Search

காங்: ஸ்கல் ஐலேண்ட் விமர்சனம்

Kong skull island tamil review

குழந்தைகளுடன் பார்த்து மகிழ நல்லதொரு படம்.

மோனார்க் எனும் நிறுவனம், மனிதன் காலடிப்படாத ‘ஸ்கல் ஐலேண்ட்’ எனும் தீவை ஆராய அமெரிக்க அரசின் உதவியை நாடுகிறது. “நாம போகலைன்னா அந்தத் தீவுக்கு ரஷ்யா முதலில் போயிடும்” எனும் யோசிக்கும் அமெரிக்க அரசைச் சம்மதிக்க வைக்கிறது. ரொம்ப காக்க வைக்காமல், அதிர்வுகளை ஆராய நாலைந்து வெடிகுண்டுகளைத் தீவுக்குள் போட்டதுமே நாயகன் காங் தோன்றி அதகளம் செய்து விடுகிறார்.

வேரோடு மரத்தைப் பிடுங்கி அசுரர்கள் மேல் எறிந்தனர் வானரப்படை வீரர்கள் என இதிகாசமான ராமாயணத்தில் வர்ணனைகள் வரும். அது போல், மிஸைல் (missile) வேகத்தில் பறந்து வரும் ஒரு மரம் அமெரிக்க ராணுவ ஹெலிகாப்டரைக் குறி பிசகாமல் தாக்கும். காங், அந்தத் தீவின் கடவுள். பாதாள லோகத்தில் இருந்து வரும் ‘ஸ்கல் க்ராலர்ஸ் (Skull Crawlers)’ எனும் ராட்சஷ பல்லிகளிடம் இருந்து தீவைப் பாதுகாக்கிறது காங்.

நிலப்பரப்பு சார்ந்த சாகசப்படமான ஸ்கல் ஐலேண்டில், காலமும் பிரதான பாத்திரம் வகுக்கிறது. விமான விபத்து ஏற்பட்டுத் தீவில் தரையிறங்கும் அமெரிக்கன் மற்றும் ஜப்பானியனின் கைக்கலப்பில்தான் படம் தொடங்குகிறது. இருவரும் இரண்டாம் உலகப்போரில் ஈடுபட்டுள்ள வீரர்கள். இயற்கையின் மகத்துவம் அவர்களுக்குள் இருந்த பகைமையைப் போக்குகிறது. வெளியேற வழியின்றி, பல வருடங்கள் அத்தீவிலேயே அவர்கள் வாழ நேர்கிறது. 29 ஆண்டுகள் கழித்து, அத்தீவை ஆய்வு செய்ய வரும் குழுவினரிடம், “போரில் யார் ஜெயிச்சது?” என ஆர்வமாகக் கேட்கிறார். அதையும் விடச் சுவாரசியம், ரஷ்யா நமக்கு நட்பு நாடுதானே என அப்பாவியாகக் கேட்கிறார். அவருக்கு பனிப்போர் என்றாலும் என்னவென்று புரிவதில்லை. அத்தீவின் மெளனப் பூர்வகுடிகளிடம் இருந்து அவர் விடைபெறுமிடம் நெகிழ்ச்சியான காட்சியென்றால், க்ளைமேக்ஸில் 29 வருடங்கள் கழித்து அவர் வீட்டுக்குச் சென்று சேரும் காட்சியோ மனதைக் கனக்க வைக்கிறது.

70களின் தொடக்கம் தான் படத்தின் கதை நடக்கும் காலம். விண்ணில் இருந்து பூமியைப் படம் பிடிக்கும் லேண்ட்சேட் (LANDSAT) தொழில்நுட்பம் அறிமுகமான காலமது. வியட்நாம் போருக்கு எதிராக அமெரிக்க மக்கள் போராடியதன் விளைவாக, வியட்நாமில் இருக்கும் அமெரிக்க இராணுவம் திரும்ப அழைக்கப்படுகிறது. போரில் எதிரிகளைக் கொல்வதுதான் நாட்டுப்பற்று என மிகத் தீவிரமாக நம்பும் கர்னல் பேக்கார்ட் வியட்நாமில் இருந்து நேராக ஸ்கல் ஐலேண்ட்க்கு அனுப்பப்படுகிறார். ஆய்விற்காக அவரது குழு வீசிய வெடிகுண்டுகளின் அதிர்வுகளால், ஸ்கல் கிராலர்ஸ் பாதாளப் பள்ளத்தில் இருந்து மேலே பூமிக்கு வந்துவிடுகின்றன. தீவின் அமைதியைக் குலைக்கும் பேக்கார்ட் குழுவின் ஹெலிகாப்டர்களை ஒன்று விடாமல் காங் சிதறடிக்கிறது. அமெரிக்க கர்னலான பேக்கார்ட் காங்கைக் கொன்று பழி வாங்கியே தீருவேன் என சபதம் எடுக்கிறார்; ஆனால், ஆய்வு செய்ய வரும் ‘மோனார்க்’ குழுவோ தீவை விட்டு வெளியே செல்லத் துடிக்கிறது; ஒட்டுமொத்த தீவையும் அச்சுறுத்தும் ‘ஸ்கல் க்ராலர்ஸ்’ மேலே வருகிறது. இம்மூன்றும் இணையும் இடத்தில் காங் விஸ்வரூபம் எடுக்கிறது.

‘தோர்’-இன் தம்பி லோக்கியாகக் கலக்கி வரும் டாம் ஹிடல்ஸ்டன் மாறுபட்ட வேடத்தில் நடித்து அசத்தியுள்ளார். தீவில் ஆய்வு மேற்கொள்ளும் குழுவிற்கு ‘ட்ராக்கர் (tracker)’ ஆக உதவுகிறார். மிருகங்களின் கால்தடங்களை ஆராய்வது, காட்டுக்குள் வழித்தடங்கள் கண்டுபிடிப்பது போன்றவை ட்ராக்கரின் வேலைகள். நாயகன் டாம் ஹிடல்ஸ்டன் என்ற பொழுதிலும், படத்தின் மைய ஈர்ப்பாக இருப்பது கர்னல் பேக்கார்டாக நடித்திருக்கும் சாமுவேல் ஜாக்ஸன்தான். வாழ்நாளெல்லாம் போர்க்களத்தில் கழித்த ஓர் அக்மார்க் அமெரிக்க சோல்ஜரின் அகத்தை வெளிக்காட்டி, பார்வையாளர்களின் வெறுப்பைச் சம்பாதித்துக் கொள்கிறார்.

இண்டஸ்ட்ரியல் லைட்& மேஜிக் எனும் நிறுவனத்தின் அற்புதமான சிஜி (CG) வேலைப்பாடுகள்தான் படத்தின் பெரும்பலம். நூறடி உயர கிங் காங்கைக் கம்பீரமாகத் திரையில் உலவ விட்டுள்ளனர். தன்னைச் சுற்றிக் கொள்ளும் இராட்சஷ ஆக்டோபஸைக் காங் முறியடிக்கும் இடம், இராட்சஷ ஸ்கல் க்ராலரைப் புரட்டி எடுக்கும் இடமென அனிமேஷனில் அதகளம் புரிந்துள்ளனர். எங்கோ ஒரு தீவில் வாழும் காங், தன்னை உருவாக்கிய இயக்குநர் ஜோர்டன்-வோட் ராபர்ட்ஸை உலகறியச் செய்துள்ளது.