ஓர் அணியாக ஒரு குடும்பம், கபடி ஆட்டங்களில் பங்குபெறும் ஒற்றை வரிச்செய்தியைப் படமாக எடுத்துள்ளார் இயக்குநர் சற்குணம்.
தனது ஊருக்காக நாப்பது வருடங்களாகக் கபடி ஆடி, ஊருக்கு மிகப் பெரும் பெருமையைச் சேர்த்தவர் பொத்தாரி. ஊரின் கபடிக் குழுவிற்கு அவரது பெயரை வைப்பதோடு, அவருக்குச் சிலையும் வைத்துக் கொண்டாடுகின்றனர் ஊர்மக்கள். அரசர்குளத்திற்கு எதிரான ஒரு போட்டியில், பொத்தாரியின் பேரன் பணம் வாங்கிவிட்டதாக ஊர்மக்களை நம்ப வைக்கிறான் பொறாமையில் பொங்கும் சக ஆட்டக்காரன் ஒருவன். அதனால் சுடுகாட்டு மாரியம்மன் கோயில் திருவிழாவில் பொத்தாரியின் குடும்பத்திற்குக் காலகாலமாகக் கிடைக்கும் முதல் மரியாதை மறுக்கப்படுகிறது.
ஊராரின் அலட்சியத்தையும் தூற்றுதலையும் பொறுக்காத பொத்தாரியின் இரண்டாம் தாரத்துப் பேரன், ஊர்மக்கள் ஓர் அணியாகவும், பொத்தாரி குடும்பத்து ஆண்கள் ஓர் அணியாகவும் மோதிப் பார்க்கலாம் என அறைகூவல் விடுக்கிறான். பொத்தாரி குடும்பம் வென்றால், பொத்தாரியின் பேரன் நல்லவன் என சுடுகாட்டு மாரியம்மனே தீர்ப்பு சொல்வதாகக் கொள்ளப்படும். பொத்தாரியைத் தவிர, கபடியின் அரிச்சுவடி அறியாத அவரது குடும்பத்தினர் ஊராரை எதிர்த்துப் போட்டியில் வென்றார்களா என்பதுதான் படத்தின் கதை.
பொத்தாரியின் முதல் மகனுக்கு இரண்டு மகன்கள், ஒரு மகள் என மூன்று பிள்ளைகள். இரண்டாம் தாரத்துக்கோ, ஒரே மகன். ஆணால், தாரப்பங்கு என்ற நடைமுறையின்படி, பொத்தாரியின் இரண்டாம் மனைவியின் வாரிசுக்குச் சொத்தில் சரி பாதி பங்கு பிரித்துத் தரப்படுகிறது. அதனால் இரு குடும்பமும் பிரிந்திருக்க, எப்படியாவது தாத்தா குடும்பத்துடன், இரண்டாம் தாரத்துப் பேரன் இணையப் பாடுபடும் எமோஷ்னல் டிராமாவாக முதற்பாதி பயணிக்கிறது.
பொத்தாரியாக ராஜ்கிரண், இரண்டாம் தாரத்துப் பேரனாக அதர்வாவும், அதர்வாவின் நண்பராக பாலசரவணன், முதல் தாரத்துப் பேரனாக ராஜ் ஐயப்பா, பொத்தாரியின் மகன்களாக ஜெயபிரகாஷ், ஆர்.கே.சுரேஷ், அதர்வாவின் அம்மாவாக ராதிகா சரத்குமார், ராதிகாவின் அப்பாவாக G.M.குமார் எனப் பெரிய நட்சத்திரப் பட்டாளமே படத்தில் நடித்துள்ளனர். நாயகியாக ஆஷிகா ரங்கநாத் அறிமுகமாகியுள்ளார்.
இரண்டாம் பாதியில் கபடிப் போட்டிக்கான பயிற்சி, கபடிப் போட்டி எனப் படம் செல்கிறது. விளையாட்டை அதன் நுணக்கங்களோடு சித்தரிக்காமல், ஊரே சேர்ந்து பொத்தாரியின் குடும்பத்தை அவமானப்படுத்திக் கொண்டும், சுடுகாட்டு மாரியம்மனிடம் ராதிகா வேண்டிக் கொண்டும் இருக்கிறார். இந்தக் குடும்பத்திற்கும் கபடிக்கும் ஏற்படும் அவமானத்தைப் பொறுக்காமல், சுடுகாட்டு மாரியம்மனே கபடி விளையாட இறங்கிவிடுவாரோ என காந்தாரா ஹேங்ஓவர் வேறு எட்டிப் பார்த்தது. நல்லவேளையாக அப்படியில்லாமல், கடைசி ரைடில் வெற்றி வாகை சூடுகிறது பொத்தாரி குடும்பம் (அந்த அதிசயிக்கத்தக்க வெற்றி, அம்மன் இறங்கி ஆடியிருந்தாலும் கூடக் கிடைத்திருக்க வாய்ப்பில்லை).