வடிவேலின் கம்-பேக் படமாக இருக்கும் என எதிர்பார்ப்பினை உருவாக்கிய படம். த்ரிஷா இல்லன்னா நயன்தாரா என கதை சொல்லி பில்டப்பை ஏத்தும், தலைநகரம் படத்து நாய்சேகருக்கும், இந்தப் படத்தின் பிரதான கதாபாத்திரத்துக்கும் யாதொரு சம்பந்தமும் இல்லை. இது முற்றிலும் மாறுபட்ட கதையிலும் வேடத்திலும் வடிவேலு தோன்றியூள்ளார்.
பணக்காரர்களின் நாய்களைத் திருடி, அவர்களிடம் பணம் பெற்றுக் கோண்டு நாயை ஒப்படைக்கும் திருடன் சேகர். தாஸ் எனும் தாதாவின் நாயைத் தெரியாமல் திருடி விட, சேகர் சிக்கலில் மாட்டிக் கொள்கிறான். அதே சமயம், சேகரின் குடும்பத்திலிருந்து திருடப்பட்ட நாய் பற்றித் தெரிய வர, அதை மீட்கும் முயற்சியில் ஈடுபடுகிறான் சேகர். நாயை மீட்டானா, தாஸிடமிருந்து தப்பினானா என்பதே படத்தின்கதை.
ஆன்ந்த்ராஜ், முனீஷ்காந்த், ராவ் ரமேஷ், லொள்ளு சபா மாறன், ரெடின் கிங்க்ஸ்லி, சிவாங்கி, ஷிவானி, மனோபாலா, சஞ்சனா சிங், லொள்ளு சபா சேஷு, வெங்கல் ராவ், விஜய் டிவி ராமர், விஜய் டிவி பாலா, தங்கதுரை, யூட்யூப் விமர்சகர் பிரஷாந்த் என படத்தில் ஏகத்திற்கு நட்சத்திரப் பட்டாளம். அதில் பெரும்பாலானோர் நகைச்சுவை நடிகர்கள். ஆனாலும் வெடித்துச் சிரிக்க வைக்கும் காமெடி மேஜிக் நிகழவே இல்லை.
பைரவர் கோயிலில், சித்தரின் அருளால் கிடைக்கும் அபூர்வ நாய், எடுப்பார் கை நாய்க்குட்டியாக உள்ளது. தன்னை வளர்ப்பவரை நாடி ஓடி வரும் நாயிற்கே உரிய குணங்கள் இல்லாத அதி அபூர்வ நாயாக உள்ளது. வடிவேலுவுக்கும், வடிவேலு தேடிச் செல்லும் நாயிற்குமான பந்தமும் அழுத்தமாகச் சொல்லப்படவில்லை. கண் தெரியாதவராக நடித்து நகைச்சுவையில் அதகளப்படுத்த வாய்ப்பிருந்தும் திரைக்கதை ஒத்துழைக்காமல் வடிவேலு மட்டும் என்ன செய்து விட இயலும்?
முழு நீள நகைச்சுவைப் படமாக, நாய்சேகரின் வருகையை சுவாரசியமாக ரசிக்கும்படி கொண்டு செல்லத் திணறியுள்ளார் இயக்குநர் சுராஜ். நிறைய படங்களில் வடிவேலு வரும் நகைச்சுவைக் காட்சிகள் ஆசுவாசம் அளிக்கும். அப்படி வடிவேலுவின் படத்தில், கடத்தல்காரன் தாஸாக வரும் ஆனந்த்ராஜின் காட்சிகளே ஆசுவாசம் அளிக்கின்றன. கதையில் நகைச்சுவைக்கான கண்ணிகளை உருவாக்குவதில் கவனம் செலுத்தாமல், வடிவேலுவின் உடற்மொழியையும் வசன உச்சரிப்பையும் மட்டுமே நம்பி களத்தில் குதித்துள்ளனர்.