Shadow

லோகன் விமர்சனம்

Logan Tamil review

17 வருடங்களாக 9 படங்களில் வுல்வெரினாக மக்கள் மனதில் பதிந்த ஹ்யூ ஜாக்மேன், லோகன் படத்தோடு அப்பாத்திரத்தில் நடிப்பதற்கு குட் பை சொல்கிறார் ஹ்யூ ஜாக்மேன். அதற்கு ஏற்றாற்போல், ஹ்யூ ஜாக்மேனிற்கு மிகக் கச்சிதமானதொரு ட்ரிப்யூட் செய்துள்ளார் இயக்குநர் மேங்கோல்ட்.

மரணத்திற்காகக் காத்திருக்கும் லோகன், தன் நண்பர்களுக்காக ஒரு படகு வாங்கப் பணத்தைச் சேமிக்கிறார். ஆனால், லாரா எனும் மியூடன்ட் சிறுமியைப் பாதுகாக்க வேண்டிய கடமையில் விருப்பமில்லாமல் சிக்கிக் கொள்கிறார் லோகன். யாரந்த சிறுமி? பலஹீனமான லோகன் எடுத்துக் கொண்ட கடமையை வலிமையான எதிரிகளை மீறி நிறைவேற்றினாரா என்பதுதான் படத்தின் கதை.

மனிதர்களைத் துன்புறுத்தி விடவே கூடாதெனக் கவனமாக இருக்கிறார் லோகன். ஆனால், படத்தின் தொடக்கமே வுல்வெரினின் உலோக நகங்கள் ரத்தத்தில் நனைகிறது. படம் நெடுகேவும் அதே கதைதான். வுல்வெரினின் நகங்கள் மனிதர்களின் முகங்களை, மேலிருந்து கீழ், கீழிருந்து மேல், வலமிருந்து இடம், இடமிருந்து வலம் என அனைத்துப் பக்கங்களில் இருந்தும் துளைக்கின்றன. அனைத்துமே தற்காப்பிற்காக என்பதால், வன்முறை வன்மமாக முகத்தில் அறையவில்லை. எனினும், இப்படம் முழுமையான A மூவி. மார்வெல் காமிக்ஸ் படமென சிறுவர்களுக்குக் காட்டி விடவேண்டாம்.

ஹ்யூ ஜாக்மேனோடு, பேட்ரிக் ஸ்டீவர்ட்டும் இப்படத்தோடு விடை பெறுகிறார். எக்ஸ் மேன் சீரிஸில், லோகன் அவருக்கு ஏழாவது படம். இப்படம், இரண்டு வகையில் கவனிக்க வைக்கிறது. ஒன்று, வயோதிகத்தில் வாடும் சார்லஸை வுல்வெரின் அக்கறையாகக் கவனித்துக் கொள்ளும் விதம். சூப்பர் ஹீரோகளும் மனிதர்கள்தான், அவர்களுக்கும் முதுமையும் செண்ட்டிமென்ட்களும் உண்டு என படம் தெளிவாகச் சித்தரிக்கிறது (சார்லஸ்-வுல்வெரின் சந்திக்கும் முதல் காட்சி, புதுமைப்பித்தனின் ‘நாரத ராமாயணம்’ நூலை ஞாபகப்படுத்துகிறது). தனிமையே கொடுமை, அதிலும் முதுமையில் தனிமை? இன்னொன்று, லாராவிற்கும் வுல்வெரினுக்கும் இடையே ஊடாடும் நேசம். இருவருக்கும் வெளிக்காட்டிக் கொள்ள சந்தர்ப்பம் கிடைக்கவில்லை எனினும், பிரிய நேரிடும் பொழுது அவர்களை மீறி வெளிப்பட்டு விடுகிறது.

கதை ஒரு பக்கம் படத்தைத் தூக்கி நிறுத்துகிறது என்றால், டாஃப்னீ கீன் (Dafne Keen) எனும் சிறுமி படத்தை அற்புதமான அனுபவமாக்குகிறார். நிறைய கோபப்படும் சிறுமி, ஒரே ஓரிடத்தில் சார்லஸைப் பார்த்து அழகாய்ப் புன்னகைக்கிறார், இன்னொரிடத்தில் தன்னை மறந்து சிரிக்கிறார். அமைதியாய் பூ போல் விளையாடிக் கொண்டிருக்கும் லாரா, ஒரு தடியனின் தலையைக் கொய்து தூக்கி வீசுகிறாள். அங்குத் தொடங்கும் அதகளம், படம் முடியும் வரை குறைவதே இல்லை. கொலைக்காரச் சிறுமியென்றாலும், பொம்மைக் குதிரை மீதும், சார்லஸின் தானியங்கி தள்ளுவண்டியை இயக்கியும் விளையாடும் அவ்வழகான சிறுமியைப் பார்வையாளர்களுக்கு மிகவும் பிடித்துவிடும் என்பது மட்டும் திண்ணம். அப்படி, இயக்குநர் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் மிகத் துல்லியமான வரையறையை வகுத்துள்ளார்.

வுல்வெரின் கதாபாத்திரத்தில் அடுத்து நடிக்கவிருக்கும் நபர் மிகச் சிரமப்பட வேண்டியிருக்கும். வுல்வெரினையும், ஹ்யூ ஜாக்மேனையும் பிரித்துப் பார்க்க இயலாதளவு மனதில் அழுத்தமாக இடம்பிடித்துவிட்டார் ஹ்யூ. இப்படம் முடியும் பொழுது, உங்களுக்கு எல்லாக் கதாபாத்திரங்களையும் பிடிக்கும்; இயக்குநர் மேங்கோல்டைப் பிடிக்கும்; ஒளிப்பதிவாளர் ஜான் மேத்தீசனைப் பிடிக்கும்; மார்வெல் காமிக்ஸைப் பிடிக்கும்.

முழு நீள ஆக்‌ஷன் படமெனினும், நகைச்சுவைக்கும் பஞ்சமில்லை. முதல் முறையாக, லாரா வாய் திறந்து பேசும் காட்சி அதற்கான கிளாசிக் சான்று. காமிக்ஸில் பார்த்த தங்கள் ஆஸ்தான ஹீரோ வுல்வுரெனின் மீசையையும் தாடியையும் சிறுவர்கள் கத்திரிப்பது, ரணக் கொடூரமாய்ச் சிதைந்துவிடும் X-24 எனும் ஆயுதத்துடன் வில்லன் பேசுவதென படம் நெடுகே சுவாரசியமான காட்சிகளுக்குப் பஞ்சமில்லை. கடைசிக் காட்சியில், கல்லறை மீதிருக்கும் சிலுவையை எக்ஸ் வடிவத்தில் லாரா மாற்றி வைக்கும் காட்சி ஒன்று போதும் இயக்குநரின் திறமையைப் பறைச்சாற்ற.!