Shadow

லவ்வர் | காதல் சிறிய விஷயம் – ஆனால் அதிலிருந்து விட்டுவிலகுவது?

அறிமுக இயக்குநர் பிரபுராம் வியாஸ் இயக்கத்தில் தயாராகியிருக்கும் திரைப்படம் ‘லவ்வர்’. இதில் மணிகண்டன், ஸ்ரீகெளரி ப்ரியா, கண்ணா ரவி, ஹரினி, நிகிலா, ஹரீஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப் படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கிறார். ராஜ்கமல் கலை இயக்குநராகப் பணியாற்றியிருக்கும் இந்தப் படத்தின் படத்தொகுப்புப் பணிகளை பரத் விக்ரமன் மேற்கொண்டிருக்கிறார். காதலை மையப்படுத்தித் தயாராகியிருக்கும் இந்தப் படத்தை மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் மற்றும் எம்ஆர்பி எண்டர்டெய்ன்மெண்ட்ஸ் ஆகிய பட நிறுவனங்கள் சார்பில் நாசரேத் பஸ்லியான், மகேஷ்ராஜ் பஸ்லியான் மற்றும் யுவராஜ் கணேசன் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

பிப்ரவரி மாதம் ஒன்பதாம் தேதி முதல் திரையரங்குகளில் வெளியாகவிருக்கும் இந்தப் படத்தின் இசை வெளியீடு சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இதற்காக நடைபெற்ற பிரத்தியேக வெளியீட்டு விழாவில் இயக்குநர்கள் ரஞ்சித் ஜெயக்கொடி, விநாயக், விநியோகஸ்தர் சக்திவேலன் மற்றும் படக்குழுவினர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

விநியோகஸ்தர் சக்திவேலன், “லவ்வர் படக்குழுவினர் இதற்கு முன் குட் நைட் எனும் வெற்றிப்படத்தினை வழங்கியவர்கள். அப்படத்தின் வெற்றியைக் கொண்டாடவில்லையா? என கேட்ட போது, அவர்கள் அடுத்த படத்தின் படபிடிப்பில் இருந்தனர். அந்தளவிற்கு நம்பிக்கையுடன் இந்த படக்குழுவினர் பணியாற்றினர். இந்தப் படத்தைப் பற்றிய செய்திகள் வெளியானவுடன் ஏராளமான விநியோகஸ்தர்கள் இந்தப் படத்தை வெளியீடுவதற்கு முன்பணத்துடன் படக்குழுவினரை அணுகினார்கள். நான் கூட இந்த அளவிற்கு ‘லவ்வர்’ படம் வெளியாகும் முன்பே வணிகம் நடைபெற்றால், அதனை ஏற்றுக்கொள்ளுங்கள் என வேண்டுகோள் வைத்தேன். ஆனால் அவர்களோ இந்தப் படத்தினை சக்தி ஃபிலிம் ஃபேக்டரி மூலமாக வெளியிடவே திட்டமிட்டிருக்கிறோம் என்று தயாரிப்பாளர்கள் உறுதியுடன் தெரிவித்தனர். இதற்காகத் தயாரிப்பாளர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

நான் கடந்த வாரம் இந்தப் படத்தைப் பார்த்தேன். எக்ஸலன்ட்டான மூவி. இப்படத்தின் பின்னணியிசையை ஷான் ரோல்டன் மிகச்சிறப்பாக இசையமைத்திருக்கிறார். குறிப்பாக க்ளைமாக்ஸ் பேசப்படும்.

இந்தப் படத்தின் ட்ரைலரில் மணிகண்டன் பேசும் ஒரு வசனம் இடம்பெற்றிருக்கிறது. அவருடைய நடிப்பை விட அவருடைய குரல் மூன்று மடங்கு கூடுதலாக நடித்திருக்கிறது. மணிகண்டன் தமிழ்த் திரையுலகில் இன்னும் கூடுதலான உயரத்திற்குச் செல்லும் தகுதியும், திறமையும் பெற்ற நடிகர். ஒரு சாதாரண காட்சியைக் கூட தன்னுடைய நடிப்பால் உயிர்ப்புள்ளதாக்கும் வலிமை கொண்டவர்.

‘லவ் டுடே’ எப்படி வெற்றியைப் பெற்று வரலாறு படைத்ததோ, அதை விடக் கூடுதலாக வசூலித்து இந்தப் படம் சாதனை படைக்கும். இந்தப் படம் ஒட்டுமொத்த பார்வையாளர்களுக்கான படம். இதில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு விசயமும் ரசிகர்களுடன் ஏதோ ஒரு வகையில் தொடர்புடையதாக இருக்கும்” என்றார்.

இயக்குநர் ரஞ்ஜித் ஜெயக்கொடி, “இந்தப் படத்தைப் பற்றிச் சொல்லவேண்டும் என்றால் பாப்லா நெரூடாவின் ஒரு கவிதையைத்தான் குறிப்பிடவேண்டும். ‘காதல் சிறிய விசயம் தான். ஆனால் அதிலிருந்து விட்டுவிலகுவது தான் கடினமான விசயம்’. இது தான் இப்படத்தின் அடிநாதம். இன்னும் தெளிவாகச் சொல்லவேண்டுமென்றால், ‘என்னை நீயும், உன்னை நானும் யார் முதலில் இழப்பது என்பது தான்…’ இப்படத்தின் அடிநாதமாக இருக்கிறது. இந்தப் படத்தின் திரைக்கதையைப் படிக்கும் போது இயக்குநர் பிரபுராம் வியாஸின் எழுத்து, நாவலை வாசிக்கும் உணர்வைக் கடந்து எமோஷனலாக அதனுடன் இணைந்துவிட்டேன். இதில் கமர்ஷியல் எலிமென்ட்டுகளை லாவகமாக இணைத்து எழுதியிருந்தார். அதனால் பிரபுராம் வியாஸ் உள்ளிட்ட அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகள். இந்தப் படத்தில் இடம்பெறும் பாடல்களில் பாடலாசிரியர் மோகன் ராஜன், ஜென் தத்துவங்களை எளிதான வரிகளாக எழுதி மனதில் இடம்பிடிக்கிறார். அவருக்கும் என்னுடைய வாழ்த்துகள்” என்றார்.