Search

மகாமுனி விமர்சனம்

Magamuni-movie-review

மகாமுனி என்றதும் முதலில் நினைவுக்கு வருபவர் கெளதம புத்தர். இந்தியப் புராணங்களிலும் இதிகாசங்களிலும் தேடினால் சில பெயர்கள் கிடைக்கலாம். ஆனால், மத்திய மற்றும் கிழக்கு ஆசியாவைப் பொறுத்தவரை, மகாமுனி என்றால் புத்தர்தான். சத்திரியனாக இருந்து துறவு மேற்கொண்டு முனியானவர் என்பதைப் படத்தோடு பொருத்திக் கொள்ளலாம்.

சகோதரர்களான முனிராஜும் மகாதேவனும் சிறு வயதிலேயே பிரிந்து விடுகின்றனர். ஒரு கட்டத்தில் இருவரின் வாழ்வும் ஒரு புள்ளியில் இணைந்து மகாமுனியாய் பரிமாணம் பெறுவதுதான் படத்தின் கதை.

இயக்குநர் சாந்தகுமார், படம் தொடங்கியதுமே ஒரு கனமான போர்வையைப் பார்வையாளர்கள் மீது படர விடுகிறார். இறுதி வரை அதை விலக்க முடியாமல், பார்வையாளர்கள் அதன் கனத்தைச் சுமந்தவண்ணமுள்ளனர். அடுத்து என்ன என்ற பதைபதைப்போ, சுவாரசியமோ இல்லை. திரையில் காணும் பிரதான கதாபாத்திரங்களோடு பார்வையாளர்களால் தங்களைப் பொருத்திப் பார்த்துக் கொள்ள முடியாவிட்டாலும் கூட, முழுப் படத்திற்கும் பார்வையாளர்களை மெளனச் சாட்சியாக்கி அமர வைத்துவிடுகிறார் இயக்குநர்.

படம் சில சீரியசான விஷயங்களைப் பேசுவது போல் பாவனை செய்கிறது. ஆனால், எதையும் ஆழமாகத் தொடாமல் பிரமிப்பு காட்டி அடங்கிவிடுகிறது. உதாரணம், ‘புதிய திராவிடம்’ எனும் செய்தித்தாளை, கல்லூரியின் கடைசி செமஸ்டர் ப்ராஜெக்டாக உருவாக்குகிறார் தீபா எனும் பாத்திரத்தில் வரும் மகிமா நம்பியார். அவரது அலங்காரமும் உடையும் பார்த்ததும் ஈர்க்கும் வண்ணம் வித்தியாசமாகவும் நேர்த்தியாகவும் உள்ளது. அவரது அறைச் சுவரில், பெரியார், மார்க்ஸ், மதர் தெரசா என ஆளுமைகளின் படங்கள் ஒட்டப்பட்டிருக்கும். சித்தாந்தங்களில் மூழ்கி, அதை தன் வாழ்விலும் பிரதிபலிக்கும் மிகவும் சுதந்திரமான பெண். அவர், ஒரு காட்சியில் தன் வீட்டில் வேலை செய்யும் ஒரு நபரிடம், என்ன நடந்ததென்ன விசாரிக்க நேரும்போது, தன்னை ஓர் ஆண்டானாய்ப் பாவித்துக் கொண்டு, அவ்வேலையாளைத் துச்சமாக மதித்து பளார் பளாரென அறைகிறார். அவரது அறைச்சுவரில் ஒட்டப்பட்டிருக்கும் ஆளுமைகளின் படங்கள் எல்லாம் வெறும் புற அழகிற்காகத்தான் போலும். இத்தகைய முரண் எல்லாக் கதாபாத்திரங்களிலும் உண்டு. படத்தில் மகிமா எவ்வளவு புத்திசாலி என்றால், ஒருவனின் முகத்தைப் பார்த்தே, தன் வீட்டுக்கு என்ன நோக்கத்துடன் வந்துள்ளனர் என்பதைக் கண்டுபிடிக்கக் கூடியவர். அத்தகைய சமூக புரிதலுள்ள அறிவுஜீவி மகிமாவிற்கு, தன் வீட்டில் நாயகனுக்கு என்ன நிகழ்ந்திருக்கும் என யூகிக்க முடியாதவராய் உள்ளார். இதற்கே நாயகனின் அம்மா, ‘இன்ன காரணம்’ எனக் கோடிட்டு அனுப்பி வைப்பார். மகிமாவும் கோபப்படுகிறார். ஆனால், இன்ன காரணத்திற்காக என்று நேரடியாகத் தன் தந்தையின் முகத்தில் அடித்தாற்போல் பேசாமல், வேலையாளிடம் எகிறுகிறார். ஃபாரின் சரக்கு பாட்டிலை உடைத்துவிட்டு, ‘கிளாஸ் பீஸை ஒன்னுவிடாமல் பொறுக்கு’ என வேலைக்காரரிடம் ஹீரோயிசம் காட்டுகிறார். பரியேறும் பெருமாள் போல் அரசியல் பேச ஆசைப்பட்டு, அதைத் தேவையில்லாத இடத்திலெல்லாம் தொட்டுவிட்டு, பேச வேண்டிய இடத்தில் மெளனகுருவாகியுள்ளார் சாந்தகுமார்.

இது நிஜமாகவே மெளனகுரு இயக்கிய இயக்குநரிம் படம் தானா என சந்தேகமாக உள்ளது. மெளனகுரு படத்தின் பலமே அதன் கதாபாத்திரங்கள்தான். இந்தப் படத்திலோ, பிரதான கதாபாத்திரங்களின் வடிவாக்கமே மிக மிகத் தட்டையாக உள்ளது. மகாதேவன் பாத்திரம், ஒருவரைக் கொலை செய்ய பிசிறில்லாமல் ஸ்கெட்ச் போடுவதில் மிகச் சாமர்த்யியசாலி. ஆனால், தன்னை என்கவுண்ட்டர் செய்ய காவல்துறையினர் தேடுகின்றனர் எனத் தெரிந்தும், குண்டடிப்பட்ட நிலையிலும் ஸ்மார்ட்ஃபோனைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டே சுற்றுவார் மகா. ‘நான் இங்கன இந்த ஊர்ல தான் இருக்கேன். வந்து பிடிச்சுக்கோங்க’ என காவல்துறையினருக்குத் தன்னைப் பிடிக்கவே ஸ்கெட்ச் போட்டுக் கொடுக்கிறார். இன்னொரு பிரதான கதாபாத்திரமான முனிராஜோ, உலகப்படங்களைப் பார்க்கும் நடமாடும் நூலகமாகத் திரிபவர். அவருக்குத் தெரியாதது ஒன்றுமில்லை. கருவேல மரத்தில் ஒட்டியிருக்கும் பிளாஸ்டிக் கவர்களைப் பார்த்து, சாதிக் கொடுமைகளோடு அதை ஒப்பிட்டுப் பார்ப்பார். டிக்டாக்கில் சாதி பெருமை பேசும் பள்ளி மாணவர்களுக்கு, வீரத்துக்கும் சாதிக்கும் சம்பந்தமில்லை எனத் தெளிவாக எடுத்துரைத்து, வீரன் யார், கோழை யார், பாசாங்குகாரன் யார் என விளக்குவார். அந்த விளக்கத்தின்படி, முனிராஜ் எனும் பாத்திரம் தான் பாசாங்குத்தனத்தின் உச்சமாக உள்ளது.

மகா, முத்துராஜிற்காக ஸ்கெட்ச் போடுவார், கத்தி குத்து வாங்குவார், ஆனால் அதற்கெல்லாம் ஊதியம் மட்டும் வாங்கமாட்டாராம். ட்ராவல்ஸில் கார் ஓட்டிப் பரிதாப ஜீவனம் நடத்துவாராம். இப்படிலாம் காட்சி வைத்தால், பார்வையாளர்களுக்கு மகாவின் மீது பரிதாபம் வந்துவிடும் என நினைத்திருப்பார் போல இயக்குநர். ஆத்திர அவசரத்துக்கு, மருத்துவமனையில் காயத்திற்குக் கட்டு போடக் கூடக் காசில்லாமல் சிரமப்படும் மகாவிற்கு சம்பள பாக்கி 2 லட்சமாம். இவர் அடியாளாம்; அவரது முதலாளியோ பணம் கொழுத்த அரசியல்வாதியாம். முத்துராஜாக நடித்திருக்கும் இளவரசு மீது அப்படியொரு நம்பிக்கையும் பாசமும் (!??) மகாவான ஆர்யாவிற்கு. ஆர்யாவுக்கும் இளவரசுக்குமான உறவைப் பற்றிய தெளிவில்லாததால், படத்தின் இரண்டாம் பாதியில் எழும் கடுப்பை அடக்கமுடியவில்லை. ஆர்யா முதல் முறையாக இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். மகாவுக்கும், முனிக்குமான வேறுபாட்டை அழகாக நடிப்பில் கொண்டு வந்துள்ளார். ஆனால், ஆர்யா ஏற்ற இரண்டு பாத்திரங்களிலுமே ஒரு சோப்ளாங்கித்தனத்தைக் குடியமர்த்தியுள்ளார் இயக்குநர். அதற்கான ஒரே காரணம், பார்வையாளர்களின் பரிதாபத்தைக் கோருவதே! உள்ளபடிக்கு பரிதாபத்தைச் சம்பாதிப்பவர் மகாவின் மனைவி விஜி பாத்திரத்தில் நடித்திருக்கும் இந்துஜாதான். மெளனகுரு பட இயக்குநர் தான் உருவாக்கியிருப்பார் என்று படத்தில் நம்பும்படி உள்ள ஒரே பாத்திரம். இந்துஜா மிக நன்றாக நடித்துள்ளார்.

தனது முந்தைய படத்தில் இன்ஸ்பையராகி, மனநலக் காப்பகத்தையும், பணத்தாசை பிடித்த போலீஸ்காரரையும் இப்படத்திலும் உபயோகித்துள்ளார். படத்தின் தொடக்கத்திலேயே, ஆர்யா மனநலக் காப்பகத்தில் அடைப்பட்டுள்ளாரெனக் காட்டுகின்றனர். ஆனால் கடைசி வரை, அவர் ஏன் எதற்கு அங்கு உள்ளார் எனச் சொல்லப்படவில்லை. ‘வாவ், வாட்டே மேன்’ என படையப்பா சண்டை போடுவதைப் பார்த்து அப்பாஸ் ஆச்சரியப்படுவது போல, மனநல மருத்துவர்கள் கூட்டமாக நின்று கொண்டு ஆர்யாவைப் பார்த்து ஆச்சரியப்படுகின்றனர். ‘யாருய்யா இவன்? தண்டனை காலம் முடிஞ்சும் ஏன் இங்க இருக்கான்? திருக்குறளுக்கு இவ்ளோ தெளிவா விளக்கவுரை எழுதின ஒரு ஆளை என் சர்வீஸில் பார்த்ததே இல்லை? மனநல காப்பகத்தில் இருக்கிற நூலகத்தை இவனை மாதிரி நாமளே பயன்படுத்தியது இல்லையே! மனதை அமைதிப்படுத்துற யோகா செய்றான்? அடடா.. யார் சாமி இவன்? இவன் இவ்ளோ தெளிவா இருக்கான்? ஆனா இவன் கேஸ் ஏன் அவ்ளோ குழப்பமா இருக்கு!’ என முதன்மை மருத்துவர் ஆச்சரியப்பட்டு நம்மைக் குழப்புகிறார். அதுவும் ஆர்யா செய்யும் அந்த சிங்காசனத்தைப் (Simhasana pose) பார்த்து, ‘அடடே.. இது மனதை அமைதிப்படுத்துமே!’ என சிலாகிப்பது எல்லாம் ரொம்ப ஓவர்.

இன்னொரு காட்சியில், ஆர்யா, பிரம்மச்சரியத்தைக் காக்க உதவும் ‘பாத அங்குஸ்தாசனம்’ எனும் யோகா போஸ் செய்வதாகக் காட்டுகின்றனர். ஆர்யா இருப்பதோ, ஈரோடு மாவட்டத்திலுள்ள ஒரு கிராமம் அது. அங்கே மரத்தடியில் காற்றோட்டமாக ஆசனம் பழகுகிறார் ஆர்யா. ஆனால் அந்தக் குறிப்பிட்ட ஆசனம், பிக்ரம் செளத்ரியால் உருவாக்கப்பட்ட பிக்ரம் யோகாவில் (அல்லது ஹாட் யோகா) வரும் 26 ஆசனங்களில் ஒன்று. ஏன் அது ஹாட் யோகா என்றால், அறையின் வெப்பத்தை 40° க்குக் கூட்டி 90 நிமிடங்கள் செய்யப்படுவதால் அப்பெயர். அந்த ஆசனத்தை அந்தக் காரணத்திற்காக ஆர்யா பழக வாய்ப்பே இல்லை. இது ஒரு சின்ன கிரியேட்டிவ் சுதந்திரம் எனக் கடக்கலாம்தான். ஆனால், விபூதி பட்டை சாத்தியிருக்கும் முனிராஜின் நெற்றி மற்றும் உடை வாயிலாகவும், அவர் மேய்க்கரைக்குச் சென்று குழந்தைகளுக்குப் படிக்க புத்தகமும், சார்லி சாப்ளின் படமும் போடும் பொழுதும், அவர் வள்ளலார் வழி பின்பற்றவர் எனக் குறிப்பால் உணர்த்துகின்றனர். ஆக, அவ்வழி சார்ந்து ஆர்யா பயிற்சிகள் மேற்கொள்வதாகக் காட்டியிருக்கலாம் (Detailing is everything). மெளனகுரு போன்ற தரமான படமெடுத்தவர், எட்டு வருடம் ஒரு ஸ்கிரிப்டில் உழைப்பைப் போட்டிருந்தால், அந்தப் படம் எப்படியிருந்திருக்க வேண்டும்? அப்படியில்லாமல் போய்விட்டதே என்ற வருத்தமான பிலாக்கணமே இவ்விமர்சனம்.

‘மாணவர்களுக்கு அன்பைப் போதிங்க’ என்றொரு வசனம் வரும் படத்தில். ஆட்டுக்குட்டியை ஆதுரமாய்த் தழுவிக் கொண்டிருக்கும் ஏசுநாதரையும் மகாமுனியாகப் பாவிக்கலாம். படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரே அப்படித்தான் வெளியிடப்பட்டது. ஆனால், கதையிலும் கதாபாத்திரத்திலும் ஆழத்தை விட பாவனைகளே அதிகம். பரியேறும் பெருமாள் போல் சாதியம் பற்றியும் பேசவில்லை, மான்ஸ்டர் போல் ஜீவகாருண்யம்/பெருங்கருணை என்று ஆன்மிகமும் பேசவில்லை. இவ்வளவு தட்டையான கதாபாத்திர வார்ப்புகளையும், இத்தனை லாஜிக் பிழைகளையும், சாந்தகுமார்,  அறிமுக ஒளிப்பதிவாளர் அருள் பத்மநாபன் உதவியுடன், நேர்த்தியான விஷுவல்ஸால் சாமர்த்தியமாய் மறைத்துவிடுவதுதான் ஒரே ஆறுதல்.