

மோ, மாயோன் முதலிய திரைப்படங்களை ஃபர்ஸ்ட் காப்பி முறையில் வெற்றிகரமாகத் தயாரிப்பதில் முத்திரை பதித்த ஜி. ஏ. ஹரிகிருஷ்ணன் தலைமையிலான மொமண்ட் என்டர்டெயின்மெண்ட்ஸ் நிறுவனம், தனது மூன்றாவது படைப்பாக மெட்ராஸ் மோஷன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்காக மெட்ராஸ் மேட்னி படத்தைத் தயாரித்துள்ளது. கார்த்திகேயன் மணி தயாரிப்பு மற்றும் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் சத்யராஜ், காளி வெங்கட், ஷெல்லி கிஷோர், ரோஷினி ஹரிப்ரியன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
உலகமெங்கும், ஜூன் 6 அன்று வெளியாகி இருக்கும் ‘மெட்ராஸ் மேட்னி’ திரைப்படம் அதன் நேர்த்தியான தயாரிப்புக்காகப் பாராட்டுகளைப் பெற்று வரும் நிலையில், மொமண்ட் என்டர்டெயின்மெண்ட்ஸ் தனது நான்காவது படைப்பை அறிவித்துள்ளது.
செல்வராகவன், யோகி பாபு, ஜெ டி சக்கரவர்த்தி, ஷைன் டோம் சாக்கோ, சுனில் உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் நடிக்கும் இப்படத்தை மொமண்ட் என்டர்டெயின்மெண்ட்ஸ் தயாரித்து வருகிறது. ராதாரவி, சரஸ்வதி மேனன் மற்றும் வினோதினி உள்ளிட்டோரும் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் செப்டம்பர் மாதம் இப்படத்தை வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளது. தரமான திரைப்படங்களைத் தொடர்ந்து தயாரிக்க மொமண்ட் என்டர்டெயின்மெண்ட்ஸ் உறுதி பூண்டுள்ளது.
ஜி.ஏ.ஹரிகிருஷ்ணன், “இது வரை நாங்கள் ஃபர்ஸ்ட் காப்பி முறையில் தயாரித்துள்ள மூன்று படங்களுமே துல்லியமாகத் திட்டமிடப்பட்டுத் திறம்பட உருவாக்கப்பட்டவை. இதற்கு முன்னர் பல ஆண்டுகளாகத் திரைத்துறையில் நாங்கள் பெற்ற அனுபவம் இந்தப் படைப்புகளின் தயாரிப்பை மேம்படுத்த எங்களுக்கு உறுதுணையாக இருந்தது. எங்கள் நிறுவனம் மூலம் ஒரு படத்தைத் தயாரிக்கும் போது கதை, இயக்குநர், நடிகர்கள், தொழில்நுட்ப குழுவினர் தேர்வில் தொடங்கி, பூஜை முதல் ரிலீஸ் வரை அனைத்துப் பணிகளையும் மொமண்ட் என்டர்டெயின்மெண்ட்ஸ் சிறப்பாகக் கையாளுவதால், தயாரிப்பாளர்களுக்கு எந்தவித இடையூறும் இருக்காது. எங்கள் நம்பகத்தன்மைக்கும் செயல்திறனுக்கும் நாங்கள் இது வரை ஃபர்ஸ்ட் காப்பி முறையில் தயாரித்த படங்களே சான்று” என்றார்.

