
இன்றைய காதல் என்பதை விட இன்றைய இளைஞர்கள் பற்றிய படம் என்பதே பொருத்தமாக இருக்கும். App(a) Lock என்ற தனது குறும்படத்தை முழு நீளத் திரைப்படமாக உருவாக்கியுள்ளார் பிரதீப் ரங்கநாதன்.
இன்றைய யூத்களின் பல்ஸைக் கச்சிதமாகப் பிடித்து, காமெடி, காதல், சென்டிமென்ட், எமோஷன் என கலந்து கட்டி எழுதி இயக்கி நடித்துள்ளார் பிரதீப் ரங்கநாதன். காலதாமதமான (Belated) தீபாவளிக் கொண்டாட்டத்தைத் திரையரங்கிற்குக் கொண்டு வந்துள்ளனர் ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட்.
உத்தமன் பிரதீப்பும், நிகிதாவும் காதலிக்கின்றனர். நிகிதாவின் தந்தை வேணு சாஸ்திரி, காதலர்கள் இருவரின் மொபைல் ஃபோன்களையும் மாற்றிக் கொண்டு ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டார்களா என தெரிந்து கொள்ள ஒரு வினோதமான நிபந்தனை விதிக்கிறார். உத்தமனின் ஃபோன் நிகிதாவிடமும், நிகிதாவின் ஃபோன் உத்தமனிடமும் செல்ல திரைக்கதை சூடு பிடிக்கிறது.
தனது முதற்படமான கோமாளியில் யோகிபாபுவைக் குணசித்திர நடிகராகக் காட்டியது போலவே, மிகவும் அழுத்தமான பாத்திரத்தில் நடிக்க வைத்துள்ளார் பிரதீப் ரங்கநாதன். மையக்கதையில் மட்டுமல்லாமல், ரவீனாவிற்கும் யோகிபாபுவிற்குமான கிளைக்கதையையும் மிக நன்றாகக் கொண்டு சென்றுள்ளார். உருவக்கேலிக்கு எதிராக அழுத்தமான காட்சியையும் யோகிபாபு அத்தியாயத்தில் அழகாகக் கொண்டு வந்துள்ளது சிறப்பு. தங்கைக்கு ஆபாசமாகச் செய்தி அனுப்பியது நாயகன் என எண்ணி உடைந்து அழும் இடத்தில் நிகிதாவாக நடித்துள்ள இவானாவும் சிறப்பாக நடித்துள்ளார். ஆனாலும், க்ளைமேக்ஸில் அந்த கனமான தருணங்களைச் சுமக்கத் திணறியுள்ளார்.
குறும்படத்தில் டெல்லி கணேஷ் ஏற்படுத்தும் தாக்கத்தை ஏற்படுத்த சத்யராஜ் தவறினாலும், அவரது பாணியான நக்கலையும் நையாண்டியையும் வேணு சாஸ்திரி பாத்திரத்தில் கொண்டு வந்து படத்தின் கலகலப்பிற்கு உதவியுள்ளார். அன்பான அம்மாவாக மகனை நிதானப்படுத்தும் சரஸ்வதி அம்மா பாத்திரத்தில் அசத்தியுள்ளார் ராதிகா. யோகிபாபுவிற்கு ஜோடியாகவும், நாயகனின் அக்காவாகவும் திவ்யா எனும் பாத்திரத்தில் வரும் ரவீனாவிற்கும் தேவையான முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. நாயகனின் நண்பர்களாக வரும் ஃபைனலி பாரத், ஆதித்யா கதிர் என அனைவருக்குமே திரையில் தனித்துத் தெரிவதற்கான இடத்தினை உருவாக்கியுள்ளார் பிரதீப். நிறைய இடங்களில் தனுஷின் நடிப்பைப் பிரதி எடுத்தது போல் தோன்றினாலும், இயக்குநராக மட்டுமல்லாமல் நடிகராகவும் மிகச் சிறப்பான பங்காற்றியுள்ளார் பிரதீப் ரங்கநாதன்.
காட்சிகளாக (Scenes) இல்லாமல் சின்னச் சின்ன ஷாட்ஸ்களின் மூலம் சுவாரசியத்தைக் கூட்டியுள்ளனர். கழிப்பறையில் அமர்ந்து நிகிதாவின் இன்பாக்ஸ்க்குள் நாயகன் செல்லும் விர்ச்சுவல் டூர் முதலிய காட்சிகள் படத்தின் விறுவிறுப்பைத் தக்க வைத்துக் கொள்ள உதவியுள்ளன. யுவன் ஷங்கர் ராஜாவின் இசை, தினேஷ் புருஷோத்தமனின் ஒளிப்பதிவு, பிரதீப் E. ராகவின் நறுக்கென்ற படத்தொகுப்பு படத்தினை யூத் ஃபுல் என்டர்டெயினராக மாற்றியுள்ளது.
[…] லவ் டுடே படத்தில் நடிக்க ஒப்புக் கொண்ட போது கூட ஒரு தயக்கம் இருந்தது. ஆனாலும் ஒப்புக் கொண்டு நடித்தேன். அந்தப் படம் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது. அதனால் இப்போதெல்லாம் பெரிதாக அலட்டிக் கொள்வதில்லை. தவிர வால்டர் வெற்றிவேல், அமைதிப்படை காலத்தில் சினிமா என் கையில் இருந்தது. இப்போது நான் சினிமாவின் கையில் இருக்கிறேன். அந்த எதார்த்தத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். […]
[…] முந்தைய தயாரிப்பான ‘லவ் டுடேலவ் டுடே‘வின் மேஜிக்கிற்கு பிரதீப் E. ராகவ் […]
[…] தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி, லவ் டுடே திரைப்படத்தின் மூலம் மக்கள் மனதில் […]