எப்படிக் காக்கிறார் என்பது காரியின் திரைக்கதை.

மிகையில்லாத நடிப்பு தான் சசிகுமாரின் பலம். சரியான ஜாக்கி இல்லையென்றால் குதிரை தறிகெட்டு ஓடும். அதேபோல், ஒரு நடிகர் தான் ஏற்கும் கதாபாத்திரத்தை முழுமையாக உள் வாங்கவில்லை என்றாலும் படம் பார்வையாளர்களைச் சுற்றி அடிக்கும். அதை உணர்ந்து அளவாக நடித்துள்ளார் சசிகுமார். நாயகி அருண் பார்வதி மிகச்சிறந்த தேர்வு. ஒரு சோற்று பதம் போல ஒரு காட்சியில் நெஞ்சை பதம் பார்த்து விட்டார்.

ஆடுகளம் நரேன், பாலாஜி சக்திவேல் இருவரின் கதாபாத்திர வார்ப்பும் சரி, இருவரின் நடிப்பும் சரி அதி அற்புதம். படத்தில் ஜுனியர் ஆர்டிஸ்ட் போல் வரும் அம்மு அபிராமி ஏன் எதற்கு என்று கேள்விக்கு விடையில்லை.

இமானின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகமாக இருந்தாலும் எங்கோ கேட்ட ராகமாகவும் இருக்கிறது. பின்னணி இசையில் ஜல்லிக்கட்டின் துள்ளல் இருக்கிறது. படத்தின் விறுவிறு எனர்ஜியைக் குறையாமல் பார்க்கிறது அவரது பேக்ரவுண்ட் ஸ்கோர். கணேஷ் சந்திராவின் ஒளிப்பதிவு காரி மீது வண்ணமயமான வெளிச்சத்தைப் பாய்ச்சி, அருமையான ஒளிப்பரப்பை வழங்கி அசரடித்துள்ளார்.

முப்பது ஆண்டுகளாக விழா எடுக்கப்படாமல் கிடக்கிறது ஊரின் காவற்தெய்வம். அந்தத் திருவிழா நடைபெற்றால் ஊருக்கு வரும் தீங்குகள் நீங்கும். மேலும் அத்திருவிழாவில் ஒரு காரி மாட்டை அடக்க வேண்டிய தேவையும் இருக்கிறது. கூடவே வீரம் செறிந்த மாடுகளை வேட்டையாடி தின்னும் பணக்கார வில்லனையும் பழி தீர்க்க வேண்டும். இதில்லாமல் காதல் அத்தியாயம் தனியாகப் பயணிக்கிறது. இப்படி திரைக்கதை ஒரே கோர்வைக்குள் இல்லாவிட்டாலும் பார்ப்பவர்களைத் தொந்தரவு செய்யாதது காரியின் சிறப்பு.

சற்று பிசகினாலும் ஒரு தேசிய கட்சியின் ஆதரவாக மாறிவிடக்கூடிய கதையை அழகாகக் கையாண்டுள்ளார் இயக்குநர் ஹேமந்த். காரியின் துள்ளலான ஆட்டம் வாகை சூடுகிறது.

– ஜெகன் கவிராஜ்