Shadow

“உதவும் மனப்பான்மை வணிகமாக மாறி குற்றச்சம்பவத்திற்கு வழி வகுக்கிறது” – அதிஷா | DNA

ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜெயந்தி அம்பேத்குமார் தயாரிப்பில், தயாரிப்பாளர் S. அம்பேத்குமார் வழங்க, இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில், அதர்வா முரளி, நிமிஷா சஜயன் முன்னணி வேடத்தில் நடித்து, ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட, கடந்த இருபதாம் தேதியன்று வெளியான DNA திரைப்படம், விமர்சகர்கள் மற்றும் ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவுடன் பிரம்மாண்ட வெற்றியை நோக்கிப் பயணிக்கிறது. இதைத் தொடர்ந்து படத்தை வெற்றி பெறச் செய்த ஊடகத்தினருக்கும், ரசிகர்களுக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் படக்குழுவினர் நன்றி அறிவிப்பு விழா ஒன்றினை சென்னையில் ஒருங்கிணைத்திருந்தனர். இந்த நிகழ்வில் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

இப்படத்தின் வெற்றிக்குக் காரணமான இணை கதாசிரியரும் எழுத்தாளருமான அதிஷா, ” இது என்னுடைய இருபது ஆண்டுகால கனவுப் பயணம். இந்தத் தருணத்திற்காக மகிழ்ச்சியுடன் காத்திருந்தேன்.‌

இந்த கதையில் இடம்பெறும் விசயங்கள் அனைத்தும் உண்மையானவை தான். கடந்த பதினைந்து ஆண்டு கால இதழியல் துறையில் பணியாற்றிய அனுபவம் தான் இந்த கதையை எழுதுவதற்கு உதவியாக இருந்தது. ‘புனைவுகளில் உண்மைத் தன்மை அதிகம் இருந்தால் அந்த புனைவு வெற்றி பெறும்’ என என்னுடைய குரு சொல்லி இருக்கிறார். அந்த வகையில் இந்தக் கதையில் 90 சதவீதம் உண்மைத் தன்மை இருக்கிறது. பத்து சதவீதம் தான் கற்பனை கலந்திருக்கிறது.

இந்தப் படத்தில் இடம்பெறும் பாட்டி கதாபாத்திரத்தில் சாத்தூர் ஜெயலட்சுமி என்பவர் நடித்திருந்தார். இந்தக் கதாபாத்திரமும் என்னுடைய வாழ்வில் சந்தித்த பெண்மணியை முன்னுதாரணமாகக் கொண்டு எழுதினேன். எழும்பூர் அரசு குழந்தைகள் மருத்துவமனை, கோஷா ஆஸ்பத்திரி, ஆட்டோ சங்கரின் மரண வாக்குமூலம் என உண்மைச் சம்பவங்களை தழுவித்தான் இப்படத்தின் கதாபாத்திரத்தின் வடிவமைப்பு அமைந்திருக்கும். இப்படத்தின் வெற்றிக்கு இத்தகைய உண்மைக்கு நெருக்கமான விசயங்களும் காரணம் எனக் கருதுகிறேன். இதனால் எழுத்தாளர்களையும், அனுபவம் மிக்க பத்திரிக்கையாளர்களையும் இயக்குநர்கள் பயன்படுத்திக் கொள்ளுங்கள் எனக் கேட்டுக்கொள்கிறேன்.

இயக்குநர் நெல்சன் தான் என்னைத் தேடிக் கண்டுபிடித்து எழுத அழைப்பு விடுத்தார். நான் மனதிற்கு நெருக்கமாக உணர்ந்து எழுதிய பல காட்சிகளைத் திரையில் அற்புதமான நடிப்பால் அதர்வாவும் நிமிஷாவும் வெளிப்படுத்தி இருந்தார்கள். இதற்காக அவர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தப் படத்தின் முதல் காட்சியிலிருந்து இறுதிக் காட்சி வரை ஏதேனும் ஒரு கதாபாத்திரம் மற்றொரு கதாபாத்திரத்திற்கு உதவும் வகையில் காட்சிகளை வடிவமைத்திருப்போம். இந்த உதவி செய்யும் மனப்பான்மை, எப்போது வணிகத்தனம் மிக்கதாக மாறுகிறதோ அங்கு குற்றச்சம்பவம் நிகழ்கிறது.

இன்றைய சூழலில் உதவி என்பது வணிகமாக மாறிவிட்டது. கடந்த தசாப்தங்களில் வாகனத்தில் பயணிக்கும் போது ‘லிஃப்ட் ‘ கேட்பார்கள். இன்று ‘லிஃப்ட்’ என்பது ‘பைக் டாக்சி’யாக மாறிவிட்டது. உதவி என்பது ஆத்மார்த்தமாகவும் நேர்மையாகவும் இருக்க வேண்டும்.‌ இந்த மனிதநேயத்தை முன்னிறுத்திய இந்தத் திரைப்படம் ரசிகர்களிடம் சரியான முறையில் சென்றடைந்திருப்பதால் மகிழ்ச்சி அடைகிறேன்” என்றார்.

நடிகர் போஸ் வெங்கட், ”கேரளாவில் ஒரு படப்பிடிப்பு நடைபெறுகிறது என்றால், அங்கு ஐந்து கேரவன் இருந்தால், அதில் ஒரு கேரவன் ரைட்டர்ஸ்காக இருக்கும். அந்த அளவில் கதாசிரியர்களுக்கு அங்கு மதிப்பு இருக்கிறது. அந்த வகையில் இந்தப் படத்தில் திரைக்கதை ஆசிரியராகப் பணியாற்றிய அதிஷாவை மேடையேற்றிப் பாராட்டியதற்காக இயக்குநர் நெல்சனுக்கு வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன்.‌ இது ஆரோக்கியமான பயணம். என்னைப் பொறுத்தவரை கதாசிரியர், வசனகர்த்தா என்பது தனிப்பிரிவு. அந்த பிரிவு வலிமையாக இருந்தால் எந்தப் படமும் தோற்காது” என்றார்.

இயக்குநர் நெல்சன் வெங்கடேசன், ”தமிழ் சினிமாவின் தற்போதைய சூழலில் ஒரு படத்தின் வெற்றி என்பது ஒரு இயக்குநர் நல்ல படத்தை இயக்குவதில் மட்டுமில்லை. அந்தத் திரைப்படம் சரியான தேதியில் வெளியாக வேண்டும். இது இயக்குநர்களின் கைகளில் கிடையாது. அந்தத் திரைப்படத்திற்கு சரியான விளம்பரம் கிடைக்கப் பெற வேண்டும். அதுவும் இயக்குநர்களின் கைகளில் கிடையாது. அந்தத் திரைப்படம் விநியோகஸ்தர்களின் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும். அதுவும் அந்த இயக்குநரின் கைகளில் கிடையாது. அதனைத் தொடர்ந்து அந்தப் படத்திற்காக போஸ்டர் ஒட்டுவது முதல் விளம்பரப்படுத்துவது வரை உழைப்புதான் வெற்றியைத் தீர்மானிக்கிறது. அந்த வகையில் ஒரு படம் வெற்றி பெற வேண்டும் என்றால் பலர் ஒன்று கூட வேண்டியதிருக்கிறது. பலரின் ஒத்துழைப்பும், ஆதரவும் கிடைக்க வேண்டும். அந்த வகையில் இந்தப் படத்திற்குக் கிடைத்த வெற்றிக்குப் பின்னணியில் உழைத்த அனைவருக்கும் இந்தத் தருணத்தில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆனந்துக்கும், திவ்யாவுக்கும் இடையேயான கதை 2009 ஆம் ஆண்டிலிருந்து என்னிடம் இருக்கிறது. ஆனந்தும் திவ்யாவும் பெயர்தான் வேறு வேறு. ஆனால் இந்தக் கதாபாத்திரங்களை நான் என்னுடைய வாழ்வில் சந்தித்திருக்கிறேன். அவர்களின் வலியை இதில் பதிவு செய்திருக்கிறேன். இவர்களின் வாழ்வில் திருமணம் என்பது நடைபெறுமா என என்னுடைய மனதில் எழுந்த கேள்விதான் இந்தப் படத்தின் கதையை எழுதத் தூண்டியது. இதன் மூலம் ஒரு வலிமையான கதை, ஒரு வலிமையான உணர்வுடன் இணைந்து சொல்லும்போது அதற்கு வெற்றி கிடைக்கிறது. இதனை இன்னும் நான் பத்து ஆண்டுகள் கழித்த பின்னர் சொன்னாலும் வெற்றியைப் பெறும். அதற்கான வரவேற்பும் அன்பும் மக்கள் அளிப்பார்கள் என்ற நம்பிக்கையும் எனக்கு இருக்கிறது” என்றார்.

நடிகர் அதர்வா முரளி, ”இந்தப் படத்திற்காக உழைத்த ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நொடியும் இந்த ஒரு தருணத்திற்காக தான். இந்தப் படத்தின் படப்பிடிப்பின் போது ஒவ்வொரு நாளும் ஒரு நல்ல படத்தில் நடிக்கிறோம் என்ற உணர்வுடன் தான் கலந்து கொண்டேன். இந்தப் படம் எந்த அளவிற்கு வெற்றி பெறும், எந்த அளவிற்கு வரவேற்பு கிடைக்கும், யாருக்கு பிடிக்கும் என்றெல்லாம் யோசிக்கவில்லை.

படப்பிடிப்பு நிறைவடையும்போது நல்ல படத்தில் நடித்து விட்டோம் என்ற உணர்வு தான் ஏற்பட்டது. இந்தப் படத்திற்கான பத்திரிக்கையாளர்கள் காட்சி திரையிட்ட போது, படம் நிறைவடைந்த பிறகு சில நிமிடங்கள் கழித்து அனைவரும் எழுந்து நின்று கைத்தட்டி வரவேற்பைத் தெரிவித்த போது, உண்மையில் நெகிழ்ச்சி அடைந்தேன். ‘வேர்ட் ஆஃப் மவுத்’ என்று சொல்வதை இந்தப் படத்தின் வெற்றி மூலம் அனுபவப்பூர்வமாக உணர்ந்தேன்.

படம் வெளியான பிறகு ரசிகர்களின் வரவேற்பை நேரில் காண்பதற்காகத் திரையரங்கத்திற்குச் சென்றோம். அப்போது வயதான பெண்மணி ஒருவர் என்னைக் கட்டிப்பிடித்து கன்னத்தில் முத்தமிட்டுப் படத்தைப் பாராட்டினார். இந்தப் படத்தின் வெற்றி எனக்கு சந்தோஷத்தைக் கொடுத்தது எனச் சொன்னார். இது எனக்குப் புது அனுபவமாக இருந்தது. இந்தப் படத்தின் வெற்றியை அவர்கள் தங்களின் வெற்றியாகக் கொண்டாடினார்கள். இதைக் காணும் போது உண்மையில் மகிழ்ச்சியாக இருந்தது. இந்தத் தருணத்தில் உலகத்திலேயே மிகவும் மகிழ்ச்சியான மனிதனாக என்னை நான் உணர்கிறேன்.

இயக்குநர் நெல்சன் என்னைச் சந்தித்து இப்படத்தைப் பற்றிச் சொன்னபோது, ‘உங்களுடைய திரையுலகப் பயணத்தில் நல்லதொரு திரைப்படத்தை அளிப்பேன்’ என நம்பிக்கையுடன் சொன்னார். அந்த நம்பிக்கையை அவர் காப்பாற்றி இருக்கிறார். இதற்காக அவருக்கு இந்தத் தருணத்தில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.