எவருக்குமே நடந்துவிடக் கூடாத கொடுமை, ஓர் எட்டு வயது சிறுமிக்கு நிகழ்கிறது. படம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே பார்வையாளர்களை நிசப்தத்தில் தள்ளி விடுகிறார் இயக்குநர் மைக்கேல் அருண். படத்தின் முதல் பாதி முழுவதுமே அவஸ்தையுடனே அமர வேண்டியுள்ளது. பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளான தன் எட்டு வயது மகளின் ரத்தம் தோய்ந்த கால்களைக் காண நேரிடும் தாயின் மனநிலையை கற்பனை செய்து கூடப் பார்க்கமுடியவில்லை.
அச்சிறுமியும், அவளின் பெற்றோரும் அக்கொடிய அதிர்ச்சியில் (mental trauma) இருந்து எப்படி மீள்கின்றனர் என்பதே படத்தின் இரண்டாம் பாதி. வாழ்வின் மீதான நம்பிக்கையை முதற்பாதி குலைக்கிறது என்றால், சிறுமியின் புன்னகையை மீட்டு இரண்டாம் பாதி படம் நம்பிக்கைக் கீற்றை விதைக்கிறது. சில ரணங்கள் வாழ்நாள் முழுவதும் ஆறாதெனினும், முடங்கி விடாமல் அதிலிருந்து மீண்டு வருவது சாத்தியமே என சுபமாய் படம் முடிகிறது.
“எல்லா ஆம்பிளைங்களுமே சப்பை தான்; சப்பையும் ஒரு ஆம்பிளை தான்” என ‘ஆரண்ய காண்டம்’ படத்தில் ஒரு வசனம் (முன் பின் மாற்றப்பட்டுள்ளது) வரும். அது நகைச்சுவையாகக் கடக்கப்பட்டாலும், அடிபட்ட ஒரு பெண்ணின் வேதனையைப் பிரதிபலிக்கும் வசனம் அது. இப்படத்தில் அப்படியொரு மனநிலைக்கு இச்சிறுமியும் சென்று விடுகிறாள். பாசமிகு தன் தந்தை மீதும் அவளுக்கு வெறுப்பு எழுந்து விடுகிறது.
சிறுமியின் தந்தையாக அஜய் நடித்துள்ளார். பெற்ற மகளுக்கு நேர்ந்த துயரம், பொருளாதார நெருக்கடி என ஒருபுறம் நோக வேண்டிய நிர்ப்பந்தம் என்றால், அதை விடக் கொடுமையாக தன்னைப் பார்க்க விரும்பாமல் முகத்தை மூடிக் கொள்ளும் தன் மகளின் பதற்றமான மனநிலையை எதிர்கொள்ள வேண்டிய உச்சபட்ச வலியைத் தன் நடிப்பில் கொண்டு வந்துள்ளார் அஜய். குழந்தை சிரித்து, ஓரளவு சகஜமானதுமே அக்குழந்தையின் தாய் இயல்புநிலைக்குத் திரும்பி விடுகிறார். ஆனால், மகளால் புறக்கணிக்கப்படும் தந்தையால் சகஜநிலைக்குத் திரும்பவே முடிவதில்லை. இயக்குநர் மைக்கேல் அருண், ஒரு தந்தையின் மனநிலையை நுணக்கமாகச் சித்தரித்துள்ளார் என்றே சொல்லவேண்டும் (எல்லாத் தந்தைகளும் உள்ளுக்குள் தெய்வமிருகம் தான் என்னவோ!?)
படத்தின் முக்கிய அம்சமே, தன் மகளிடம் பேசுவதற்கு அஜய் ஒரு வழி கண்டுபிடித்துக் கொள்வதுதான். இரண்டாம் பாதியைச் சுவாரசியமாக்குவது தந்தை – மகளுக்குள் மெல்ல ஏற்படும் பிணைப்புத்தான். முதற்பாதி கொடுக்கும் கொடூரமான பதற்றத்திற்கு இயக்குநரே நிவாரணமும் அளித்து விடுவதால், படத்தை நம்பிப் பார்க்கலாம். நம்மை அச்சுறுத்தும் சில ஆபத்துகளை, கலையின் வாயிலாகவாவது எதிர்கொள்வது மிக அவசியம். இத்தகைய கொடுமைகள் நமக்கு நிகழாது என்பது உறுதி என நம்புவோம். அதற்கு இத்தகைய படங்கள் உதவும். குழந்தைகளுக்கு, ‘குட் டச் பேட் டச்’ பற்றிச் சொல்லித் தர வேண்டிய காலத்தின் அவசியத்தை இப்படம் உணர்த்துகிறது.
தமிழ்ப்படம் தான் என்றாலும், கதையின் களம் பெங்களூரு. ஆனால், சிறுமியின் தாயாக நடித்த அபிநயாவின் உதட்டசைவு வசனத்தோடு பொருந்தாமல் தனி ஆவர்த்தனம் செய்வதால், ‘டப்பிங்’ படம் பார்க்கின்ற உணர்வைத் தொடக்கத்தில் ஏற்படுத்துகிறது. இயக்குநரும், டப்பிங் குரல் தந்தவரும் இன்னும் கவனமாக இருந்திருக்கலாம். அபிநயாவும், காவல்துறை அதிகாரியாக வரும் கிஷோரும் மட்டுமே தெரிந்த முகங்கள்.
இந்தப் படம் அதன் மையக் கருவால் மட்டும் அதிர்ச்சியை அளிப்பதில்லை. பாதிக்கப்படும் சிறுமி குற்றுயிரும் கொலையுயிருமாய் ஒரு பாழடைந்த கட்டடத்தில் இருக்கிறாள். அவளிடம் ஒரு ஃபோன் உள்ளது. அவள் யாரை அழைப்பாள்? ‘நீங்க 2 பேரும் பிசியாக இருப்பீங்கன்னு நான் 100க்கு ஃபோன் பண்ணேன் என தன் தந்தையிடம் சொல்கிறாள். ‘தங்களை விட பெற்றோர்களுக்கு அவர்களது வேலைகள் தான் முக்கியம்’ என்று சிறுவர் சிறுமிகள் மனதில் பதிந்து விடுவது எவ்வளவு வேதனையான கொடுமையான சங்கதி??
பேபி சாதன்யா மிக அற்புதமாக நடித்திருக்கிறாள். என்னெவென்று சொல்லி அவளை நடிக்க வைத்திருப்பார்களோ என்று மனம் லேசாகத் துணுக்குறுகிறது. ஒரு குழந்தையைத் துன்புறுத்த ஒருவருக்கு எத்தகைய கொடும் மனம் வாய்த்திருக்க வேண்டும்? ‘நான் குடித்திருந்தேன். எனக்கு எதுவும் ஞாபகமில்லை’ என நீதிமன்றத்தில் கயவன் அப்பீல் செய்கிறான். தானொரு ’ஆல்கஹால் அடிக்ட்’ என்றும், சுய நினைவோடு குற்றம் நிகழாததால் சலுகையும் எதிர்பார்க்கிறான் அக்கொடியவன். ஆனால், சட்டம் தன் கடமையைச் செய்து பாலை வார்த்து விடுகிறது. பெங்களூருவில் நடந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு திரைக்கதையை உருவாக்கியுள்ளார் இயக்குநர். படத்தை ஏஞ்சலின் டாவின்சி என்பவர் தயாரித்துள்ளார். நிசப்தம் குழுவினருக்கு வாழ்த்துகள்.!