Shadow

குற்றம் 23 விமர்சனம்

Kuttram 23 review

23 குரோமோசோன்களை மையப்படுத்தி நடக்கும் மெடிக்கல் க்ரைம் தான் படத்தின் கதை. நாவலாசிரியர் ராஜேஷ்குமாரின் கதையை அடிப்படையாகக் கொண்டு சுவாரசியமான திரைக்கதை அமைத்துள்ளார் ஈரம் பட இயக்குநரான அறிவழகன்.

படத்தின் டைட்டில் போடும் பொழுதே கதை தொடங்கி விடுகிறது. டைட்டிலின் ஊடே வரும் அனிமேஷன் மிக அற்புதமாக உள்ளது. ஆணின் விந்து பெண்ணின் கருமுட்டையை அடைந்து கருவாய் உரு கொள்வதை அனிமேஷனாக்கி உள்ளனர். இதயம், கை, கால், விரல்கள் என ஒவ்வொன்றாய்த் தோன்றி, கருவிலுள்ள சிசு புன்னகைக்கும் பொழுது பரவசமாய் உள்ளது.

தேவையற்ற அறிமுகங்கள் இல்லாமல், நேரடியாகக் கதைக்குள் சென்று விடுகின்றனர். வில்லிவாக்கம் சர்ச்சின் பிரம்மாண்டத்தை தன் கேமிரா கோணத்தால் ரசிக்கும்படி அமைத்துள்ளார். படத்தில் வரும் அனைத்து ஷாட்ஸுமே ரசிக்க வைக்கின்றன. கலை இயக்குநர் ஷக்தியின் பங்கு மகத்தானது. படம் நெடுகே, கதைக்கும் கதை நடக்கும் இடத்திற்கும் இயைந்தவாறு அவரது உழைப்பு துருத்திக் கொள்ளாமல் பளிச்சிடுகிறது. மருத்துவரின் டேபிள் மேலிருக்கும் ஸ்டெத்தஸ்கோப் மாட்டும் பொம்மையை உதாரணமாகச் சொல்லலாம்.

கதையின் நாயகன் ஏசிபி (ACP) வெற்றிமாறனாகக் கச்சிதமாகப் பொருந்துகிறார். அதிரடியான ஹீரோயிசம் என்று போய் விடாமல், கதைக்குள் முதலில் பார்வையாளர்களை வரவழைத்து விட்டு, மெல்ல நாயகனாகப் பரிணமிக்கிறார். தென்றல் எனும் கதாபாத்திரத்தின் உருவத்திற்குப் பொருந்தாத மெச்சூர்டான குரலில் மகிமா வந்தாலும், கதைக்கு உதவும் நாயகியாக இயல்பாக வந்து போகிறார்.

மெடிக்கல் ரெப்பாக வரும் வம்சி கிருஷ்ணா, நோயாளிகளின் சென்ட்டிமென்ட்டுடன் விளையாடிப் பணம் பறிக்கும் கார்ப்ரேட் டாக்டர்களை மிக எளிமையாகக் கலைவதை நம்ப முடியவில்லை. அதுவும் வம்சி கிருஷ்ணா டார்கெட் செய்யும் இடங்கள் எல்லாம் அமைச்சர், அசிஸ்டென்ட் கமிஷ்னர் போன்ற பிக் ஷாட்ஸ்கள் என்பதும் இடிக்கிறது.

உற்றவர்களுடன் பிரச்சனையைப் பரஸ்பரம் பகிர்ந்து, துணிந்து எதிர்கொள்ளாமல், பிற்போக்குத்தனமான வரையறைகளுக்கு அஞ்சி தங்கள் வாழ்க்கையை முடித்துக் கொள்ளும் கதாபாத்திரங்கள் ஒருவருக்கு மேலாகப் படத்தில் வருகின்றனர். பிரச்சனையின் மூலத்தை இயக்குநர், கொஞ்சம் பொறுப்புனர்வுடன் இன்னும் திறம்படக் கையாண்டிருக்கலாம். அதாவது, பாதிக்கப்பட்ட ஒரே ஒருவராவது சாமர்த்தியமாக இருப்பது போல் கதையினை அமைத்திருக்கலாம். கபாலி, மாயாண்டி எல்லாம் விக்டராகவும், ஜான் மேத்யூவாகவும் மாறி வருவது ஆரோக்கியமான மாற்றமில்லை.

சுமார் 1500 நாவல்களுக்கு மேல் எழுதியும், திரையுலகில் ராஜேஷ்குமார்க்கு சரியான அங்கீகாரம் கிடைக்காமல் இருந்து வந்தது. அக்குறையை, இயக்குநர் அறிவழகன் போக்கியுள்ளார். மெல்ல குற்றத்தை நூல் பிடித்துப் போகும் பாணி, அருண் விஜயின் ஸ்க்ரீன் ப்ரசென்ஸ்க்குத் துணை சேர்த்துள்ளது. வொயிட்-காலர் க்ரைம்கள் மிகுந்துவிட்ட சூழலில், மக்கள் வில்லன்களிடமிருந்தும் அத்தகைய சாமர்த்தியத்தை எதிர்பார்க்கத் தொடங்கிவிட்டனர். ஆய்ய்.. ஊய்ய்.. எனக் கத்திக் கொண்டு ஓடி வரும் வில்லன்களின் காலம் மலையேறிவிட்டன. இப்படத்தில் வில்லன்களை விட அவர்கள் செய்யும் குற்றமே நம்மைத் திடுக்கிட வைக்கின்றன. ஜான் மேத்யூவாக வரும் பிரதான வில்லன் வம்சி கிருஷ்ணாவை விட, அரவிந்த் ஆகாஷும் ஸ்டன்ட் சில்வாவும் அச்சுறுத்துகின்றனர்.

இயக்குநர் அறிவழகன், தொடக்கம் முதல் கடைசி வரையிலும் தன் கதை சொல்லும் பாணியால் அமர வைத்திருப்பது சிறப்பு.