Shadow

கத்தரிக்காய்க் கல்யாணம் (சிறார் கதை)

Kathirikkaai-kalyanam

அன்று விடிவதற்கு முன்னரே ஊரே கோலாகலமாக இருந்தது. சாரை சாரையாய் வெண்டைக்காய்கள், பாகற்காய்கள், முருங்கைக்காய்கள் என அனைத்து வகை காய்கறிகளும் ஊரின் பொதுவில் இருந்த மண்டபத்தை நோக்கி வந்து கொண்டிருந்தார்கள். அனைவரும் புத்தாடையுடன் ஜொலிக்கும் ஆபரணங்களுடன் பேசிச் சிரித்துக் கொண்டும், ஆடிப் பாடிக்கொண்டும் நடந்தும், வண்டியிலுமாக வந்த வண்ணம் இருந்தனர்.

அந்த ஊருக்கு அப்போதுதான் குடிவந்திருந்த பச்சை மிளகாய்க் குடும்பத்தினர் ‘ஆ’வென வாய் பிளந்து பார்த்துக் கொண்டிருந்தனர். ஆர்வம் தாங்க முடியாத பச்சை மிளகாய்ப் பெரியவர் ஒருவர் வழியில் வேகமாகச் சென்று கொண்டிருந்த பீர்க்கங்காயை நிறுத்தி,

“என்ன விசேஷம்?” என்று வினவ,

பச்சை மிளகாயை ஏற இறங்கப் பார்த்த பீர்க்கையார்,

“ஊருக்குப் புதுசா நீங்க? இன்னிக்குக் கத்தரிக்காய் வீட்டுல கல்யாணம்! ஊரே கொண்டாட்டமா இருக்கும். நீங்களும் சீக்கிரம் குளிச்சிட்டுத் தயாராகுங்க! இன்னிக்கு எந்த வீட்டிலும் அடுப்பெரியக் கூடாதுன்னு கத்தரிக்காய் வீட்டம்மா சொல்லியிருக்காங்க. உங்களுக்கும் புது உடுப்பெல்லாம் கொடுப்பாங்க. வீடு எங்கேன்னு சொல்லுங்க. நான் முன்னாடி போயி கொடுத்தனுப்புறேன்” என்றார்.

அதைக் கூட்டமாய்ச் சுற்றி நின்று கேட்டுக் கொண்டிருந்த பச்சை மிளகாய்ச் சிறுவர்களும், சிறுமிகளும்,

“ஐய்யா! புது உடைகளா!?” என்று கோரஸாக மகிழ்ச்சியுடன் துள்ளிக் குதிக்க,

பீர்க்கையார் குழந்தைகளை நோக்கி, “கண்ணுங்களா! புது உடைகள் மட்டுமல்ல! நிறைய இனிப்புப் பதார்த்தங்களும் இருக்கு” என்று அக்குழந்தைகளின் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கினார்.

மகிழ்ச்சியுடன் பச்சை மிளகாய்க் குடும்பத்தினர் குளித்துத் தயாராவதற்குள் பீர்க்கையார் கொடுத்தனுப்பி விட்டதாக முள்ளங்கியார் பை நிறைய புத்தாடைகளுடன் வந்து சேர்ந்தார்.
பைகளில் புது பட்டு வேட்டி, சட்டைகள், பட்டுப் புடவைகள் சிறுவர் சிறுமிகளுக்கான அலங்கார உடைகள் கண்ணைப் பறிக்கும் நிறத்துடன் அனைத்தும் இருந்தன.

அரை காத தூரம் நடந்து வந்து மண்டபத்தை அடையும்போது உருளைக் கிழங்குகளும் பளபளவென வெள்ளைப் பட்டு வேட்டி, பட்டுச் சட்டையுடனும், பீட்ரூட்டுகள் ஊதா நிறப் பட்டுப் புடவையும் உடுத்திக் கொண்டு திருமணத்திற்கு வருபவர்களை வாசலில் நின்று இரு கரம் கூப்பி வணக்கம் தெரிவித்து வரவேற்றுக் கொண்டிருந்தார்கள்.

மண்டபத்திற்குள் நுழைந்த பச்சை மிளகாய்க் குடும்பத்தார் மீதும் பன்னீர் தெளித்து வரவேற்றனர். பச்சை மிளகாய்க் குடும்பத்துப் பெரியவரும் பதில் வணக்கம் கூறி, தட்டில் வைக்கப்பட்டிருந்த சந்தனத்தை எடுத்து நெற்றியில் வைத்துக் கொண்டு கைகளிலும் கொஞ்சம் பூசிக் கொண்டார். பச்சை மிளகாய் வீட்டுப் பெண்கள் அனைவருக்கும் ஆளுக்கொரு ரோஜாப்பூவைக் கொடுத்தார்கள்.
குழந்தைகளோ தட்டில் வைக்கப்பட்டிருந்த கற்கண்டுகளை ஆளுக்குக் கொஞ்சமாய் எடுத்துக் கொண்டார்கள்.

மண்டபத்தின் பெரிய வாசல் மாவிலைத் தோரணங்களால் அலங்கரிக்கப்படிருந்தது. வாசலின் இரு புறமும் பெரியப் பெரிய வாழைத் தார்களுடன் கூடிய வாழை மரத்தைக் கட்டி வைத்திருந்தார்கள். வாசலின் பெரிய தேக்குக் கதவுகள் இரண்டும் மஞ்சள் குங்குமத்தால் அலங்கரிக்கப்பட்டு, மலர்ச்சரங்களால் அழகு செய்யப்படிருந்தன.

பெரிய வாசல் கடந்து உள்ளே சென்றதும் கத்தரிக்காய்ப் பெரியவர் ஒருவர் வேகமாக வந்து, “ஐயா! வாங்கய்யா! வாங்கம்மா! அனைவரும் வருக வருக!” என்று கரம் கூப்பி வரவேற்று உள்ளே அழைத்துச் சென்று காலியாய் இருந்த இருக்கைகளில் அமரச் சொன்னார்.

அவர் வெளியே இன்னும் சிலர் வருவதைப் பார்த்து அவர்களை வரவேற்கச் சென்றவுடன் அருகில் அமர்ந்திருந்த தக்காளிப் பாட்டி இவர்களிடம், “இதோ போறானே! இவன்தான் மாப்பிள்ளைப் பையனோட தாய் மாமா!” என்றார்.

“ஓ!” என்ற பச்சைமிளகாய், “அது சரி! பொண்ணு யாரு?” என்று கேட்க,

“வெண்டைக்காய்தான் பொண்ணு வீடு” என்றாள் தக்காளிப் பாட்டி.

உருளைக்கிழங்கின் தவிலும், பூசணிக்காயின் நாதஸ்வரமும் ஒலித்துக் கொண்டிருக்க மண்டபம் கிட்டத்தட்ட நிறைந்தே விட்டது.

புரோகிதம் செய்து கொண்டிருந்த புதினா முதலில் மாப்பிள்ளையை அழைத்து வரச் சொல்ல, பட்டுத் தலைப்பாகையுடன் கம்பீரமாக மணமேடைக்கு வந்த மாப்பிள்ளைக் கத்தரிக்காய் சபையோருக்கு வணக்கம் சொல்லிப் பின் பலகையின் மீது அமர்ந்தார்.

அக்னி ஹோமம் எழுப்பி குலதெய்வம், பிள்ளையார், சிவன், விஷ்ணு, பிரம்மா, என ஏழேழு லோக தேவர்களையும் அங்கே ஆவாஹணம் செய்த புரோகிதர் அடுத்ததாக மணமகளை அழைத்து வரச் சொல்ல, தாயார், சகோதரிகள், அத்தை வீட்டுப் பெண்கள் என அனைவருமாய் ஒன்றுகூடி வெண்டைக்காய் மணமகளை மேடைக்கு அழைத்து வந்தனர்.

நெற்றிச் சுட்டி, காசு மாலை, கைநிறைய வளையல்கள், கண்களிலே மை தீட்டி, விரல்களில் மருதாணி என தேவதை போல் அலங்கரிக்கப்படிருந்த மணமகளும் மேடைக்கு வந்ததும் சபையோரை வணங்கி கத்தரிக்காய் மாப்பிள்ளையின் அருகில் அமர்ந்தவுடன் புரோகிதர் மந்திரங்களைச் சொல்லத் துவங்கினார். ஒரு வெள்ளித் தாம்பாளத்தில் தேங்காய், பழம், பூ, வெற்றிலை என அனைத்தும் வைக்கப்பட்டிருக்க அத்தேங்காயின் மேல் திருமாங்கல்யச் சரடும் வைக்கப்பட்டிருந்தது.

மணமக்களால் மாப்பிள்ளையின் பெற்றோர்க்கும், மணமகளின் பெற்றோர்க்கும் பாத பூஜை நடத்தப்பட்டது. புரோகிதர் மணமக்களிடம், “உங்கள் தாய் தந்தையர், ஆசிரியர்கள், குல தெய்வம், முன்னோர்கள் மற்றும் சபையிலிருக்கும் பெரியோர்கள் அனைவரையும் மனதார வணங்கி ஆசி பெற்றுக் கொள்ளுங்கள்” எனச் சொல்ல கத்திரிக்காய் மாப்பிள்ளையும், வெண்டைக்காய் மணப்பெண்ணும் அவ்வாறே செய்தனர்.

இறுதியில் வெண்டைக்காய் மணப்பெண்ணின் தகப்பனார் கன்னிகாதானம் செய்து கொடுக்க, ‘கெட்டி மேளம்.. கெட்டி மேளம்’ என்று கூறியவாறே திருமாங்கல்யத்தை எடுத்து மாப்பிள்ளையின் கைகளில் கொடுத்தார் புரோகிதர் புதினா.

“மாங்கல்யம் தந்துனானே” என்ற மந்திரம் முழங்க கத்தரிக்காய் மாப்பிள்ளை வெண்டைக்காய் மணப்பெண்ணின் கழுத்தில் திருமாங்கல்யத்தை அணிவிக்க சபையில் நிறைந்திருந்த பெரியோர், உறவினர் அனைவரும் “வாழிய பல்லாண்டு” என்று மனதார வாழ்த்தி அட்சதை தூவி வாழ்த்தினர்.

முகூர்த்தம் முடிந்ததும் பூசணிக்காய், நாதஸ்வரத்தில், “நூறு வருஷம் இந்த மாப்பிள்ளையும் பெண்ணும்தான்” என்ற பாடலை வாசிக்க, உறவினர்கள் கொஞ்சம் கொஞ்சமாய் மேடைக்கு வந்து மணமக்களை வாழ்த்திப் பரிசுப் பொருட்களைத் தரத் துவங்கினர். பரிசுப் பொருட்கள் ஒரு புறம் மலைபோல் குவிந்து கொண்டிருக்க, கத்தரிக்காய் மாப்பிள்ளையின் தாயார் வெண்டைக்காய் மணமகளின் தாயாரிடம் “சம்மந்தி! நம்ம உறவினர்களையெல்லாம் சாப்பிட வரச் சொலலுங்க” என்று அழைக்க,

இருவருமாய் மேடையை விட்டுக் கீழிறங்கி வந்து ஒவ்வொருவரிடமும் சாப்பிட அழைத்தனர்.
விருந்துக் கூடத்தில் மிக நீளமான மேசைகளில் தலை வாழை இலைகள் விரிக்கப்பட்டு ஒவ்வொரு இலையிலும் இடது ஓரத்தில் உப்பு, ஊறுகாய், இனிப்பு, வலது ஓரத்தில் பொறியல், கூட்டு, அப்பளம் போன்றவையுடன் இலையின் நடுவே சாதம், பருப்பு, நெய் விட்டு வந்தனர். பந்தியிலே பரிமாற கத்தரிக்காய் வீட்டு ஆட்களும், வெண்டைக்காய் வீட்டு ஆட்களும் பம்பரமாய்ச் சுழன்றனர். ஒவ்வொருவரிடமும், ‘சாதம் வேணுமா? சாம்பார் வேணுமா? ரசம் வேணுமா? மோர் வேணுமா? பாயசம் இன்னும் போட்டுக்குங்க’ என்றெல்லாம் கேட்டுக் கேட்டுப் பரிமாறினார்கள். அவ்வப்போது கத்தரிக்காய் வீட்டுப் பெரியவர்களும், வெண்டைக்காய் வீட்டுப் பெரியவர்களும் வந்து, “தயவு செய்து யாரும் உணவுப் பொருள்களை வீணாக்காதீர்கள். வேண்டிய அளவு கேட்டு வாங்கி உண்ணுங்கள்” என்று சொல்லிக் கொண்டிருக்க, சாப்பிட வந்தவர்களில் சிறுவர், சிறுமியர், குழந்தைகள் உட்பட யாருமே உணவைச் சிறிதும் வீணாக்காமல் உண்டு முடித்தனர்.

உண்டு முடித்து வெளியே வந்தவர்கள் அனைவருக்கும் தாம்பூலப் பை வழங்கப்பட்டது. பச்சை மிளகாய்க் குடும்பத்தாருக்கும் தாம்பூலப் பைகள் கிடைக்க ஒவ்வொரு பையினுள்ளும் ஒரு மரக்கன்றும், ஒரு சிறிய திருக்குறள் புத்தகமும் வைக்கப்பட்டிருந்தன. “ஆஹா! அற்புதம்” என்று பச்சை மிளகாய்ப் பெரியவர் பாராட்ட பச்சை மிளகாய்க் குழந்தைகளோ, “நம் வீட்டுத் தோட்டத்தில் இம்மரக் கன்றுகளை நட்டு வைத்துப் பராமரிப்போம். தினம் ஒரு திருக்குறள் என்று படித்துப் பொருள் புரிந்து கொள்வோம்” என்று மகிழ்ச்சியுடன் வீட்டுக்குப் புறப்பட்டனர்.

– துவாரகா

(Image Courtesy: https://www.123rf.com)