Shadow

மெமரீஸ் விமர்சனம்

Memories Tamil movie review

மிகச் சிக்கலான சைக்கலாஜிக்கல் த்ரில்லர் என மெமரீஸ் படத்தைப் பற்றி படக்குழு விளம்பரப்படுத்தினர். அதற்கு ஏற்றாற்போலே அமைந்துள்ளது திரைக்கதை. பார்வையாளர்களின் அதீத கவனத்தைக் கோரும் ஒரு படம். பிரதான கதாபாத்திரத்தின் கோணத்திலேயே படம் பார்க்கப் பழகிவிட்ட பார்வையாளர்களுக்கு, இப்படம் சவாலானதாக இருக்கும். கதை மூன்றாக விரிகிறது, பிரதான கதாபாத்திரமான வெற்றி, ஒவ்வொரு உப கதையிலும் ஒவ்வொரு ரோலில் வருகிறார்.

முதல் கதையில், மருத்துவர் பெருமாளின் குடும்பம் கொல்லப்படுகிறது. அந்த நான்கு கொலைகளையும் செய்தது உதவி இயக்குநர் வெங்கி எனத் தெரிய வருகிறது. வெங்கிக்கோ, விபத்தில் ‘மெமரி லாஸ்’ ஏற்பட்டுவிட, மருத்துவர் அபிநவ் ராமானுஜத்தின் உதவியோடு, வெங்கியின் நினைவைத் தட்டியெழுப்பி, அவன் புரிந்த கொலைகளைப் பற்றி அவனையே வாக்குமூலம் செய்ய வைக்கின்றார்.

இரண்டாவது கதை, நான்கு கொலைகளையும் செய்தது வெங்கி அல்ல என எட்டு வருடங்களுக்குப் பிறகு, அவ்வழக்கை தூசி தட்டி எடுக்கிறார் போலீஸ் உயரதிகாரி ஏசிபி ஆதி கேஷவ். வெங்கியின் நினைவினை அழித்து, நடக்காததை நடந்தது போல் ‘மெமரி மேப்பிங்’ செய்து விடுகிறார் மருத்துவர் ராமானுஜம் எனக் கண்டுபிடிக்கிறார் ஆதி கேஷவ்.

மூன்றாவது கதை, கோமாவில் இருந்து விழித்தும், எதுவும் பேசாமல் சுவரெங்கும் ஓவியம் வரைந்தவாறு இருக்கும் மருத்துவர் ராமானுஜத்தை உண்மையை ஒத்துக் கொள்ள வைக்க மனசாட்சியுள்ள போலீஸ் உயரதிகாரி ஒருவரும், மருத்துவர் ஒருவரும் முயற்சி செய்கின்றனர்.

மேலே உள்ள மூன்று கதைகளில், இரண்டு நிகழ்கின்றன. ஒரு கதை மட்டும், நிகழ்ந்ததாக மெமரி மேப்பிங்கில் ஒரு கதாபாத்திரத்திற்கு நம்ப வைக்கப்படுகிறது. கிறிஸ்டோஃபர் நோலனின் இன்செப்ஷன் படத்தில், கனவுக்குள் சென்று ஒரு விஷயத்தை விதைப்பார்கள். இப்படத்தில், ஒருவரது மூளையை நவீன கருவிகளின் உதவியோடு, மெமரீஸினை அழித்து புதிய மெமரீஸை அளிக்கிறார்கள். இன்செப்ஷனிலும் மூன்று அடுக்குகளாகக் கதை சுவாரசியத்துடன் உட்செல்லும், இப்படத்தில் அந்த சுவாரசியம் மட்டும் மிஸ்ஸிங். ஒரு டைம் ஃப்ரேம்க்குள், நாயகன் குழு என்ன சாதிக்க நினைக்கிறது என இன்செப்ஷனில் சுவாரசியப்படுத்தியிருப்பர். மெமரீஸ் படம் த்ரில்லர் என்பதால், கடைசியில் தான் ட்விஸ்ட் ஓப்பன் செய்யப்பட வேண்டுமென ஒரு நிர்ப்பந்தத்தை இரட்டை இயக்குநர்கள் ஷ்யாமும் ப்ரவீனும் ஏற்படுத்திக் கொள்வதால், படம் எதை நோக்கிச் செல்கிறது என்ற தெளிவின்மை சுவாரசியத்தை மட்டுப்படுத்தி விடுகிறது.

இந்தப் படத்தில், மெமரீஸ் ஷோவில் கதை சொல்லும் வெற்றி, மூன்று கதைகளிலுமே ஒரு கதாபாத்திரமாக வருகிறார். ஷோவில் கதை சொல்பவராக, வெங்கியாக, ஆதி கேஷவாக, அபிநவ் ராமானுஜமாக நான்கு கெட்டப்பில் வருகிறார். த்ரில்லர், மிகச் சிக்கலாவது, ஒருவரே அத்தனை பாத்திரங்களிலும் தோன்றி, பின், பார்வையாளர்களின் மெமரியில் அதை அழிக்க முற்படுவதால்தான். 😉

போதாகுறைக்குப் படத்தில் ஒரு கதாபாத்திரத்திற்கு, GD (Grandiose Delusions) எனும் உளச்சிக்கல் வேறு உள்ளது. அதாவது, ஒரு பூனை தன்னை சிங்கமாகப் பாவித்துக் கொண்டு, அதை அப்படியே நம்பவும் செய்யும். அதை விட காமெடி, அந்தக் கதாபாத்திரத்திற்கு அப்படியொரு சிக்கல் இருக்கிறது என போலீஸ்காரரான RNR மனோகர், மருத்துவர் ஹரீஷ் பேராடிக்குச் சொல்வார். படத்தில் உண்மையான ட்விஸ்ட்டே இதுதான். கத்தி மேல் நடக்க வேண்டிய திரைக்கதையில், சாமர்த்தியமாக நடந்துவிட்ட இரட்டை இயக்குநர்கள் ஷ்யாமும் பிரவீனும், க்ளைமேக்ஸ் நோக்கி முடிச்சை அவிழ்க்க வேண்டிய பதற்றத்தில், வசனத்தின் துணையை நாடி விடுகின்றனர்.

மலையாள இயக்குநர்களான ஷ்யாம் – பிரவீன் படத்திற்குத் தமிழில் வசனம் எழுதியுள்ளார் அஜயன் பாலா. ‘இது ஒருவேளை கொரியன் படம் ஏதாவது ஒன்றின் தழுவலாக இருக்குமோ?’ என்ற ஐயத்தோடே, இப்படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். அஜயன் பாலாவும் தன் பங்கிற்கு அவரது சாமர்த்தியத்தையும் அனுபவத்தையும் காட்டக் களத்தில் இறங்காமல், வசனங்களில் எளிமையைக் கடைபிடித்துள்ளதால் கதையோடு கொஞ்சமாவது ஒன்ற முடிகிறது. இந்தப் படத்தின் மிகச் சவாலான பணியான படத்தொகுப்பைச் செய்துள்ளார் சான் லோகேஷ். பார்வையாளர்களை விடவும் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகியிருப்பார் என்பது மட்டும் திண்ணம்.

‘க்’ படத்தின் இசையமைப்பாளரான கவாஸ்கர் அவினாஷ், த்ரில்லர் படங்களின் நாடியே பின்னணி இசை என்பதை உணர்ந்து பின்னணி இசை அமைத்துள்ளார். (விமர்சனத்துக்குத் தேவையில்லாத சங்கதி எனினும், இவர் இப்படத்தில் இணைந்தது ஒரு சுவாரசியமான விஷயம். கொரோனோ முதல் அலையின் பொழுது, இந்தியாவிலேயே முதன்முறையாகக் கேரளாவில் 0 கொரோனோ நோயாளிகள் என பினராயி விஜயன் அறிவித்திருந்தார். அதைப் படத்தின் இயக்குநர்களில் ஒருவரான ஷ்யாம் ஃபேஸ்புக்கில் ஸ்டேட்டஸாக வைத்துள்ளார். ‘அப்ப கேரளாவில் சரியா டெஸ்ட் எடுத்திருக்க மாட்டீங்க’ என பின்னூட்டமிட்டுள்ளார் கவாஸ்கர் அவினாஷ். ‘யார்றா இவன்?’ எனக் கடுப்போடு அவரது ப்ரொஃபைலைப் பார்த்துள்ளார் ஷ்யாம். அப்படிப் போய்ப் பார்த்து, அவரது இசை பிடித்ததால், அவரை இசையமைப்பாளாராகத் தேர்ந்தெடுத்துள்ளனர்.)

ஜீவி படம் வெளிவந்ததும், இந்தப் பட வாய்ப்பினைப் பெற்றுள்ளார் நாயகன் வெற்றி. வெற்றியின் ஜீவி படத்தைக் காட்டியே இயக்குநர்கள், தயாரிப்பாளர் ஷிஜு தமீனைச் சம்மதிக்க வைத்துள்ளனர். இயக்குநர்களின் நம்பிக்கைக்கு எந்தக் குறையும் வைக்காமல், நான்கு கெட்டப்களிலும் வித்தியாசத்தினைக் காட்டியுள்ளார் வெற்றி. பார்வதி அருண், டயானா என படத்தில் இரண்டு நாயகிகள். தோன்றும்போது கவனிக்க வைத்தாலும், கதையின் complexity-இல் மறைந்து விடுகின்றனர்.

மெமரி மேப்பிங் செய்யவல்ல ஒரு மருத்துவர், சிலந்தி வலை ஒன்றைப் பின்னுகிறார். இது படத்தின் தொடக்கம். அதில் வெங்கி எனும் பூச்சி, சிக்கிக் கொள்கிறது. இது படத்தின் இடைவேளை. சிலந்தி தனது நச்சுக் கொடுக்கால் பூச்சியைக் கொல்ல நினைக்கும்பொழுது, சிலந்தி வலையில் இருந்து தப்பி விடுகிறது பூச்சி. இது படத்தின் முடிவு. மொத்த படத்தையும் இயக்குநர்கள், அழகான இக்குறியீட்டில் அடக்கியுள்ளது மிகவும் சிறப்பு.

பார்வையாளர்களுக்கு எங்கே புரியாமல் போய்விடுமோ என சிறு சிறு விஷயத்தையும் ஸ்ஃபூன் ஃபீடிங் செய்யும் இயக்குநர்களுக்கு மட்டியில், அவர்கள் மீது மிகுந்த நம்பிக்கை வைத்துப் படம் இயக்கியுள்ள ஷ்யாமிற்கும் பிரவீனிற்கும் வாழ்த்துகள்.