Shadow

Love Marriage | 90’ஸ் கிட்ஸ்களின் வாழ்க்கையை எதிரொலிக்கும்

அஸ்யூர் பிலிம்ஸ் மற்றும் ரைஸ் ஈஸ்ட் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநர் சண்முக பிரியன் இயக்கத்தில், விக்ரம் பிரபு  – சுஷ்மிதா பட் முதன்மையான வேடங்களில் நடித்திருக்கும் ‘லவ் மேரேஜ்’ எனும் திரைப்படத்தின் முன்னோட்ட வெளியிட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் படக்குழுவினருடன் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.

இந்த விழாவில் பேசிய நடிகரும் இயக்குநருமான முருகானந்தம், ”இந்தப் படத்தின் படப்பிடிப்பு தளத்தில் ஜூனியர்கள் சீனியர்களை இயக்குவது போல் இருந்தது. ஆனால் படப்பிடிப்பு தளத்தில் கலைஞர்களை அவர்கள் கையாண்ட விதம் நன்றாக இருந்தது. ஒரு குடும்பம் போல் படப்பிடிப்பு தளம் கலகலப்பாக இருந்தது. ஒவ்வொரு படத்தில் நடிக்கும் போதும் ஒவ்வொரு விதமான அனுபவம் கிடைக்கும். இந்தப் படத்தில் நடிக்க தொடங்கி நிறைவை எட்டிய போது, ஆஹா! படத்தின் படப்பிடிப்பு இவ்வளவு சீக்கிரம் முடிந்து விட்டதே? என்ற ஏக்கத்தை உண்டாக்கியது. இதுதான் இயக்குநர் சண்முக பிரியனுக்கு கிடைத்த முதல் வெற்றி. அந்த அளவிற்கு ஒட்டுமொத்த படக் குழுவையும் அவர் நேர்த்தியாக அரவணைத்தார்.

படப்பிடிப்பு தளத்தில் நடிகர் விக்ரம் பிரபு சக கலைஞர்கள் மீது அதிக அக்கறையும் அன்பும் காட்டினார். இந்தப் படத்தில் ஹீரோயினாக நடித்திருக்கும் சுஷ்மிதா படத்தில் மட்டுமல்ல படப்பிடிப்பு தளத்திலும் எதார்த்தமான ஹீரோயினாகவே இருந்தார். அவருக்கும் வாழ்த்துக்கள்.

படத்தில் பணியாற்றத் தொடங்கும் போது இயக்குநர் யார் என்று தெரியாது. அப்போது படப்பிடிப்புத் தளத்தில் எனக்குத் தலை வலிக்கிறது உடல் வலிக்கிறது என ஏதாவது காரணத்தைச் சொன்னால் உடனே ஒரு பெயரைச் சொல்லி அந்த மாத்திரையை வாங்கிச் சாப்பிடச் சொல்வார். அதன் பிறகு தான் அவர் மருத்துவர் எனத் தெரியவந்தது. எந்த வேலை பார்த்தாலும் இயக்குநராக வரலாம். ஆனால் ஒரு மருத்துவராக இருந்து இயக்குநராகி இருக்கிறார் என்றால்.. முதலில் அவருடைய பெற்றோர்களுக்கு தான் நன்றி சொல்ல வேண்டும். லவ் மேரேஜ் திரைப்படத்திற்கு அரேஞ்ச் மேரேஜ்க்கு வரும் கூட்டம் போல் அனைவரும் வருகை தந்து வெற்றி பெற செய்ய வேண்டும் ” என்றார்.

தயாரிப்பாளர் டாக்டர் ஸ்வேதா ஸ்ரீ, ”எல்லோருக்கும் அவர்களுடைய முதல் குழந்தை ஸ்பெஷலானது. அது கடவுளின் ஆசி என்று சொல்வார்கள். அந்த வகையில் எங்களின் அஸ்யூர் ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் முதல் படம் லவ் மேரேஜ். நான் வணங்கும் பெருமாளின் அருளுடன் ஜூன் 27ஆம் தேதியன்று இப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது. இன்று இப்படத்தின் முன்னோட்டத்தை வெளியிடும் நடிகர் தனுஷுக்கு நன்றி.

இப்படத்தின் கதையை இயக்குநர் சண்முக பிரியன் முதன் முறையாக சொல்லும் போதே எனக்குப் பிடித்திருந்தது. இதுதான் எங்களின் முதல் படமாக இருக்க வேண்டும் எனத் தீர்மானித்தோம். இந்தக் கதையை மிகவும் திறமையாகவும் இயக்கியிருக்கிறார். ரசிகர்கள் அனைவரும் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக ரசிக்கும் வகையில் படத்தை உருவாக்கி இருக்கிறார். இந்தத் திரைப்படம் பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த ரொமான்டிக் காமெடி திரைப்படம்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு முழுவதும் கோபிசெட்டிபாளையத்தில் நடைபெற்றது. அந்த மண்ணின் மணம் மாறாமல் அழகியலுடன் படம் உருவாகி இருக்கிறது” என்றார்.

நடிகை சுஷ்மிதா பட், ”தமிழில் இந்தப் படத்தின் மூலம் அறிமுகமாகிறேன். இந்தப் படத்தில் அனுபவம் மிக்க இளைஞர்களுடன் இணைந்து பணியாற்றியது எனக்குக் கிடைத்த பாக்கியமாகவே கருதுகிறேன். இப்போது அவர்கள் அனைவரும் என்னுடைய குடும்பமாக ஆகிவிட்டனர்” என்றார்.

இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன், ”லவ் மேரேஜ் படத்தின் ட்ரெய்லரை 90ஸ் கிட்ஸ்களின் எதிரொலியாகத்தான் பார்க்கிறேன். இந்தப் படத்தின் முன்னோட்டத்துடன் என்னால் எளிதாகத் தொடர்பு கொள்ள முடிந்தது. இப்படத்தில் மிஷ்கின் பாடிய பாடலைக் கேட்டவுடன் இந்தப் பாட்டு ஹிட் ஆகும் எனச் சொன்னேன். ஒரு படத்திற்குப் பாசிட்டிவிட்டியை முதன்முதலாக பரப்புவது அப்படத்தின் டைட்டிலிருந்து தொடங்கும் என்பதை நம்புபவன். அந்த வகையில் லவ் மேரேஜ் என்பது எல்லாத் தரப்பினரும் இயல்பாகக் கேட்டிருக்கும் பார்த்திருக்கும் வார்த்தை.

நம்முடைய நண்பர்கள், உறவினர்கள் யாராவது காதலித்திருப்பார்கள் அல்லது காதலித்துக் கொண்டிருப்பார்கள். காதல் என்பது திருமணம் வரை செல்லக்கூடியது தான். இதனால் இந்தப் படத்திற்கு டைட்டிலே மிகப்பெரிய வெற்றியைத் தரும். இதற்காக இயக்குநருக்கு என்னுடைய வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தப் படத்தின் இசையமைப்பாளர் ஷான் ரோல்டனின் ரசிகன் நான். அவரை நீண்ட காலமாகப் பின் தொடர்கிறேன். அவருடைய இசையில் ஒலிகள் வித்தியாசமாக ரசிக்கக் கூடிய வகையில் இருக்கும். அந்த ஓசை இளைய தலைமுறையினர் அனைவரையும் கவர்ந்திருக்கிறது.

விக்ரம் பிரபு கடினமாக உழைக்கக்கூடிய நடிகர். பக்கத்து வீட்டு பையனாக இந்தப் படத்தில் அவர் நடித்திருக்கிறார். இதற்காகவே இந்தத் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெறும். அவர் வில்லனாகவும் நடிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். பரிசோதனை முயற்சியாக நிறைய படங்களில் நடித்து வருகிறார். அவர் இயல்பாக நடித்திருக்கும் இந்தத் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற வேண்டும் என இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்” என்றார்.