Shadow

நித்தம் ஒரு வானம் விமர்சனம்

மாறிக் கொண்டே இருக்கும் இயல்புடையது வானம். அதுவே வானத்தின் தனித்த அழகிற்குக் காரணம். மனிதனின் வாழ்க்கையை அழகுப்படுத்துவதும் அவனது வாழ்வில் நிகழும் இத்தகைய மாற்றங்களே! ஆனால் மாற்றத்தை விரும்பாத மனமோ, அதற்கு பயந்து முடங்கி விடுகிறது. ஒரு சிறு ஏமாற்றத்தை ஏற்றுக் கொள்ள முடியாமல், வாழ்க்கையே முடங்கிவிட்டதாகக் கருதும் அர்ஜுன்க்கு வாழ்க்கையின் உண்மையான அழகையும், வாழ்வதற்கான உத்வேகத்தையும் அளிக்க இரண்டு கதைகள் சொல்கிறார் மருத்துவர் கிருஷ்ணவேணி. அந்தக் கதைகளின் ஊடாக அர்ஜுன் செய்யும் பயணமே படத்தின் கதை.

மருத்துவர் கிருஷ்ணவேணியாக அபிராமி நடித்துள்ளார். மிகக் குறைவான காட்சிகளிலேயே தோன்றினாலும் நிறைவான ஸ்க்ரீன் பிரசென்ஸை அளித்துள்ளார். அர்ஜூனாக, இரண்டு கதைகளில் வரும் வீரா, பிரபா என மேலும் இரண்டு பாத்திரங்களில் தோன்றியுள்ளார். மூன்று கதாபாத்திரங்களையும் வேறுபடுத்திக் காட்டும் நேர்த்தியான நடிப்பைக் கொடுத்துள்ளார் அசோக்செல்வன்.

சுபத்ராவாக ரிது வர்மா, மீனாட்சியாக ஷிவாதிமிகா ராஜசேகர், மதியாக அபர்ணா பாலமுரளி, விளையாட்டுப் பயிற்றுநராக ஷிவதா என படத்தில் நான்கு கதாநாயகிகள் நடித்துள்ளனர். ஒரு பயணத்தில் அந்நியராக அறிமுகமாகும் ரிது வர்மா கதாபாத்திரத்திற்குப் போதுமான டீட்டெயிலிங் செய்யப்படாதது ஒரு குறையாக உள்ளது. ஆடல் பாடலுக்கு என்று மட்டுமல்லாமல், நால்வருக்குமே நடிப்பதற்கு வாய்ப்புள்ள முக்கியத்துவம் அளிக்கும் கதாபாத்திரங்களாக உருவாக்கியுள்ளார் இயக்குநர் ரா.கார்த்திக். கிடைத்த வாய்ப்பினைக் கச்சிதமாகப் பயன்படுத்தி நடிப்பில் அசத்தியுள்ளனர் நாயகிகள்.

OCD உள்ளவராகக் காட்டப்படும் அர்ஜூன் கதாபாத்திரத்தை, மேலும் அழுத்தமாகக் கட்டமைத்திருக்கலாம். ஓசிடி சீர்குலைவை அருவருக்கத்தக்க வகையில், அவரது மனமாற்றத்தோடு இதுவும் சரியாவதாகப் படத்தை முடித்திருப்பது ஏற்றுக் கொள்ள சிரமமாக உள்ளது. அவரது பிரச்சனை, சரியாகக் கனெக்ட் ஆகவில்லை. ஆனால் அவர் தேடிப் போகும் தீர்வு, படத்தின் இரண்டாம் பாதியில் கனெக்ட் ஆகிறது. அந்தோணியின் படத்தொகுப்பு, மாயத்தை ஏற்படுத்தும் மேஜிக்கைச் செய்யத் தவறியுள்ளது. படத்தின் மிகப் பெரும் பலம், விது அய்யன்னாவின் ஒளிப்பதிவும், அசோக் செல்வனின் நடிப்புமே!