Shadow

கா – The Forest விமர்சனம்

கா என்றால் காடு அல்லது கானகம் என்பதாகப் பொருளென உருவகப்படுத்தியுள்ளனர். ஆனால், ‘கா’ என்றால் காத்தல் என்று பொருள் கொள்ளலாமே அன்றி காடு எனக் கொள்ளலாகாது. ஆதியும் காடே, அந்தமும் காடே என்ற பாடல் வரிகளுடன் அடர்ந்த காட்டின் அட்டகாசமான விஷுவல்ஸுடன் படம் தொடங்குகிறது.

கடுகுபாறை வனக்காவல் நிலையத்தின் அருகே முகாமிட்டுள்ளார் காட்டுயிர் ஒளிப்படக்கலைஞரான வெண்பா சுப்பையா. மதி என்ற பயந்த சுபாவிக்கு அவரது தந்தையின் வேலை கிடைத்து, கடுகுபாறை வனக்காவல் நிலையத்தில் பணியில் சேருகிறார். அரசியல் பேசி வில்லங்கத்தை உண்டாக்கும் ஓர் இளம்பெண்ணைக் கொலை செய்ய, அம்மலை வனப்பகுதிக்கு வருகிறார் விக்டர் மகாதேவன். இந்த மூன்று கதைகளும் ஒரு புள்ளியில் இணைகிறது.

மதி பாறையிடுக்கில் கீழே சகதியில் விழுந்து, மேலே வெளிச்சத்தைப் பார்ப்பது மஞ்ஞுமள் பாய்ஸில் வரும் காட்சி போலவே உள்ளது. விழுந்து கிடக்கும் இடத்தில் இருந்து மேலே வர இயலாமல், காற்றின் ஒலி அறிந்து பாறைகளைச் சுரண்டியெடுப்பதால் கிடைக்கும் வழியைப் பின்பற்றி கேரளாவிற்கே சென்று விடுகிறார்.

விக்டர் மகாதேவனாக சலிம் கவுஸ் நடித்துள்ளார். யாராக இருந்தாலும் கொன்று விடுகிறார். “எங்கும் நிறைந்திருக்கும் மகாதேவனாகிய நான், பசியிலிருந்து, வலியிலிருந்து, வாழ்க்கையிலிருந்து விடுதலை தருவேன்” என ஏதாவது நீளமாகப் பேசிவிட்டே கொலை செய்கிறார். சலிம் கவுஸின் கதாபாத்திரம் அழுத்தமாகச் சித்தரிக்கப்படாதது திரைக்கதையின் பலவீனத்தைக் காட்டுகிறது. வெண்பா சுப்பையாவாக ஆண்ட்ரியா நடித்துள்ளார். முதல் பாதியில் காட்டைச் சுற்றிக் காட்டுபவராக நடந்து கொண்டே உள்ளார். இரண்டாம் பாதியில் ஆக்ஷன் அவதாரம் எடுக்கிறார்.

வெட்டப்பட்ட மரத்திற்குள் ஆண்ட்ரியா ஓய்வெடுப்பது போல் அமைக்கப்பட்ட, கலை இயக்குநர் பழனிவேலின் செட் நன்றாக உள்ளது. சுந்தர் சி.பாபுவின் இசையும், காடுகளையும் மலைகளையும் அழகான விஷுவல்களாகப் படம்பிடித்துள்ள அறிவழகனின் ஒளிப்பதிவும் நன்றாக உள்ளது. படத்தொகுப்பாளர் எலிஸா மிகவும் சிரமப்பட்டுப் படத்தை ஓர் ஒழுங்கிற்குள் கொண்டு வர முயற்சி செய்துள்ளது பாராட்டத்தக்க முயற்சியாகும்.  

படத்தில் ஒரு போதாமை நிலவுகிறது. அழுத்தமான கதையற்ற களத்தில், கதாபாத்திரங்கள் கையில் துப்பாக்கியையோ, கத்தியையோ இறுகப் பற்றிக் கொண்டு யாரையாவது தேடியவண்ணமே உள்ளனர். சலிம் கவுஸும், ஆண்ட்ரியாவும் முடிந்தவரை க்ளைமேக்ஸ் வரை போராடி உள்ளனர். எனினும் இயக்குநர் நாஞ்சிலால் காட்டுக்குள் பார்வையாளரை இழுத்துக் கொள்ள முடியவில்லை.