Search

சீதக்காதி விமர்சனம்

Seethakaathi-movie-review

அரங்கு நிறைந்த பார்வையாளர்களின் கைத்தட்டலில் பரிணமிக்கும் மேடை நாடகக் கலைஞன், சுமார் 25 ஆண்டுகளில், விரல் விட்டு எண்ணக் கூடிய பார்வையாளர்கள் முன் சுருங்கி விடுகிறான். அரங்கத்திற்கு வாடகை தருவதே சிரமமாகிவிட்ட நிலையிலும், நடிப்பின் மேலுள்ள காதல் காரணமாகத் தொடர்ந்து நாடகம் நடத்துகிறார் ஐயா ஆதிமூலம். தனது பேரனுக்கான மருத்துவச் செலவினைப் பற்றிய பரிதவிப்போடு, சுஜாதாவின் ‘ஊஞ்சல்’ நாடகத்தில் உணர்ச்சிகரமாக நடித்துக் கொண்டிருக்கும்பொழுதே அமரராகிறார் ஐயா ஆதிமூலம். ஐம்பது ஆண்டு காலம் நடிப்பிற்காக மட்டும் வாழ்ந்த ஐயா, அவரது மறைவிற்குப் பின்னும் நடிப்பின் மேலுள்ள காதலால், யார் மூலமாகவாது நடித்துக் கொண்டே இருக்கிறது. அதனால் அவரது பேரனின் மருத்துவச் செலவுக்கும், அவரது நாடகக் குழுவுக்கும் பணம் கிடைக்கிறது.

ஆக, ஐயா ஆதிமூலம் செத்தும் கொடுத்த வள்ளல் சீதக்காதி போல், தன் குடும்பத்தினருக்கும் நாடகக் குழுவிற்கும் கொடுத்தார் என்ற காரணப் பெயரே படத்தின் தலைப்பாகும்.

சீதக்காதி, விஜய் சேதுபதியின் 25வது படம். 40 நிமிடங்களுக்கு மட்டும் துணிந்து ஒரு நீளமான கேமியோ ரோல் செய்திருந்தாலும், படம் முழுவதும் வியாபித்துள்ளார் விஜய் சேதுபதி. மேடை நாடகக் கலைஞர் ஐயா ஆதிமூலமாக அசத்தலாய் வாழ்ந்துள்ளார். விசாரணை, ஒளரங்கசீப், ஊஞ்சல் முதலிய தமிழ் எழுத்தாளர்களின் நாடகங்களைக் காட்சிகளாகத் திரையில் கொண்டு வந்துள்ளனர். இதில், ஒளரங்கசீப் நாடகத்தில் வரும் காட்சி, ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட 8 நிமிடக் காட்சி. அந்தக் காட்சியின் ஒளி அமைப்பு மிக அற்புதம். தனிமையில் தவிக்கும் ஒளரங்கசீப்பின் வேதனையை விஜய் சேதுபதி தன் நடிப்பில் கொண்டு வர முயல்கிறார். ஆனால், கோவிந்த் வசந்தாவோ மிக இலகுவாய் ஒளரங்கசீப்பின் மனதைப் பிரதிபலிக்கிறார். படத்தின் பின்னணி இசை ஒரு பெரும் பிரவாகமாய் நம்மை ஆட்கொள்கிறது. ஆங்காங்கே படம் சுணக்கம் பெறும்பொழுதும் கூட கோவிந்த் வசந்தா தன் இசையால் அதை ஈடு செய்கிறார். விஷூவலில் இருந்து ஃபோகஸ் மாறி, பல காட்சிகளில் இசையில் மனம் கவனம் கொள்கிறது.

அதன் பின் படம், நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் பாணியில் மிகக் கலகலப்பாக நகர்கிறது. ஐயா ஆன்மாவின் துணை இல்லாமல் நடிப்பதற்கு முயலும் ராஜ்குமாரும், அவரை இயக்கும் இயக்குநராக அவதிப்படும் பகவதி பெருமாளும் வயிற்றைப் பதம் பார்க்கின்றனர். நம்ப முடியாத மேஜிக்கை அசால்டாக நிகழ்த்தியுள்ளார் இயக்குநர் பாலாஜி தரணிதரன். ‘ஆன்மா ஒருவருள் புகுந்து நடிக்கிறது’ என்ற செய்தி, மீம்ஸ் யுகத்தில், எவ்வித உறுத்தலுமின்றி தமிழ் ரசிகர்களால் ஏற்றுக் கொள்வதாகச் சித்தரித்ததோடு, அவருக்கு கட்-அவுட் வைத்துப் பாலாபிஷேகம் செய்யும் அளவிற்கு வெறித்தனமான die-hard fans உருவாகியிருப்பதாகக் காட்டியுள்ளதை ஏற்கச் சிரமமாக உள்ளது.  தூக்கம் வராமல், தன் பேரனின் கையை எடுத்துத் தடவிக் கொடுக்கும் விஜய் சேதுபதி படத்திற்கான வலுவானதொரு கருவை அஸ்திவாரமாக்குகிறார். ஆனால், அந்தக் கரு அப்படியே நீர்த்துவிடுவதாலும், பாதை விலகி கன்னாபின்னாவென திரைக்கதை விலகுவதாலும், படம் முடியும் பொழுது ஒரு வலுவான பாதிப்பையோ தாக்கத்தையோ ஏற்படுத்தத் தவறிவிடுகிறது.  

ஒளிப்பதிவாளர் சரஸ்காந்த் படத்தின் மிகப் பெரிய பலம்.  குறிப்பாக கதாபாத்திரத்தின் ரியாக்ஷன் ஷாட்கள் எல்லாம் படத்தின் கலகலப்பிற்கு உத்திரவாதமளிக்கின்றன. ஒரு காட்சியில், பீஸ் போன ராஜ்குமார் தன் எதிரில் இருக்கும் புத்தகத்தை எடுத்துப் பார்த்து, அதே வேகத்தில் வைத்துவிடுவார். பரவசமான இசை எழுந்து சட்டென அடங்கும். இசை ஏன் அடங்குகிறது என்பதற்கு, லோ-ஆங்கிளில் காட்டப்படும் அந்த புத்தக அட்டையின் மூலம் உணர்த்தியிருப்பார்கள். இசையும், விஷுவலும் இப்படி பல காட்சிகளில் ஒன்றோடு ஒன்று இணைந்து நல்ல சினிமாட்டிக் தருணங்களைத் தருகிறது. இன்னொரு உதாரணம், தெருவில் ஒரு சாவு ஊர்வலம் செல்லும்பொழுது, ஒர் வீட்டின் உள்ளிருந்து கேமிராவை வைத்து, அந்த வீட்டு வாசலில் ஒருவன் கேமிராவில் மூழ்கியிருப்பதாகக் காட்டுவார்கள். அந்த ஒரு ஃப்ரேமே பல கதைகளைச் சொல்கிறது.

ஐயாவின் ஆன்மா இல்லாமல் சுனில் நடிக்க முயலும் காட்சிகள் மறுபடியும் வயிற்றைப் பதம் பார்க்கிறது. ஆனால், போதும் போதும் என்று பார்வையாளர்கள் குரலெழுப்பும் அளவிற்கு அக்காட்சியை நீட்டி முழக்கியிருக்க வேண்டாம். ‘ஐயா நடிக்க ஏதோ ஒரு உடல். அது இதுவாக இருந்துட்டுப் போகட்டுமே!’ எனச் சொல்லும் தயாரிப்பாளர் தனபால் கதாபாத்திரத்தில் சுனில் கலக்கியுள்ளார். படத்தின் கலகலப்பிற்குப் பெரிதும் உதவியுள்ளார். முதற்படத்திலேயே பரவலான கவனம் பெறும் பாத்திரத்தை மிக நிறைவாகச் செய்துள்ளார். 

ஐயா ஆதிமூலத்தின் நண்பர் பரசுராமனாக மெளலி படம் நெடுகே ஒரு குணசித்திர பாத்திரத்தில் வருகிறார். மெளலி ஒரு மேடை நாடகக் கலைஞர் என்பது குறிப்பிடத்தக்கது. படத்தில், ஐயா ஆதிமூலத்தின் நாடகக் குழுவில் இருப்போர் அனைவருமே உண்மையில் நாடகக் கலைஞர்களை. அவர்களைச் சிறப்பிக்கும் வகையில் அவர்களைப் படத்தில் உபயோகப்படுத்தியுள்ளார் இயக்குநர் பாலாஜி தரணிதரன். 

யூகங்களுக்கு அப்பாற்பட்டு திரைக்கதை பயணிக்கிறது. திரைக்கதை சேருமிடமான நீதிமன்ற காட்சி, ஏன், எப்படியென்றே புரியாமல், என்ன நடக்கிறதெனக் குழப்பத்தில் ஆழ்த்துகிறது. அதாவது, சீரியசான படமென்ற உணர்வை நீர்த்துச் செய்வது போல் சில காட்சிகள் அமைந்துள்ளன. எனினும், நீதிபதியாக வரும் இயக்குநர் மகேந்திரனின் ரேஷ்னலான அந்தத் தீர்ப்பு வயிற்றில் பாலை வார்த்தாலும், சுனில் நடித்த படத்தின் ஒரு காட்சி திருடப்பட்ட ‘பைரசி’க்கு எதிராக ஒரு கண்டனம் கூட அவர் தெரிவிக்காதது ஏமாற்றம் அளிக்கிறது.

இயக்குநர் பாலாஜி தரணிதரன் தன் கற்பனைக் குதிரைக்கு ஒரு கடிவாளம் போடாமல், அதன் இஷ்டத்திற்குத் திரைக்கதையில் ஓட விட்டுள்ளார். நல்ல இசை துணையாகயிருந்தால், எந்தக் குதிரையையும் அடக்கி ஓர் ஒழுங்கில் திரையேற்றலாம். நெகிழ்ச்சிக்கு உள்ளாக்கியிருக்க வேண்டிய படம், கலகலப்பாய்ப் பயணித்து அப்படியே முடிகிறது.