நாயகனும் நாயகியும் மூன்றாண்டுகளாகக் காதலிப்பதைக் கொண்டாட நினைக்கின்றனர். மேலும், கல்லூரி வாழ்க்கை முடிவதாலும், நான்கு ஆண்கள், மூன்று பெண்கள் என இளைஞர்கள் எழுவர் ஊட்டிக்கு சுற்றுலா செல்கின்றனர். சுற்றுலாக்கு வந்த இடத்தில் நாயகன் காணாமல் போகிறார். நாயகனுக்கு என்னானது என்ற புலனாய்வு விசாரணையே படத்தின் கதை.
‘ராஷோமோன் (1950)’ எனும் ஜப்பானியத் திரைப்படப் பாணியில், கதாபாத்திரங்கள் அனைவரும் காணாமல் போன நாயகனைப் பற்றிச் சொல்கின்றனர். நாயகனைப் பற்றிய விவரணை நண்பர்களின் பார்வையிலிருந்து விரிகிறது. அந்த விவரணையில், நாயகன், எதிர் நாயகனாக மெல்ல மாற்றம் பெறுகிறான். காணாமல் போன நாயகனே கண்டுபிடிக்கப்படாத பட்சத்தில், மேலும் ஒரு நண்பன் காணாமல் போகிறான்.
ஷாரிக் ஹாசன், ஹரிதா, மோனிகா ரமேஷ், காவ்யா அமிரா, திவாகர் குமார், நிதின் ஆதித்யா, ஆனந்த், அரவிந்த், செல்வா, பாலா ஆகியோர் நடித்துள்ளனர். கெவின். N இசையமைக்க, விஷால். M ஒளிப்பதிவு செய்துள்ளார். ஊட்டியின் ரிசார்ட்டுக்குள்ளேயே பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன.
நாயகனாகப் பொருந்துவதை விட, ஷாரிக் ஹாசனின் நடிப்பு எதிர் நாயகனுக்குக் கச்சிதமாகப் பொருந்துகிறது. நாயகியான ஹரிதா, தொடக்கத்தில் பெரிதாக உதவாவிட்டாலும், க்ளைமேக்ஸ் நோக்கிச் செல்லும்பொழுது கதையில் முக்கியமான பாத்திரமாக அவதாரமெடுக்கிறார். ஆனால், அதற்குரிய நடிப்பை வழங்குவதில் கொஞ்சம் தடுமாறியுள்ளார்.
காவல்துறையின் விசாரணையின் விசாரணையில் உள்ள தொய்வு, படத்தின் திரைக்கதை ஓட்டத்திற்குத் தடையாக உள்ளது. விறுவிறுப்பைத் தக்க வைக்க முடியாவிட்டாலும், எழுதி இயக்கிவுள்ள சாய் ரோஷன் K.R., படத்தைச் சுவாரசியமாக முடித்துள்ளார்.