அம்பத்தாறு நிமிடங்களுக்கு ஒருமுறை மாத்திரை எடுத்துக் கொள்ளாவிட்டால் இறந்துவிடக்கூடிய நபரொருவர், ஒரு விஞ்ஞானியையும் இரண்டு மருத்துவர்களையும் கொன்ற குற்றத்திற்காக்க் கைது செய்யப்படுகிறார். அவர் யார், அவருக்கும் அந்தக் கொலைகளுக்கும் தொடர்பு என்பதே படத்தின் கதை.
அந்தக் கொலை வழக்கை விசாரிக்கும் சி.பி.ஐ. அதிகாரியாக பிரியாமணி நடித்துள்ளார். மிடுக்கான நடை, அலட்சியமான பார்வை என்று புறத்தோற்றத்தில் அசத்தலான அதிகாரியாக உள்ளார். கிடைக்கும் துப்புகளை ஒருவரைச் சட்டென கைதும் செய்துவிடுகிறார். ஆனால், உண்மையான குற்றவாளியோ, வழக்கிற்கு உதவுவது போல் ப்ரியாமணியிடம் குற்றத்தைப் பற்றி ஒப்பிக்கிறார். ‘சாவதற்கு முன் உண்மைகளை சி.பி.ஐ. அதிகாரி அறிந்து கொள்ளட்டுமே!’ என்ற நல்லெண்ண அடிப்படையில் வில்லன் செயல்படுவது திரைக்கதைக்கு வேட்டு வைக்கும் காரியம்.
குற்றங்களை மூடி மறைப்பதோடு மட்டுமல்லாமல், சிபிஐ அதிகாரியையே கொல்லத் துணியும் வில்லனாக ராஜ் தீபக் ஷெட்டி கம்பீரம் காட்டியுள்ளார். அப்படி வம்படியாகப் போய்க் கொல்லும் அவசியம் நேராத பொழுதும் அதைச் செய்கிறார். கதையிலுள்ள சுவாரசியம், திரைக்கதை ஓட்டத்தில் பிரதிபலிக்காதது குறையாக உள்ளது.
முதற்பாதியில், நாயகன் பிரவீன் ரெட்டிக்கு (PR) அற்புதமான ஸ்க்ரீன் ஸ்பேஸை வழங்கியுள்ளனர். பாதி உடல் இறந்த நிலையிலும், அசத்தலாக சண்டை செய்கிறது அவர் ஏற்றிருக்கும் பாத்திரம். கூத்துப்பட்டறைக் கலைஞராக பிரம்மாண்டமான செட்டமைப்பில் ஆவேசமாகப் பாடலுக்கு நடனமாடுகிறார்.
மருத்துவ ஆராய்ச்சிக்கு, மிருகங்களைப் பயன்படுத்துவதையே தவறு எனக் குரல்கள் எழும் நிலையில், மனிதர்களைக் கடத்திப் பரிசோதனைக்கு பலி கொடுக்கும் கொடுமையைக் கடுமையாகச் சாடுகிறது படம். நாயகன், சிபிஐ அதிகாரி, வில்லன் ஆகியோர் தொடர் கொலைகளில் எந்தப் புள்ளியில் இணைகின்றனர் என்பதைக் கூடுதல் சுவாரசியத்துடன் அளித்திருக்கலாம் இயக்குநர். படத்தை, அசத்தலான மேக்கிங்கில் தொடங்கி ஈர்க்கிறார் இயக்குநர் ராஜேஷ் ஆனந்த் லீலா. அதற்குத் துணை செய்யும் திரைக்கதை அமையப் பெறாததால் Dr. 56-ஆல் நெஞ்சை நிமர்த்திக் கம்பீரமாகக் கவனத்தை ஈர்க்கத் தவறிவிடுகிறது.