சினிமா என்பது வரலாற்றை உள்ளவாறே பதிவதல்ல. அது ஒரு கலை வடிவம். கலையென்பது புனைவு. ஆவணப்படுத்துதல் அதன் நோக்கம் இல்லை. தனக்கு உகந்தவாறு நிகழ்வுகளை வளைத்துக் கொள்ளும் சுதந்திரமும் உரிமையும் படைப்பாளிக்கு உண்டு. Inglourious Basterds எனும் படம் ஓர் உதாரணம். ஹிட்லரைக் கொல்வதாக டொரன்டினோ காட்சிப்படுத்தியிருப்பார். அது speculative fiction எனும் ஜானரைச் சேர்ந்தது.
97இல், வீரபாண்டிய கட்டபொம்மனின் தளபதியான வீரன் சுந்தரலிங்கம் என்பவரது பெயரில் பேருந்துகளை அரசு இயக்கியது. அவரது “பெயர்” கொண்ட பேருந்தில் ஏறமாட்டோம் என மாற்று சாதியினர் கலவரத்தில் ஈடுபட்டனர். கலவரம் கட்டுக்கு அடங்காததாலும், பேச்சுவார்த்தை ஒரு முடிவுக்கு எட்டாததாலும், பல்லவன், கட்டபொம்மன் முதலிய போக்குவரத்துக் கழங்கள் அனைத்துக்கும் தமிழக அரசு போக்குவரத்துக் கழகம் என பொதுப்பெயர் இடப்பட்ட்து. படத்தின் கதை நிகழும் காலம் இதுவே! கண்ணபிரானாக வரும் நட்டியின் வசனங்களில் இருந்து இதைத் தெரிந்து கொள்ளலாம். சாதிப் பெருமிதமும், திமிரும் கொண்ட கண்ணபிரான் எனும் ஒரு காவலதிகாரி, அக்கலவரத்தைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தி, ஓர் ஊரையே சூறையாடுகிறார்.
கண்ணபிரானின் கோபத்திற்கு இரண்டு காரணங்கள். ஒன்று, தன் முன் நின்ற பொடியங்களும் ஊர்த்தலைவர் துரியோதனன், தலையில் கட்டிய துண்டை அவிழ்க்காதது; மற்றொன்று, அந்தக் கிராமத்தினரின் பெயர்கள். அவை சாதியைத் துறந்த பெயர்கள். மகாபாரதத்தின் பெருந்தெய்வக் கதையாடலில் இருந்து வைக்கப்படும் பெயர்கள்.
“கந்தையா மகன் கண்ணபிரான் என வைத்துக் கொள்ளலாம். மாடசாமி மகன் கர்ணன் என பெயர் வைத்துக் கொள்ளக்கூடாதா?”
கண்ணபிரான் (நட்டி) எனும் பெயரும், கர்ணன் (தனுஷ்) எனும் பெயரும் ஒரே அடுக்கில் வருகிறது. இது தான் படத்தின் கரு. 1995 இல் நடந்த கொடியங்குளம் கலவரம் படத்தின் கரு இல்லை. பொடியங்குளம் என்பது தமிழ்நாடெங்கும் பாதிக்கப்பட்ட/ இன்றளவும் பாதிக்கப்படும் ஒடுக்கப்பட்டவர்களின் குடியிருப்பிற்கான உருவகம். Metaphor என்பது கலையில் ஓர் அங்கம்.
பரியேறும் பெருமாள் படத்தின் நீட்சி தான் இதுவும். அது, படிக்க வெளியில் வரும் பரியனை, அவனது சாதியை அறிந்து கொள்ளும் மாற்று சாதியினர் எப்படிப் படிக்கவிடாமல் செய்ய தொந்தரவு செய்கின்றனர் என்பது கதையென்றால், கர்ணன் படத்தில், ஒரு கிராமத்தினரை வெளியே செல்லவே முடியாமல் ஊருக்குள்ளேயே முடக்கி வைக்க மாற்று சாதியினர் என்னென்ன செய்கிறார்கள் என்பதுதான் கதை. இது படத்தின் முதற்பகுதி.
பெயர் அரசியல் இரண்டாம் பகுதி. இன்னும் தெளிவாகச் சொன்னால், ஒடுக்கப்பட்டவர்களுக்கு ஒரு வில்லன் இல்லை. பக்கத்து ஊரில் அழகம்பெருமாளும் அவரது ஆட்களும் வில்லன் என்றால், சம்பந்தமே இல்லாமல் எங்கிருந்தோ வரும் நட்டியும் வில்லனாக அவதாரமெடுக்கிறார். மனதில் விஷமாய்ப் பொங்கும் சாதிப் பெருமிதம், எவ்விதக் காரணமும் இன்றி ஒடுக்கப்பட்டவர்கள் மீது வன்மமாகப் பாய்கிறது. யார் ஆட்சிக்கு வந்தாலும், ஒடுக்கப்பட்டவர்கள், சாதிப் பெருமிதத்தையும் வஞ்சத்தையும் சுமந்து வருபவர்களின் மத்தியில் (!? – ஊரோரத்தில்) தான் வாழ வேண்டியுள்ளது. இந்த அநீதிக்கு வரலாற்றுச் சான்று கேட்டு, மாரி செல்வராஜின் நேர்மையையும் வீரத்தையும் கேள்விக்கு உட்படுத்துபவர்கள், சாதியத்தின் கோர முகத்தை அறியாத வெகுளிகளாகவோ, அல்லது காரிய சமர்த்தர்களாகவோ மட்டுமே இருக்க முடியும். பொடியங்குளத்தின் வலியும் வேதனையும் என்பது பாதிக்கப்பட்டவர்கள் அத்தனை பேரின் சார்பாக ஒரு குறியீடு.
எந்த ஆட்சியில் கலவரம் அதிகம் நிகழ்ந்தது என்ற தரவுகளைப் பட்டியலிட்டு, மாரி செல்வராஜை மறுதலிக்கிறார்கள். கலவரத்தில் மட்டும்தான் சாதியத்தின் கோர முகம் வெளிப்படும் என நம்புவர்களைப் பார்த்தால் பயமும் பரிதாபமும் ஒரு சேர எழுகிறது. ஒரு சொல், ஒரு பார்வை, ஒரு சிறு வாய்ப்பு மறுப்பு, பேருந்து ஊரில் நிற்காதது, துண்டைத் தோளில் இருந்து இறக்க வைப்பது, ஊருக்குள் நடக்கும் பொழுது செருப்பைக் கழட்ட வைப்பது, இரட்டைக் குவளை முறை, பேருந்தில் பக்கத்தில் அமரவிடாமல் செய்வது, பெயரைக் கேட்டதும் முகத்தில் எதிரில் இருப்பவரின் முகத்தில் தெரியும் இளக்காரமும் ஒதுக்குதலும் என சாதியத்தின் கோர முகம் பல ரூபங்களில் வெளிப்படும். அந்தக் கோரமுகத்தினைத் தனது படைப்புகளின் மூலம் அம்பலப்படுத்தும் மாரி செல்வராஜைத் தரவுகளைக் காட்டி மறுதலிப்பவர்கள், சமுத்துவத்திற்கு எதிரான பாதையில் அணி திரள்கிறார்கள்.
இல்லையில்லை, வரலாற்றுத் துல்லியம்தான் முக்கியம் என நினைப்பவர்கள், 97 இல் காட்டுக்கூடலூரில் நிகழ்ந்த கலவரத்தின் உருவகமாகப் பொடியங்குளத்தைக் கொள்ளுங்கள் (நன்றி: தணிகைச்செல்வன்). தரவுகளைச் சரி பார்த்த பின்னாவது, வரலாற்றுத் துல்லியத்தை விட, சாதியத்தின் கோர முகத்தினையும், அது சமூகத்தில் ஏற்படுத்தும் பாதிப்புகளைப் பற்றிப் பேசுவதும், அது சார்ந்த படைப்புகளை அங்கீகரிப்பதும் மற்ற அனைத்தையும் விட முக்கியம் என்ற புரிதலுக்கு நகர்வது மிக அவசியம்.