

அக்கா மகனுடன் நாயகனுக்கு ஏற்படும் அதீத பிணைப்பும், அதனால் ஏற்படும் விளைவுகளுமே படத்தின் கதை.
மாமனுக்கு மிஞ்சிய உறவில்லை என்பது பழமொழி. அதிலும் குறிப்பாகத் தமிழர்கள், ‘தாய்மாமன்’ உறவிற்கு எப்பொழுதும் கூடுதல் சிறப்பையும் முக்கியத்துவத்தையும் அளித்து வந்துள்ளனர். இரண்டு, மூன்று தசாப்தங்களாக உறவினர்களின் பாராமுக மனப்போக்கைக் கிண்டல் செய்யும் வழக்கம் மிகுந்துவிட்ட போதிலும், நண்பர்கள் தங்களுக்குள் ‘மாமா – மச்சான்’ என்றே உறவுமுறை கொண்டு அழைத்துக் கொள்வது 80 களில் தொடங்கி, போன தசாப்தம் வரையிலுமே கூட உயிர்ப்புடன் இருந்தது. “நீ எனக்கு ரொம்ப முக்கியமான நபர்” என்ற குறியீட்டுச் சொல்லாகவே நட்பிற்குள்ளும் மாமன் என விளிக்கும் பழக்கம் நுழைந்தது. அந்தச் சொல்லும், உறவும் எப்படி மகத்துவம் வாய்ந்தது என்பதைப் படம் பேசுகிறது.
பாசத்துடன் இருப்பதையே முழு நேர வேலையாகச் செய்து கொண்டிருப்பவரைப் பற்றிய படமிது. போதும் போதும் என திகட்டுமளவுக்குப் பாசக்காரராக உள்ளார் இன்பா. அவரது அக்கா கிரிஜாவிற்கு நிலன் எனும் மகன் பிறக்க, மாமனாகும் இன்பா நிலனை வளர்க்க தாயாக மாறுகிறார். நிலனாக நடித்துள்ள மாஸ்டர் பிரகீத் சிவன், க்ளைமேக்ஸில் சுபமாகப் படத்தை முடித்து வைக்கிறார்.
பவுனு எனும் பாத்திரத்தில் விஜி சந்திரசேகரும், அவரது கணவர் சிங்கராயராக ராஜ்கிரணும் நடித்துள்ளார். உறவுகள் பற்றிப் பேசும் படத்தில், அதை வாஞ்சையுடன் வெளிப்படுத்தும் விதமாக அத்தனை நடிகர்களை மிகக் கச்சிதமாகத் தேர்ந்தெடுத்துள்ளார் இயக்குநர் பிரஷாந்த் பாண்டியராஜ். கீதா கைலாசம், பாபா பாஸ்கர், ஜெய பிரகாஷ், பாலசரவணன், சாயா தேவி, நிகிலா சங்கர் என நட்சத்திர பட்டாளங்கள் அணிவகுத்துள்ளனர் படத்தில். இயக்குநரின் விலங்கு இணையதொடருக்கும், இந்தப் படத்திற்கும் துளி சம்பந்தம் கூட இல்லை. லப்பர் பந்து படத்தில் கலக்கியது போலவே, இப்படத்திலும் சூரியின் அக்கா கிரிஜாவாக அசத்தியுள்ளார் ஸ்வாஸ்விகா. அவர் கோபமுறும் காட்சியாகட்டும், தம்பியிடம் மன்னிப்பு கேட்கும் காட்சியாகட்டும், ஸ்வாஸ்விகா மிக அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். இன்பாவை மாமனாக்கிய கிரிஜா தான் இப்படத்தின் நாயகி.
மருத்துவர் ரேகாவாக ஐஸ்வர்ய லக்ஷ்மி மிகச் சிறப்பாக நடித்துள்ளார். ஆனால் எழுத்தளவில், சூரியின் பாத்திரத்தின் மீதே கவனம் குவிக்கப்பட்டு மற்ற பாத்திரங்கள் சூரியை எப்படிப் பாதிக்கின்றனர் என்றிருப்பதால், ஸ்வாஸ்விகா, ஐஸ்வர்ய லக்ஷ்மி, மற்றும் இன்ன பிற பாத்திரங்களின் அகம் முழுமை பெறவில்லை. நாயகனுக்கு மனைவியின் அருமை தெரியவேண்டும் என இயக்குநர் கதையைக் கொண்டு போக நினைத்தால், அதற்கென்று ஆயத்த கதாபாத்திரங்கள் தயாராக உள்ளனர். இயல்பாகக் காட்சிகள் நகராமல், பார்வையாளர்கள் இன்னதுதான் உணரவேண்டுமென்ற தீர்மானம் எழுத்தில் தெரிகிறது.
இன்பாவாக சூரி. வசன உச்சரிப்பில் லேசாகச் சிரமப்பட்டாலும், கதைக்கும் காட்சிக்குமுரிய முகபாவங்களில் அசத்தித் தானொரு முழுமையான நாயகத்துவத்துக்குரிய நடிகர் என அநாயாசமாக நிரூபித்துள்ளார். மாமன் படத்தின் பலவீனமாகத் திரைக்கதையும், பலமாக சூரியும் உள்ளனர்.


