Shadow

28 Years Later விமர்சனம் | 28 YL review

28 Days Later (2002), 28 Weeks Later (2007) ஆகிய படங்களைத் தொடர்ந்து, அவ்வரிசையில் மூன்றாவதாக இப்படம் வெளியாகியுள்ளது. முந்தைய இரு பாகங்களைப் பார்க்காவிட்டாலும் இப்படத்தை நேரடியாகப் பார்க்கலாம். முதல் பாகத்தை இயக்கிய டேனி பாயிலும், திரைக்கதை எழுதிய அலெக்ஸ் கார்லேண்டும் மீண்டும் இப்படத்தில் இணைந்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஆஸ்கார் விருதினைப் பெற்றுக் கொடுத்த ‘ஸ்லம்டாக் மில்லியனர் (2008)’ படத்தை இயக்கியவர் டேனி பாயில் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு கொடுமையான வைரஸ் கிரேட் பிரிட்டனைத் தாக்கி 28 ஆண்டுகளான பின், இப்படத்தின் கதை தொடங்குகிறது. புனித தீவு என்று அழைக்கப்படும் லண்டிஸ்ஃபானில் (Lindisfarne) தனது 12 வயதான மகன் ஸ்பைக்குடன் மெயின்லேண்ட்க்கு ஜோம்பி வேட்டைக்குப் போகிறார் ஜேமி. வேட்டையை வெற்றிகரமாக முடித்துவிட்டுத் திரும்பும் ஸ்பைக், மெயின்லேண்டில் தனியாக ஒரு மருத்துவர் வாழுவது தெரிய வர, உடல்நிலை சரியில்லாத தன் தாய் ஐலாவை அழைத்துக் கொண்டு மீண்டும் மெயின்லேண்டிற்குச் செல்கிறான் ஸ்பைக். ஸ்பைக்கால் அவனது அம்மாவைக் காப்பாற்ற முடிந்ததா, மெயின்லேண்டிலுள்ள ஜோம்பிக்களிடம் இருந்து அவர்கள் தப்பினார்கள் என்பதுதான் படத்தின் முடிவு.

வைரஸால் பாதிக்கப்பட்டிருந்தாலும், ஜோம்பிகளை ஓர் உயிராகப் பார்க்கிறான் ஸ்பைக். “வைரஸ் மூளையைப் பாதித்து சிந்திக்கும் திறனை அழித்துவிடுகிறது. அத்தகையவர்கள் soul இல்லாதவர்கள். அவர்களைக் கொல்வது தவறில்லை” என மகனுக்குப் பாடம் புகட்டுகிறார் ஜேமி. வழக்கமான ஜோம்பிகள் தான் இப்படத்தில் என்றாலும், அவர்களை ஆல்ஃபா என்பவன் தலைமை தாங்குகிறான். வைரஸ் மியூடேட் ஆகி, சில ஜோம்பிகள் அதி புத்திசாலியாகவும், அதி சாமர்த்தியசாலியாகவும் மாறி விடுகின்றன. அவற்றிற்கு மனிதர்கள் ஆல்ஃபா எனப் பெயர் வைக்கின்றனர். அதனிடம் சிக்கினால், உடலில் இருந்து தலையை முதுகெலும்போடு சேர்த்துப் பிடுங்கி விடுகிறது. அது மிருகமானாலும் சரி, மனிதரானாலும் சரி. ஸ்பைக் இரண்டு முறை ஆல்ஃபாவிடம் சிக்கிக் கொள்கின்றான்.

ஒளிப்பதிவு, இசை, படத்தொகுப்பு, திரைக்கதை, எமோஷன்ஸ், தத்துவம் என எல்லாப் பிரிவுகளிலும் படம் பிரமிக்க வைக்கிறது. படத்தின் நிலப்பரப்பே (Landscape) பார்வையாளர்களை வீழ்த்தி விடுகிறது. லண்டிஸ்ஃபான் ஒரு அலைத்திட்டுத் தீவாகும் (Tidal Island). அலைகள் உயரும்போது மெயின்லேண்ட்க்கான பாதை மறைந்துவிடும். தாழ் ஓதத்தில் (Low tide) மட்டுமே, அத்தீவை விட்டு வெளியேறவோ, உட்செல்லவோ முடியும். மெயின்லேண்டோ பச்சைப் பசேல் என இயற்கையின் கொடையாக உள்ளது. ஆன்தோனி டோட் மேன்டலின் ஒளிப்பதிவில், திரைச்சட்டகம் (Frame) ஒவ்வொன்றும் கண்ணைக் கொள்ளை கொள்கிறது. ஜோம்பிப் படங்களிலேயே, இத்தொடர் ஒரு கிளாஸிக் எனப் பெயர்பெற்றுள்ளது. இப்படத்திலும் அதை நிரூபிக்கும் வகையில், ஜான் ஹாரிஸின் படத்தொகுப்பு அமைந்துள்ளது. தொழில்நுட்பத்தை மனதோடு கண்ணாமூச்சி ஆடும் வகையில் மிக அருமையாக இப்படத்தில் பயன்படுத்தியுள்ளனர். யங் ஃபாதர்ஸின் பின்னணி இசையும் அட்டகாசம்.

தனது தாயிற்காக ஒரு 12 வயது சிறுவன் எடுக்கும் அசகாய சாகசம் என்றே இப்படத்தைச் சொல்லலாம். நோயின் தீவிரம் முற்றி, தன் மகன் ஸ்பைக்கை ‘டாடி’ என அழைக்க ஆரம்பித்துவிடுகிறார் ஐலா. மெயின்லேண்டில் மாட்டிக் கொள்ளும் ஸ்வீடன் வீரர் எரிக்கிற்கு அது மிகப் புதிராக உள்ளது. எரிக் – ஆஸ்பைக் – ஐலா சந்திக்கும் காட்சிகளில், ஜோம்பி படம் தான் பார்த்துக் கொண்டிருக்கிறோமா என ஐயம் ஏற்படும் அளவு, நகைச்சுவையை அழகாக இழையோட விட்டுள்ளனர். இதற்கு முந்தைய காட்சியில், ஸ்பைக் தன் தந்தை ஜேமியுடன் சண்டையிட்டுக் கொண்டிருப்பான். காட்சிகள் ஒன்றில் இருந்து ஒன்று மாறும்போது, ஒரு கவிதையைப் போல் மெல்ல வெவ்வேறு எமோஷன்ஸ்க்கு அழகாக மாறுகிறது. ஐலா, ஒரு ஜோம்பி பெண்ணிற்குப் பிறக்கும் தொற்று பாதிப்பில்லாத பெண் குழந்தையை மீட்கிறார்.

பல வருடங்களாகத் தனிமையில் வாழும் மருத்துவர் கெல்சன், எலும்புக்கூடுகளாலும், மண்டை ஓட்டாலும் ஒரு கோயிலைக் கட்டி வைத்துள்ளார். அந்தக் கோயில் தன்னுடைய Memento Mori என்கிறார் மருத்துவர். அப்படியென்றால் மரணம் தவிர்க்க முடியாதது என்பதை நினைவுறுத்தும் கலைச்சின்னம் எனக் கொள்ளலாம். இப்படவரிசை தலைப்புகளில் இடம்பெறும் உயிரிடர் (Biohazard) சிம்பலையே மண்டை ஓடுகளால் உருவாக்கிப் படத்தின் அறிமுக போஸ்டரை வெளியிட்டிருந்தனர்.

‘Remember, you must die’ என்பதுதான் கெல்சன் ஸ்பைக்கிற்குச் சொல்லிக் கொடுக்கும் படிப்பிணை. வாழ்வின் இந்த நிலையாமையைத்தான், இப்படத்தின் இயக்குநரான 68 வயது டேனி பாயில் அழகாகப் பார்வையாளர்களுக்குக் கடத்தியுள்ளார். தனக்குப் புற்றுநோய் எனத் தெரிந்தவுடன், தன்னைக் கருணைக்கொலை செய்து விடும்படி கேட்கிறார் ஐலா. பன்னிரெண்டு வயதான ஸ்பைக்கின் கையில் ஒரு பச்சைக் குழந்தை; இருள் படர்ந்த மங்கிய ஒளியில், கன்னுக்கெட்டிய தொலைவில் மரணத்தை எதிர்நோக்கியிருக்கும் தாய். சிறுவன் ஸ்பைக்காக நடித்துள்ள ஆல்ஃபி வில்லியம்ஸ் பிரமாதப்படுத்தியுள்ளான். அவனுடன் இணைந்து ஒளிப்பதிவாளரும் இசையமைப்பாளரும், அக்காட்சி தரும் கனமிக்க கணத்தை, மிக மிக அழகான தருணமாக்கியுள்ளனர். ஸ்பைக் அக்குழந்தைக்கு ஐலா எனப் பெயரிட்டு, அந்தக் குழந்தையைப் பாதுகாப்பான இடத்தில் ஒப்படைத்துவிட்டு மீண்டும் மெயின்லேண்டிற்கு வந்துவிடுகிறான்.

கெல்சன், ஸ்பைக்கிற்கு இன்னொன்றையும் சொல்லிக் கொடுக்கிறார். Memento Amoris (Remember Love). பிரியமான தாயின் மரணத்தை ஏற்றுக் கொள்ளும் பக்குவத்தை, இந்த வாசகம் ஸ்பைக்கிற்கு வழங்குகிறது. காதலிப்பதும், காதலிக்கப்படுவதும் வரம். வலியில் இருந்து விடுதலை பெற நினைக்கும் அம்மாவின் ஆசையை ஏற்றுக் கொள்கிறான் ஸ்பைக். அந்த வலிமையை அச்சிறுவனுக்கு வழங்கியது அம்மாவின் மீது அவன் வைத்துள்ள காதலே! இது ஒரு முரண் போல் தெரிந்தாலும், டேனி பாயில் விஷுவலாக இதை மிக அழுத்தமாகப் பார்வையாளர்களுக்குக் கடத்தியுள்ளார். தன் தாயின் மண்டை ஓட்டை வாங்கி, கோபுரத்தின் உச்சியில் வைக்கிறான் ஸ்பைக்.

மரணம் தவிர்க்க முடியாதது, அதை ஏற்றுக் கொள்ளவேண்டும் என்பதையும், நிலையற்ற வாழ்க்கையில், பிரியமானவர்களுடனான அற்புதமான தருணங்களைக் காதலுடன் கொண்டாட்டமாக ஏற்படுத்திக் கொள்வதோடு, அவர்களது தனிப்பட்ட முடிவுகளையும் ஏற்றுக் கொள்ளவேண்டும் என்பதையும் படம் உணர்த்துகிறது.

(இதன் அடுத்த பாகமான 28 Years Later: The Bone Temple, அடுத்த வருடம் ஜனவரி 16 அன்று வெளியாகிறது. அதற்கான ‘லீடு’டன் படத்தை முடித்துள்ளனர்.)