குழந்தைக் கவிஞர் என்றதுமே நம் அனைவருக்கும் அழ.வள்ளியப்பாவின் நினைவு உடனே வந்துவிடுகிறது. அது சரிதான். குழந்தைகளுக்காக வள்ளியப்பா ஆயிரக்கணக்கில் பாடல்கள் எழுதியிருக்கிறார். ‘மலரும் உள்ளம்’ என்கிற தலைப்பில் இவரெழுதிய புத்தகமொன்று ஒன்பது பதிப்புகளுக்கு மேல் அச்சாகி, முப்பதாயிரம் பிரதிகளுக்கும் அதிகமாக விற்றுத் தீர்ந்திருப்பதாகவும் அறிய முடிகிறது. எனவே இவருக்குக் கிடைத்திருக்கும் குழந்தைக் கவிஞர் பட்டம் ஏற்றுக் கொள்ளக்கூடியதுதான். குழந்தைக் கவிஞர் என்றால் அழ.வள்ளியப்பா தான் என்கிற பிம்பம், தமிழ் சிறுவர் இலக்கியத்தில் உருவாகிவிட்டது என்ற உண்மையை எவரும் மறுக்க முடியாது. ஆனால் எண்ணிக்கையில் இவரளவு இல்லாவிட்டாலும், மிகக் குறைந்த அளவிலேயே மிகச் சிறந்த சிறுவர் பாடல்கள் எழுதிய கவிஞர்களும் இருக்கத்தான் செய்தார்கள்.
அழ.வள்ளியப்பாவிற்கு முன்பாகக் குழந்தைக் கவிஞர்கள் இருந்திருக்கவில்லையா என எண்ணிப் பார்க்கும் போது, நமக்கு பாரதியார், பாரதிதாசன், தேசிய விநாயகம்பிள்ளை போன்றவர்களே நினைவிற்கு வருகின்றனர். இவர்கள் தமிழின் மிகப் பெரிய கவிஞர்கள். இவர்கள் எழுதிய சில பாடல்களை, குழந்தைப் பாடல்கள் எனப் போற்றிப் பாராட்டி, இவர்கள் குழந்தைகளுக்காகவும் பாட்டு எழுதினார்கள் எனக் கூறுவோரும் தமிழ்நாட்டில் ஏராளம் உண்டு.
குழந்தைப் பாடல்கள் என்பது இரண்டு வகையானது. ஒன்று, குழந்தைகளைப் பார்த்து பெரியவர்கள் பாடுவது; மற்றொன்று பாடல்களை உள்வாங்கி ரசித்து மகிழ்ந்து குழந்தைகள் தமக்குத் தாமே பாடிக் கொள்வது. இந்த இரண்டின் வேறுபாட்டையும் முதலில் புரிந்து கொள்ளவேண்டும். மேற்கூறிய கவிஞர்கள் இயற்றிய குழந்தைப் பாடல்களுக்கும், அழ.வள்ளியப்பா இயற்றிய குழந்தைப் பாடல்களுக்கும் ஏராளமான வேறுபாடு உண்டு.
ஓடி விளையாடு பாப்பா – நீ
ஓய்ந்திருக்கலாகாது பாப்பா
கூடி விளையாடு பாப்பா
ஒரு குழந்தையை வையாதே பாப்பா
என்கிற பாரதியாரின் பாட்டு மிகவும் பிரபலமான குழந்தைப் பாடலாக ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது. இந்தப் பாட்டில் கவிஞர், பாப்பாவைப் பார்த்துப் பாடுகிறார். இப்பாடலை எந்தப் பெரியவர்கள் வேண்டுமானாலும் குழந்தைகளைப் பார்த்துப் பாடிவிடலாம். ஆனால், இதே பாட்டை ஒரு குழந்தை பாடுவதாகக் கற்பனை செய்து கொள்ளுங்கள். அது ஒரு குழந்தை மற்றொரு குழந்தைக்குக் கூறும் அறிவுரை போலத் தோன்றுவதாகாதா? ஒரு குழந்தை இன்னொரு குழந்தைக்கு இப்படி உபதேசம் செய்யமுடியுமா? இப்படி அமைந்துவிட்ட பாடல்களை, எப்படி குழந்தைப் பாடல்களென ஏற்றுக் கொள்ள இயலும்? சற்று சிரமம்தான்!
பாவேந்தர் பாரதிதாசன்,
‘தலைவாரி பூச்சூடி உன்னை
பாடசாலைக்குப் போவென்று சொன்னாள்
உன் அன்னை’
என பாப்பாவைப் பார்த்துப் பாடுகிறார்.
‘தம்பியே பார், தங்கையே பார்
சைக்கிள் வண்டி இதுவே பார்
காலாலே மிதிப்பதனால்
கடும் விசையில் சென்றிடும் பார்’
என்று தேசிக விநாயகம் பிள்ளை குழந்தைகளை நோக்கிப் பாடுகின்றார்.
என்ன செய்ய? இவற்றையெல்லாம் நம் தமிழர்கள் குழந்தைப் பாடல்கள் என ஏற்கெனவே ஒப்புக் கொண்டாகிவிட்டது! குழந்தைகளைப் பார்த்துப் பாடும் பாடல்களை ஒருக்காலும் குழந்தைப் பாடல்கள் என ஏற்றுக் கொள்ள முடியாது. குழந்தைகளைப் பார்த்துப் பாடுவதைத் தவிர்த்து, இயற்றப்பட்ட பாடல்களை குழந்தைகளே அனுபவித்துப் பாடும் விதத்தில் அவர்களுக்குப் பிடித்தமான அம்சங்களை உள்ளடக்கி, சற்று சந்தத்தையும் நகைச்சுவையையும் கூட்டி வைத்துவிட்டால், குழந்தைகளின் ஆனந்தத்திற்கு அளவே இருக்காது.
அந்த வகையில், முதன் முதலில் குழந்தைகளே அனுபவித்துப் பாடும் விதமாகக் குழந்தைப் பாடல்களை இயற்றியவர் அழ.வள்ளியப்பா தான் என்பதில் எவ்விதச் சந்தேகமும் இல்லை. குழந்தைப் பாடல்தானே என நினைத்துவிடக் கூடாது. குழந்தைகளுக்கு எழுதுவது என்பது லேசான காரியமல்ல. குழந்தைகளின் மன உலகத்தில் நுழைந்து விடுவதும் அப்படியொன்றும் எளிதான காரியமுமல்ல. அதற்கு எழுதுபவர்களின் மன வார்ப்பு, குழந்தைகள் மேல் அவர்கள் காட்டும் அக்கறை, கனிந்து, குழைந்து வரவேண்டும். அது ஒரு தனிக் கலை.
மிகச் சிறந்த குழந்தைப் பாடல்கள் பலவற்றையும், மிகச் சாதாரணமான குழந்தைப் பாடல்களையும் அழ.வள்ளியப்பா இயற்றியிருக்கார். ஒரு கட்டத்தில் இவர் ஒருவர்தான் குழந்தைப் பாடல்களை எழுத முடியும் என்கிற சூழ்நிலையும் இருப்பது போன்ற தோற்றம் கூட நிலவியது.
1922இல் பிறந்த அழ.வள்ளியப்பா, ஆரம்பத்தில் சக்தி, டமாரம், பாலர்மலர், சங்கு போன்ற பத்திரிகைகளில் குழந்தைப் பாடல்கள் எழுதினார். இவைகள் 1940-50 காலகட்டம் எனக் கூறலாம். 1951இல், “பூஞ்சோலை” எனும் ஒரு சிறுவர் பத்திரிகையை ஆரம்பித்து, அதற்கு ஆசிரியராகவும் இருந்திருக்கிறார். இதன் பிறகே, வேறு பல குழந்தைக் கவிஞர்கள் எழுத்துலகத்தில் நுழைந்தார்கள். அவர்களில் கிருஷ்ணன் நம்பி (சசிதேவன்), தம்பி ஸ்ரீநிவாசன், லெமன், பூவண்ணன் போன்றோர் குறிப்பிடும்படியானவர்கள்.
இவர்களில் மிக முக்கியமானவராக கிருஷ்ணன் நம்பியைத்தான் சொல்லவேண்டும். மற்றவர்கள் எல்லாம் இவருக்குப் பிறகுதான். 1950இல், “கலைமகள்” பத்திரிகை நிறுவனத்தார் குழந்தைகளுக்கென ‘கண்ணன்’ என்கிற சிறுவர் இதழொன்றை ஆரம்பித்தார்கள். அதன் ஆசிரியர் ‘ஆர்வி’. அந்தப் பத்திரிகையின் இரண்டாவது இதழில் கிருஷ்ணன் நம்பி எழுதிய ‘பிள்ளையாரே வாரும்’ என்கிற சிறுவர் கவிதை முதன்முதலில் பிரசுரம் ஆயிற்று. இது கிருஷ்ணன் நம்பி எழுதிய முதல் சிறுவர் கவிதை. பத்திரிகையாளர்களுக்கு ஒரு நல்ல குழந்தைக் கவிஞர் கிடைத்து விட்ட திருப்தியில், நம்பியிடம் மேலும் பல கவிதைகளை எழுதி அனுப்புமாறு உற்சாகப்படுத்தினார்கள். அப்போது நம்பிக்கு வயது பதினெட்டே ஆகியிருந்தது. இரண்டாவது சிறுவர் கவிதையாகச் ‘சிரிக்கும் சிங்காரி’ என்கிற கவிதை பிரசுரம் கண்டது. இப்படியாகச் சுமார் முப்பது கவிதைகள் அளவில் ‘கண்ணன்’ பத்திரிகையில் வெளிவந்தது. ஆசிரியர் ‘ஆர்வி’யின் தூண்டுதல் இதற்கு முக்கியமான காரியமாக இருந்தது என்று சொல்லலாம்.
நம்பி சுமார் ஐந்து அல்லது ஆறு வருஷங்கள் ‘கண்ணன்’-இல் சிறுவர்களுக்கான கவிதைகளை எழுதி வந்த காலத்தில்தான் அழ.வள்ளியப்பா ‘கண்ணன்’ பத்திரிகைக்குப் போட்டியாக ‘பூஞ்சோலை’ என்கிற சிறுவர் மாத இதழை 1951இல் ஆரம்பித்தார். பூஞ்சோலை இதழும், கண்ணன் இதழைப் போலவே சிறப்பான சிறுவர் பத்திரிகையாக விளங்கியது. ஆனால், பூஞ்சோலையில் நம்பியின் ஒரு கவிதை கூட வெளியாகவில்லை. அதில் நம்பிக்கு ஒரு போதும் வருத்தம் இருந்ததில்லை. மாறாக அழ.வள்ளியப்பாவை அவர் மிகவும் மரியாதையுடன் நேசித்தே வந்தார்.
நம்பி, ‘கண்ணன்’-இல் சிறுவர் கவிதை எழுதுவதை நிறுத்திய பிறகு அந்த இடத்திற்கு “லெமன்” என்கிற பெயரில் குழந்தைக் கவிஞர் ஒருவர் வந்து சேர்ந்தார். இவரும் அருமையான பல குழந்தைக் கவிதைகளை எழுதியுள்ளார். ஆனால், இவரது பாடல்கள் புத்தக வடிவில் வந்திருக்கிறதா? இவர் யார்? என்கிற விவரங்கள் எல்லாம் கிடைப்பதில்லை என்பது மிகவும் துரதிர்ஷ்டம்.
ஆக, காலத்தால் வள்ளியப்பாவிற்குப் பிறகு குழந்தைப் பாடல்களை இயற்ற ஆரம்பித்த தரமான குழந்தைப் பாடலாசிரியராக கிருஷ்ணன் நம்பியையே கொள்ளவேண்டும். அவ்வகையில் நம்பி, வள்ளியப்பாவின் சமகால குழந்தைக் கவிஞர் என்கிற இடத்தையும் பிடித்துக் கொள்கிறார்.
நம்பி குழந்தைகளுகென்ன எழுதிய பாடல்கள் 39 தான். இவரது குழந்தைக் கவிதைகளை, 1965இல் தமிழ்ப் புத்தகாலயம், “யானை என்ன யானை” என்கிற பெயரில் ஒரு புத்தகமாக வெளியிட்டது. இதற்கு அழ.வள்ளியப்பா ஒரு அருமையான முன்னுரையை எழுதியிருந்தார்.
இதே “யானை என்ன யானை” என்கிற பெயரில் நம்பியின் அனைத்துக் குழந்தைப் பாடல்களையும் உள்ளடக்கி குன்னாங் குன்னாங்குர் என்கிற சிறுவர் அமைப்பும், காலச்சுவடு பதிப்பகமும் இணைந்து 2004 இல் நல்ல பல சித்திரங்களுடன் மறுபடியும் பிரசுரம் செய்தார்கள். இப்புத்தகம் இப்பொழுது கிடைக்குமா எனத் தெரியவில்லை.
நம்பியைப் பற்றி எழுதிய பலரும், நம்பி குழந்தைக் கவிதைகள் எழுதியிருக்காரென மேம்போக்காக ஏதோ சொல்லியிருக்கிறார்களே தவிர, அவரது குழந்தைப் பாடல்களின் தரம் பற்றியோ, அவற்றை எழுத நம்பிக்கு இருந்த ஆற்றல் பற்றியோ, அவர்கள் விரிவாக எதுவும் சொல்லிவிடவில்லை. ஆனால் சுந்தர ராமசாமி, சிறியதாகவே இருந்தாலும் சற்று எழுதியிருக்கார். சுந்தர ராமசாமியின் இந்தப் பதிவுகள் மிக முக்கியமானவை.
“குழந்தைக் கவிதைகள் எழுதுவதில் நம்பி மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்தார். குழந்தைகளை உய்விக்கும் உத்தம குணத்தின் வெளிப்பாடாக அவர் குழந்தைக் கவிதைகளை எழுதவில்லை. அவர்களுடன் பகிர்ந்து கொள்ள, அவருக்கு இருந்த ஆசையினால் அவர் எழுதினார்.”
“நம்பியின் குழந்தைக் கவிதைகளையும், அவற்றை அவர் எழுதிக் கொண்டிருந்த காலத்தில் அவரை விடவும் பல மடங்கு புகழ் பெற்றிருந்த வேறு பல குழந்தைக் கவிதைகளையும் அன்று படித்துப் பார்த்த பொழுது, தமிழிலேயே சிறப்பான குழந்தைக் கவிதைகள் எழுதியிருப்பவர் நம்பி தான் என்றும், குழந்தைக் கவிதைகளைப் பற்றி அவருக்குத்தான் விவேகமான அடிப்படைச் சிந்தனைகள் இருக்கின்றன என்றும் எனக்குப் பட்டது.”
“அவர் தன்னுடைய அக்கறைகளைக் குழந்தைகள் மேல் திணிப்பதைத் தவிர்த்து, அவர்கள் மிகவும் விரும்பும் உலகத்தை அவர்களுக்குப் படைத்துத் தந்தார். அற ஒழுக்கங்களையும், உபதேசங்களையும் தம் பாடல்களில் தவிர்க்கத் தெரிந்து கொண்டிருந்தார். அதே சமயம், வாழ்க்கைக் காட்சியொன்றைக் குழந்தைகள் கண் முன் எழுப்பி, அதன் மூலம் அவர்களுடைய நல் உணர்ச்சிகளை மறைமுகமாகத் தூண்டுவதில் வெற்றியும் பெற்றிருக்கிறார்.”
இந்தச் சூழலில் வள்ளியப்பாவின் சில குழந்தைக் கவிதைகளையும், நம்பியின் சில குழந்தைக் கவிதைகளையும் ஒப்பிட்டுப் பார்க்கும்பொழுது, சுந்தர ராமசாமியின் பதிவுகளில் காணும் உண்மைகளை நம்மால் புரிந்து கொள்ள முடியும்.
யானையைப் பற்றி ‘கோயில் யானை’ என்கிற தலைப்பில் வள்ளியப்பா ஒரு கவிதை எழுதியிருக்கிறார்.
‘டிங் டாங் டிங் டிங்
டிங் டாங் டிங் டிங்
கோயில் யானை வருகுது
குழந்தைகளே வாருங்கள்
டிங் டாங் டிங் டிங்
டிங் டாங் டிங் டிங்
மணியை ஆட்டி வருகுது
வழியை விட்டு நில்லுங்கள்
டிங் டாங் டிங் டிங்
டிங் டாங் டிங் டிங்
ஆடி ஆடி வருகுது
அந்தப் பக்கம் செல்லுங்கள்
ஊரைச் சுற்றி வருகிறது
ஓரமாக நில்லுங்கள்
டிங் டாங் டிங் டிங்
டிங் டாங் டிங் டிங்
கோயில் யானை வருகுது
குழந்தைகளே பாருங்கள்
குழந்தைகளே பாருங்கள்
குதித்து ஓடி வாருங்கள்
டிங் டாங் டிங் டிங்
டிங் டாங் டிங் டிங்’
ஒரு கோயில் யானை கழுத்தில் மணி கட்டியபடி நடந்து வரும் காட்சியைக் குழந்தைகளுக்குச் சொல்கிறார் கவிஞர். இதுவும் குழந்தைகளை நோக்கிப் பாடும் பாடல் வகையில்தான் வரவேண்டும்.
‘டிங் டாங் டிங் டிங்’ என்பது யானையின் கழுத்தில் கட்டியிருக்கும் மணியிலிருந்து வரும் ஓசையைக் குறிக்கிறது. இது ஓசை நயத்துக்காகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இவற்றை எடுத்து விட்டுப் பார்த்தால், கவிதையில் மீதமிருக்கும் வரிகள் யானை வரும் செய்தியைச் சொல்வதைத் தவிர, வேறு எதையும் சொல்வதாக இல்லை. இந்தச் செய்திகளை எல்லாம் எடுத்துவிட்டு, வெறும் ‘டிங் டாங் டிங் டிங்’ என்று 10 வரிகள் எழுதிவிட்டு, ‘கோயில் யானை வருகுது – குழந்தைகளே பாருங்கள்’ என்று சொல்லியிருந்தாலும் கூட, பாடலில் இடம்பெற்றுள்ள ஓசை நயத்திற்காகக் குழந்தைகள் இந்தப் பாடலை விரும்பியிருக்கக்கூடும். செய்தி வெறும் யானை வருவதுதான்.
இப்பொழுது, நம்பி எழுதியிருக்கும் “யானை”க் கவிதையைப் பார்ப்போம்.
‘யானை என்ன யானை?
யானை கொம்பன் யானை.
யானை மீது யாரோ?
யானை மீது ராஜா.
யானை எங்கே போச்சு?
யானை செத்துப் போச்சு.
ராஜா என்ன ஆனார்?
நாட்டு மன்னர் ஆனார்.
நாட்டு மன்னர் எங்கே?
நாட்டு மன்னர் நாமே.
நாமும் அவரும் ஒன்றோ?
நம்முள் ஒருவர் ராஜா.’
இப்பொழுதுள்ள குழந்தைகளுக்கு ராஜா என்றால், ஒருவேளை இளையராஜா, பாரதிராஜா போன்றவர்களைத் தெரிந்திருக்கலாம், அந்தக் காலத்தில் அதாவது சுதந்திரத்துக்கு முந்தைய காலங்களில், இந்தியாவில் பல ராஜ்ஜியங்கள் மன்னராட்சியில் இருந்தன. இந்த மன்னர்களைத்தான் ராஜா என அழைப்பது வழக்கம். இந்த ராஜாக்கள் யானை மீது பவனி வருவார்கள். போர்க்காலத்தில் யானை மீது அமர்ந்து போர் புரிவார்கள் என்பதெல்லாம் பாட்டி சொன்ன கதை. அதை, இக்கவிதையில் காட்சிப்படுத்திச் சொல்கிறார் கவிஞர். இக்கவிதையைப் படித்துவிட்டு, குழந்தைகள் பெரியவர்களிடம் கேட்பதற்கு ஏராளமான கேள்விகள் உள்ளன. ‘ராஜா என்றால் யார்?’ எனக் கேட்கலாம்; ‘அவர் ஏன் யானை மீது வந்தார்?’ எனக் கேட்கலாம்; ‘கொம்பன் யானை என்றால் என்ன?’ என்றும் கேட்கலாம்; ‘ராஜா எப்படி நம்முள் ஒருவராக மாறினார்?’ எனக் கேட்கலாம். பொறுமையிருந்தால் பெற்றோர்களோ பெரியவர்களோ, குழந்தைகளுக்கு இக்கவிதை மூலம் ஏராளமான செய்திகளைச் சொல்ல முடியும். அதோடு மக்களாட்சித் தத்துவத்தை விளங்க வைக்க வகை செய்யும், ஆற்றலும் இக்கவிதைக்கு உண்டு. இக்கவிதையில் யானை ஒரு குறியீடு. அந்நிய ஆட்சி என்கிற யானையின் தயவில் உலா வந்த ராஜாக்கள், அந்த யானை (வெள்ளையர்) நாட்டை விட்டு விரட்டப்பட்ட பின் முன்பு பவனி வந்த ராஜாக்கள், எப்படி நம் எல்லோரையும் போல் ஒரு இந்நாட்டு மன்னனாக மாற்றம் கொண்டார்கள் என்பது மிக அருமையான வெளிப்பாடாகக் கவிதையில் சொல்லப்பட்டிருக்கிறது.
யானைக் கதை முடிஞ்சு போச்சு. இப்போ பூனைக்கு வருவோம். அழ.வள்ளியப்பாவின் பூனைப் பாட்டு.
‘பூனையாரே பூனையாரே
போவெதெங்கே சொல்லுவீர்?
கோலிக்குண்டு கண்கள்
கூர்ந்து ஏனோ பார்க்கிறீர்?
பஞ்சு கால்களாலே நீர்
பையப் பையச் சென்றுமே
என்ன செய்யப் போகிறீர்?
எலி பிடித்துத் தின்னவா?
அங்கு எங்கே போகிறீர்?
அடுப்பங்கரையை நோக்கியா?
சட்டிப் பாலைக் குடிக்கவா?
சாது போல செல்கிறீர்?
சட்டிப் பாலும் ஐயோ ஐயோ
ஜாஸ்தியாகக் கொதிக்குதே!
தொட்டால் நாக்கைச் சுட்டிடும்
தூர ஓடிப் போய்விடும்.’
இனி கிருஷ்ணன் நம்பியின் பூனைப் பாடலைப் பார்ப்போம்.
‘அம்மா அம்மா ஓடி வா!
அதிசயத்தைப் பார்க்க வா.
பொம்மை வைக்கும் அறையிலே
பூனைக்குட்டி பார்க்க வா!
அஞ்சு பூனைக்குட்டிகள்
அங்கு விளையாடுதே!
குஞ்சு பூனைக்குட்டிகள்
கூடி விளையாடுதே!
பட்டுப் போன்ற மேனியை
பக்கத்திலே சென்று நான்
தொட்டுப் பார்க்கத் தோணுதே
துணைக்கு நீயும் வேணுமே.
அஞ்சு பூனைக்குட்டிக்கும்
அம்மா பூனை காவலாய்
நிற்குது நீ, வந்து பார்;
நெருங்கத் துணிச்சல் இல்லையே!’
பசுவைப் பற்றி இருவருமே கவிதை இயற்றியிருக்கிறார்கள்.
அழ.வள்ளியப்பாவின் ‘பசு’ பாடல்,
பசுவே பசுவே உன்னை நான்
பார்த்துக் கொண்டே இருக்கிறேன்.
(‘சரி’)
வாயால் புல்லைத் தின்கின்றாய்
மடியில் பாலைச் சேர்க்கின்றாய்
(‘இதுவும் சரி’)
சேர்த்து வைக்கும் பாலையெல்லாம்
தினமும் நாங்கள் கறந்திடுவோம்.
கறந்து கறந்து காப்பியிலே
கலந்து கலந்து குடித்திடுவோம்.
(என்ன சுயநலம் படைத்த மனிதர்கள் நாம்?)
ஆக, பசு பாலைத் தருவது என்பது மனிதர்களாகிய நாம் எல்லோரும் காபி குடிப்பதற்குத்தான். இது சுயநலம் சார்ந்த மனித மனதின் வெளிப்பாடு. பசு தனது கன்றுக்குக் கொடுக்க வேண்டியது போகத்தான் மனிதர்களுக்கு என்பதோ, பசு மனிதர்களுக்காகச் செய்யும் தியாகத்தைப் பற்றிய சிந்தனையோ எதுவும் தேவையில்லை போலும்.
நம்பியின் பசு பாடலைப் பாருங்கள்
பாப்பா:- பாலே, பசுவின் பாலே
பசுவின் எண்ணம் என்ன?
பால்:- பசுவின் எண்ணம் தன்னைப்
பகரப்போமோ பாப்பா!
இருக்கும் பாலை எல்லாம்
இரங்கிக் கொடுக்கும் எண்ணம்.
கறக்கக் கறக்கப் பாலைக்
கறவாது ஈயும் எண்ணம்
கன்றின் வயிற்றுக்கின்றிக்
கறக்கும் மனிதர் மீதும்
கருணை காட்டும் எண்ணம்;
கவடில்லா நல்லெண்ணம்.
பாப்பா:- மனிதர்க்கில்லா எண்ணம்
மாட்டுக்கிருக்கும் விந்தை!
ஈசன் செய்த விந்தை
இணையில்லாத விந்தை!
குழந்தைகளுக்கு யானை, பூனை, குரங்கு, புலி, சிங்கம் போன்ற விலங்குகளைப் பற்றிய செய்திகள் எல்லாம் மிகவும் ஆச்சரியமுள்ளதாகவும், மகிழ்விப்பதுமாகவே இருந்து வருகிறது. இந்த இரு கவிஞர்களுமே தங்கள் கவிதைகளில் பல விலங்குகள் பங்கு பெறும் காட்சிகளைச் சொல்லியிருக்கிறார்கள். ஆனால், அவை குழந்தைகளுக்கு எவ்வாறு சொல்லப்பட்டிருக்கிறது என்பது மிகவும் முக்கியம்.
நம்பியின் கவிதைகளில் நகைச்சுவை அம்சம் சற்றுத் தூக்கலாக இருக்கும். குழந்தைகளுக்கு உபதேசம் செய்வதை அறவே தவிர்த்தவர் அவர். குழந்தைகளுக்குப் பல செய்திகளையும் கதைகளையும், அவர்கள் ரசித்து மகிழ்வேண்டுமென்கிற, அவரது குழந்தைகள் பேரிலுள்ள அலாதியான பிரியத்தின் வெளிப்பாடாகக் கவிதை வடிவில் உருவம் கொண்டது.
நரியைப் பற்றி வள்ளியப்பா எழுதியிருக்கிறாரா என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால், நம்பி எழுதியிருக்கார். தந்திரகார நரி தனது தந்திரத்தால் காகத்திடமிருந்த வடையை எப்படித் தட்டிச் சென்றதென நமது பாட்டிமார்கள் காலங்காலமாக காகமும் நரியும் கதையை நம் குழந்தைகளுக்குச் சொல்லி வருகிறார்கள்.
‘நரியும் காகமும்’ என்கிற தலைப்பில் நம்பி ஒரு கவிதை எழுதியிருக்கிறார். பின் நவீனத்துவம் என்பது சிறுகதைகளுக்கு மாத்திரமல்ல, சிறுவர் கவிதைகளிலும் கொண்டு வரமுடியுமென அறுபது வருடங்களுக்கு முன்பே இந்த நரியும் காகமும் கவிதையின் மூலம் சொல்லியுள்ளார்.
நரியும் காகமும்
நரி:- முறுக்கும் வாயுமாக
முருங்கை மரத்தின் மீது
இருக்கும் காக்கையாரே
எனக்குப் பாதி போடும்.
காகம்:- முறுக்குப் பாதியென்ன
முழுசும் எடுத்துக் கொள்ளும்
கடிக்க முடியவில்லை;
கல்லும் தோற்றுப் போகும்!
என்று சொல்லி காகம்
எறிந்து விட்ட முறுக்கு
நரியின் மீது பட்டு
நரி இறந்து போச்சு!
நமக்குப் பயிற்றுவிக்கப்பட்டதற்கு மாறாக, இக்கவிதையில் காகம் விட்டெறிந்த முறுக்கு நரியின் மேல் பட்டு நரி செத்துப் போகிறது. இதிலுள்ள நகைச்சுவையை நாம் புரிந்து கொள்ளவேண்டும். ஆகி வந்த கற்பனையை மீறி, ஒரு புதிய கற்பனை.
‘வண்டி வருகுது’ எனும் ஒரு பாடலை எழுதியிருக்கிறார் அழ.வள்ளியப்பா. அதில் மாட்டு வண்டி, குதிரை வண்டி, சைக்கிள் வண்டி, பேருந்து, இரயில் போன்ற வண்டிகளின் வருகையைப் பற்றிக் கூறுகிறார் கவிஞர். அவைகள் எப்படி வருகிறது எனும் பொழுது, அதற்குப் பயன்படுத்திய பகுதிகள் கவிதையின் ஓசை நயத்துக்காகப் பயன்படுத்தப்பட்டவை. குழந்தைக் கவிதைகளில் ஓசை நயம் மிகவும் முக்கியமென இருவருமே உணர்ந்திருக்கிறார்கள். எனவே ஓசை நயத்திற்கு முக்கியமளித்து எழுதப்பட்ட பாடல்தான் அழ.வள்ளியப்பாவின் ‘வண்டி வருகுது’ பாடல்.
வண்டி வருகுது
‘கட கடா கட கடா வண்டி வருகுது
காளை மாடு ரெண்டு பூட்டி வண்டி வருகுது
டக் டக் டக் டக் வண்டி வருகுது
தாவித் தாவி ஓடும் குதிரை வண்டி வருகுது
டிரிங் டிரிங் வண்டி வருகுது
சீனு ஏறி ஓட்டும் வண்டி வருகுது
பாம் பாம் பாம் பாம் வண்டி வருகுது
பாய்ந்து வேகமாக வண்டி வருகுது
குப் குப் குப் குப் வண்டி வருகுது
கும்பகோணமிருந்து வண்டி வருகுது.’
நம்பி பல்வேறு வண்டிகளை வள்ளியப்பா போல் தனது பாடலில் பயன்படுத்தாமல். இரயில் வண்டியை மாத்திரமே கையாண்டு ஓசை நயத்துடன் எழுதிய பாடல் ‘ரயிலே வாவா’ பாடல்.
ரயிலே வாவா!
ரயிலே வாவா, ரயிலே வாவா
ரயிலே ரயிலே வா!
கடகட குடுகு, கடகட குடுகு
ரயிலே ரயிலே வா.
கூகூ வென்றே கூய் கூய் என்றே
கூவி முழுங்கியே வா!
வேகம் இன்னும் மிகவே மின்னல்
வேகம் தோற்றிட வா!
படரும் கொடிபோல் வளைந்து வளைந்து
பாயும் ரயிலே வா!
பாம்பின் உடல் போல் நெளிந்து நெளிந்து
பறக்கும் ரயிலே வா!
கொளுத்தும் வெயிலைச் சகித்துக்கொண்டு
குவலயம் சுற்றுகிறாய்
கொட்டும் மழையைச்சட்டை செய்யாமல்
‘குஷி’யாய்ச் செல்லுகிறாய்!
கொட்டும் மழையும் கொளுத்தும் வெயிலும்
கொண்டால் நோய்கள் வரும்!
சற்றும் இதனைச் சிந்தித் தாயோ,
சங்கடம் உணர்ந் தாயோ?
ஊர் ஊராகப் போகும் ரயிலே
உனக்கும் அலுக்காதோ?
ஓயா தொழியா தோடும் உன்றன்
உடலும் வலிக்காதோ?
ஆயிரம் ஆயிரம் மக்களை ஏற்றி
அயராது எங்கணுமே,
போயிடும் உன்னைப் பொறுமைக் கடல்
எனப்
போற்றிடுவேன் ரயிலே!
ரயிலே வாவா, ரயிலே வாவா
ரயிலே ரயிலே வா!
கடகட குடுகு கடகட குடுகு
ரயிலே ரயிலே வா!
இப்படியாக ஒவ்வொரு அழ.வள்ளியப்பாவின் பாட்டிற்கும் எதிர்ப்பாட்டாக நம்பியின் பாடலை மேற்கோள் காட்டுவதல்ல இக்கட்டுரையின் நோக்கம். அது சாத்தியமும் அல்ல. ஒரே விஷயத்தை இரு கவிஞர்கள் எவ்வாறு அணுகினார்கள், அவை குழந்தைகளுக்கு எவ்வாறு எடுத்துச் சொல்லப்பட்டன – இரு கவிஞர்களின் மன ஓட்டமும் எவ்வாறு அக்கவிதை மூலம் வெளிப்பட்டது என்பதை லேசாகக் கோடிட்டுக் காட்டும் வகையில் ஒரு சிறிய ஒப்பீடு செய்யப்பட்டது. ஆனால், இருவருமே தங்கள் அளவில் மிகப் பிரமாதமான சிறுவர் கவிதைகள் இயற்றிருக்கிறார்கள்.
நம்பியின் குழந்தைக் கவிதைகளில், நகைச்சுவை அம்சம் சற்று தூக்கலாக இருக்கும். இயல்பாகவே மிகுந்த நகைச்சுவை உணர்வு மிக்க நம்பிக்கு அவ்வாறு எழுதுவது மிகவும் சுலபமாகவே கை கூடி வந்திருக்கிறது. அவரது நகைச்சுவைப் பாடல்களின் உச்சமாக, “ஊருக்கெல்லாம்” எனும் கவிதையினைச் சான்றாகக் கூறலாம்.
ஊருக்கெல்லாம்
ஊருக்கெல்லாம் பால் கொடுப்பார்
உலகநாதக் கோனார்;
உலகநாதக் கோனாரிடம்
உள்ள பசு ஒன்றே.
உள்ள பசு கறக்கிற பால்
ஒரு படிதான் தேறும்;
ஒருபடி பால் பலபடியாய்
ஊருக்கெல்லாம் ஓடும்!
ஓடும் பாலைப் பிடிப்பதற்கு
ஊர்ஜனங்கள் கூட்டம்;
உனக்கு முந்தி, எனக்கு முந்தி
என்று பலர் ஆட்டம்.
ஒருபடியால் ஊருக்கெல்லாம்
படியளக்கும் கோனார்
உலகத்திற்கே படியளப்பார்
ஒருபடி பால் கொண்டு.
ஊருக்குள்ளே குளம், கிணறு
ஒன்றிரண்டு உண்டு;
உலகநாதக் கோனார் வீட்டில்
ஊறும் கிணறோ மூன்று.
சமீபத்தில் வைகைப் புயல் நடித்து ‘தெனாலிராமன்‘ என்றொரு படம் வெளிவந்தது. அதில் வடிவேலு நடித்த ஒரு காட்சியை ஐம்பது அறுபது வருடங்களுக்கு முன்னால், ஒரு குழந்தைப் பாடல் வாயிலாக நம்பி எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார். பாடல் இதுதான்.
ஆனை வேணுமென்று – குழந்தை;
அழுது கூச்சலிட்டான்.
ஆனை கொண்டு வந்தார் – ஆனால்
அழுகை தீரவில்லை.
பானை வேணு என்றான் – குழந்தை;
பானை கொண்டு வந்தார்.
ஆனை பானை இரண்டும் – வந்தும்
அழுகை ஓயவில்லை.
இன்னும் அழுவதேனோ – குழந்தாய்
இனியும் என்ன வேணும்?
என்று கேட்ட போது – குழந்தை
ஏங்கி அழுது கொண்டு,
இந்தப் பானைக்குள்ளே – அந்த
ஆனை போக வேணும்!
என்று சொல்லுகின்றான் – ஐயோ
என்ன செய்ய முடியும்!
இவை போன்று, நகைச்சுவைக் கவிதைகள் மேலும் பல எழுதியிருக்கிறார் நம்பி.
வட்டமான தட்டு
தட்டு நிறைய லட்டு
லட்டு மொத்தம் எட்டு
எட்டில் பாதி விட்டு
எடுத்தான் மீதி கிட்டு
மீதம் உள்ள லட்டு
முழுதும் தங்கை பட்டு
போட்டாள் வாயில் பிட்டு
கிட்டு நான்கு லட்டு
பட்டு நான்கு லட்டு
மொத்தம் தீர்ந்ததெட்டு
மீதம் காலித் தட்டு
என்று அழ.வள்ளியப்பா எழுதியதைப் போல், டி.ராஜேந்தர் பாணியில் கவிதைகள் எதையும் நல்லவேளை நம்பி படைக்கவில்லை. அவரால் அதெல்லாம் சாத்தியமும் அல்ல. ஆனால் “விளக்கின் வேண்டுகோள்” ஒரு பாடல் எழுதியிருக்கார். இதுவொரு முக்கியமான பாடல்.
விளக்கின் வேண்டுகோள்
காற்று மாமா காற்று மாமா
கருணை செய்குவீர்!
ஏற்றி வைத்த ஜோதி என்னை
ஏன் அணைக்கிறீர்?
சின்னஞ்சிறு குடிசை இதைச்
சிறிது நேரம் நான்
பொன்னிறத்துச் சுடரினாலே
பொலியச் செய்குவேன்.
ஏழைச் சிறுவன் என்னை நம்பிப்
பாடம் படிக்கிறான்;
ஏழு மூணும் பத்து என்று
எழுதிக் கூட்டுறான்.
அன்னை அதோ அடுப்பை மூட்டிக்
கஞ்சி காய்ச்சுகிறாள்;
என்ன ஆச்சு என்று பானைக்
குள்ளே பார்க்கிறாள்.
படிக்கும் சிறுவன் வயிற்றுக்குள்ளே
பசி துடிக்குது;
அடிக்கொருதரம் அவனது முகம்
அடுப்பைப் பார்க்குது.
காச்சும் கஞ்சி குடிக்க வெளிச்சம்
காட்டவேண்டாமோ?
ஆச்சு, இதோ ஆச்சு என்னை
அணைத்து விடாதே!
ஏழைச் சிறுவனுக்கு அறிவுப்பசி. அதைத் தீர்த்துக் கொள்வதற்காக விளக்கு வெளிச்சத்தில் பாடம் படிக்கிறான். அவன் படிப்பதற்கான ஒளியை அந்த விளக்கு அவனுக்கு அளிக்கிறது. சிறுவனின் வயிற்றுப் பசியைப் போக்க அவனது தாயார் அடுப்பிலே கஞ்சி காய்ச்சுகிறாள். அச்சமயம் இந்த்தக் காற்று வந்து தொந்தரவு பண்ணுகிறது. படிப்பதற்கு வெளிச்சம் காட்டும் விளக்கிற்கு காற்று தன்னை அணைத்துவிடுமோ என்கிற பயம். அணைத்து விட்டால் சிறுவன் பாடம் படிக்க இயலாமல் போய்விடுமே என்கிற பரிதவிப்பு அந்த விளக்கிற்கு. அதே சமயம் சிறுவனின் வயிற்றுப் பசியைப் போக்கிட, தாயார் கஞ்சியும் காய்ச்சியாகவேண்டும். விளக்கிற்குப் பரிதாபம் ஏற்பட்டு காற்றை வேண்டுவதாகக் கற்பனை. அதை நம்பி எவ்வளவு கலாபூர்வமாக இக்கவிதையில் நிகழ்த்திக் காட்டியிருக்கிறார் என கவிதையைப் படித்தால் தெரிந்து கொள்ளலாம்.
இக்கவிதையில் மகிழ்ந்த கி.ராஜநாராயணன், இதற்கென்றே “கவியின் கருணை” என்கிற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். அக்கட்டுரையில் இருந்து சில வரிகள்.
“நாஞ்சில் நாட்டுக் கவிதைகளுக்கு, பாரம்பரியமான சுகம் ஒன்று உண்டு. தமிழுக்கு நாஞ்சில் நாடு கொடுத்திருக்கிற கொடை அதிகம்.
இந்தப் பாடலின் உருவத்தில் ஒரு விசேஷம் இருக்கிறது.ஒரு குடிசையில் உள்ள ஏழ்மையைக் கவிஞன் பார்க்கிறான். அவன் மனசு பதைக்கிறது (உண்மையிலேயே இப்படியொரு காட்சி பார்த்தவனுக்கே அது புரியும்). பொதுவாக நம் கவிஞர்கள் இப்படியொரு காட்சியைக் கண்டுவிட்டால், துள்ளி வேஷ்டியை வரிந்து கட்ட ஆரம்பித்துவிடுவார்கள். அந்த இடத்திலேயே உட்கார்ந்து முக்காடு போட்டு அழ ஆரம்பித்துவிடுவார்கள்.
வெளியீட்டு அழகும் உருவத்தின் மகிமையும் அறிந்த கவிஞர் கிருஷ்ணன் நம்பி அவர்கள் தம் உள்ளத்தில் சுரக்கும் கருணையை அந்த விளக்கின் மேல் ஏற்றிச் சொல்லுகிறார். அது நம் மனசைத் தொடுகிறது. இந்தப் பாடலின் உயிரே இந்த உருவத்தில்தான் அமைந்திருக்கிறது. அந்த விளக்கு பேசும் தொனி, அச்சு அசல் ஒரு குழந்தையின் உள்ளப்பாங்கைக் கொண்டிருக்கிறது. இந்த லோகத்திலுள்ள கள்ளங்களையெல்லாம் அறியாத ஒரு குழந்தையைப் போலவே அது பேசுகிறது. அந்தப் பேதைமை நம் கண்களைக் குளமாக்கிவிடுகிறது. பாடல் பிறந்த குறிக்கோள் நிறைவேறிவிடுகிறது.
எப்பொழுதும் வெற்றி கவிஞனுக்குத்தான்.”
தமிழில் எழுதப்பட்ட சிறுவர் பாடல்களிலேயே மிகச் சிறந்த பாடலாக இந்தப் பாடலைக் கூறுவேன் என சுஜாதா இக்கவிதையைப் பற்றி ஆனந்த விகடனில் ‘கற்றதும் பெற்றதும்’ பகுதியில் ஒருமுறை பதிவு செய்திருக்கிறார்.
ஆக, இம்மாதிரியான பாடல்களை எல்லாம் நம்பி எழுதியிருந்தும் கூட, தமிழ் சிறுவர் இலக்கிய உலகில் இவரது பங்களிப்பு பற்றி சரியாகப் பதிவாகவில்லை என்பது வருத்தமான விஷயம். இணையத்தளங்களில் தேடிப் பார்த்தால் சொல்லும்படியாக எதுவுமே காணப்படவில்லை. ஜார்ஜ் என்பவர் எழுதிய தமிழ் இலக்கியம் பற்றிய நீண்ட கட்டுரையில், பல பெயர்களுக்கு இடையிலேயே இவரது பெயரும் also ran என்கிற விதமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
Modern Tamil literature என்கிற தலைப்பில் ஒரு நீண்ட நெடிய கட்டுரை வலையில் கிடைக்கிறது. தொல்காப்பியர் காலம் தொட்டு இன்றைய காலம் வரை இலக்கியத்தின் பல்வேறு வடிவங்களான நாவல், சிறுகதை, நாடகம், சிறுவர் கவிதை எனப் பரந்து விரியும் அக்கட்டுரையில் சிறுவர் இலக்கியம் பற்றி இரண்டே வரிகள். அதில் அழ.வள்ளியப்பாவையும் தேசிக விநாயகம் பிள்ளையையும் பட்டியலிட்டிருக்கிறார் எழுதியிருப்பவர்.
நியாயமாகப் பார்த்தால், இக்கவிதை தமிழ்ப் பாடநூல் எதிலாவது சேர்க்கப்பட்டிருக்கவேண்டும். தமிழில் எழுதப்பட்ட மிகச் சிறந்த சிறுவர் பாடலாகச் சொல்லப்படுகிற பாடலுக்கு, தமிழ்ப் பாடநூலில் இடமில்லை என்பது எழுதிய கவிஞனுக்கு மட்டுமன்று, எழுதப்பட்ட கவிதைக்கும் இழைக்கப்படும் அநீதி. பாடநூல் தயாரிக்கும் வல்லுநர்கள் இக்கவிதையைப் படிக்கவேண்டும்.
ஆக, ஐம்பதுகளில் எழுத ஆரம்பித்து சில வருடங்கள் குழந்தைக் கவிதைகளும், பின் சிறுகதைகளும் எழுதிய கிருஷ்ணன் நம்பி காலமாகி இப்பொழுது நாற்பது வருடங்கள் கழிந்துவிட்டன. இப்படியொரு குழந்தைக் கவிஞர் இருந்தார் என்பதையே அறிந்திராத தமிழ்ச் சமூகத்திற்கு இக்கட்டுரை அவரை ஒரு குழந்தைக் கவிஞராக அறிமுகப்படுத்தும் வகையில் அமைந்துபோவது மிகவும் துரதிர்ஷ்டவசமானதுதான்.
– கிருஷ்ணன் வெங்கடாசலம்