

சீட்டுக்கட்டு விளையாட்டில், மிகக் குறைந்த மதிப்பும், அதே சமயம் அதிக மதிப்புமிக்க சீட்டாக ஏஸ் கருதப்படுகிறது. மனிதர்களைப் பற்றிக் குறிப்பிடும்பொழுது, ஒரு கடினமான சவாலைத் தனது இடு இணையற்ற திறமையால் முடிக்கும் நபரைச் சுட்டுகிறது.
குற்றப் பின்னணியுடைய நபர், மலேஷியாவிற்குச் செல்கிறார். பிரச்சனைகளில் சிக்காமல் அமைதியான வாழ நினைப்பவரைப் போல்ட் கண்ணன் எனக் கருதி வேலையில் சேர்த்து விடுகிறார் அறிவுக்கரசன். கண்ணன்க்கு வேலை கொடுத்த கல்பனாவிற்கு வங்கியில் கடன் சிக்கல், கண்ணனின் காதலி ருக்மிணிக்கு வேலையில் நீட்டிக்கவும், சொந்த வீட்டைத் தக்கவைத்துக் கொள்ளவும் பணம் தேவைப்படுகிறது. அதற்காக போக்கர் விளையாடி பணம் ஈட்ட நினைக்கிறார் போல்ட் கண்ணன். ஆனால், அப்போட்டியை நடத்தும் தர்மா, விளையாட்டில் அவர்களை ஏமாற்றி கடவுச்சீட்டைப் பிடுங்கிக் கொள்வதோடு, கொடுத்த கடனை வட்டியோடு அடைக்கும்படி மிரட்டுகிறார். இந்த அனைத்துப் பிரச்சனைகளில் இருந்தும் போல்ட் கண்ணன் எப்படி வெளியேறுகிறார் என்பதுதான் படத்தின் கதை.
தமிழில், கதாநாயகியாக அறிமுகமாகியுள்ளார் ருக்மிணி வசந்த். படத்தின் முதற்பாதியை அழகாக்குவது அவர் ஏற்றிருக்கும் ருக்கு பாத்திரம்தான். யோகிபாபுவால் காதலிக்கப்படும் கல்பனாவாக திவ்யா பிள்ளை நடித்துள்ளார். ருக்மிணியின் தந்தை (அம்மாவின் 2 ஆவது கணவர்) ராஜதுரையாக பப்லு பிருத்திவிராஜ் நடித்துள்ளார். படத்தின் பிரதான வில்லனாக அவர் அசத்தியிருந்தாலும், அவர் ஏற்படுத்தியிருக்க வேண்டிய தாக்கம் முழுவதுமாக வெளிப்படவில்லை. திரைக்கதை ஒரு மாதிரி அலைபாய்ந்து, போய்ச் சேர வேண்டிய இடத்தை நேர்க்கோட்டில் அடையாமல் கொஞ்சம் தலையைச் சுற்றியே சென்றடைகிறது.
இரண்டாம் பாதியை தன் உளறுவாயால் காப்பாற்றுகிறார் யோகிபாபு. யாரிடம் எதைச் சொல்லக்கூடாதோ, அதைச் சொல்லி தேரை இழுத்து நடுத்தெருவில் விடுகிறார். எல்லாவற்றையும் முன்கூட்டியே யூகிக்கக் கூடியவராகக் காட்டப்படும் விஜய் சேதுபதி, யோகிபாபுவின் சொதப்பலை யூகிக்காதது போல் செயற்படுவது இயக்குநர் ஆறுமுககுமாரின் பலவீனமான எழுத்திற்குச் சான்றாக உள்ளது. BS அவினாஷின் வில்லத்தனம் அவரது அறிமுகக்காட்சிகளில் அச்சுறுத்தினாலும், அதன் பின் அவரும் இரண்டாம் பாதியில் காமெடி நடிகராகிவிடுகிறார்.
படம் முழுவதும் மலேஷியாவில் எடுக்கப்பட்டுள்ளது. கரண் B. ரவத்தின் ஒளிப்பதிவில், மலேஷியாவின் அழகு ரசிக்க வைத்தாலும், இன்னும் நன்றாகச் சுற்றிக் காட்டியிருக்கலாம். படத்தின் சண்டைக் காட்சிகள் மிகவும் மெத்தனமாகக் கையாளப்பட்டுள்ளது. நடுத்தெருவில் காவலர்கள் வருகைக்குப் பின், மிக மிக நிதானமாக எந்த பதற்றமும் பரபரப்பும் அவசரமுமின்றி கொள்ளையடிக்கிறார் போல்ட் கண்ணன். படத்தொகுப்பாளர் ஃபென்னி ஆலிவராவது சுதாரிப்பாகக் கத்திரித்திருக்கலாம். விஜய் சேதுபதி உண்மையில் யார் என்ற மர்மத்தைக் கடைசி வரை தக்கவைத்து, அடுத்த பாகத்திற்கான ‘லீட்’-உடன் முடித்துள்ளனர்.

