ஷான் கருப்புசாமியின் வெட்டாட்டம் நாவல் அப்படியே படமாக ஆனந்த் ஷங்கரால் எடுக்கப்பட்டுள்ளது.
முதலமைச்சர் வினோதன் தனது மகன் வருணிடம் முதலமைச்சர் பதவியை, இரண்டு வாரத்திற்குக் கைமாற்றிவிட்டு தன் மீது நீதிமன்றதிலுள்ள வழக்கைச் சந்திக்கத் தயாராகிறார். வழக்கின் தீர்ப்பு வினோதனுக்குப் பாதகமாகி விட, வருண் முதலமைச்சர் பதவியில் நீடிக்குமாறு ஆகிவிடுகிறது. சொந்த கட்சி ஆட்களின் அத்துமீறல், இயற்கைச் சீற்றம், குடும்பத்தின் மீதான உயிர் அச்சுறுத்தல் என வருண் தனக்கு முன்னுள்ள சவால்களை எல்லாம் எப்படிச் சமாளிக்கிறான் என்பதுதான் படத்தின் கதை.
சமகால அரசியல் பகடியும், ரெளடி முதல்வராக வரும் விஜய் தேவரகொண்டாவும் தான் படத்தின் பலம். விஜய் தேவரகொண்டாவைச் சுலபமாய் ஏற்றுக் கொள்ள முடிகிறது. படம் அவரைச் சுற்றித்தான் நடக்கிறது, என்றாலும் அவரைத் தவிர வேறு எவருக்குமே முக்கியத்துவம் தராதது ஏன் எனத் தெரியவில்லை?
படம் அடுத்தடுத்து எனத் தொடக்கம் முதலே காட்சிகளில் வேகம் பிடிக்கிறது. கதை கடத்தப்பட்டாலும், கதாப்பாத்திரங்களை உள்வாங்கிக் கொள்ளும் அவகாசத்தைப் படம் தருவதில்லை. வருணுக்கும் வினோதனுக்குமான பனிப்போர் தான் நாவலின் மையச்சரடு. தன் தந்தையை வருணுக்கு எந்த அளவு பிடிக்காது என்பதைப் படம் வலியுறுத்திக் காட்டவில்லை. ‘ஒதுங்கி இருக்கிற என்னை ஏன் இழுத்து விடுறீங்க?’ என்பது, நாயகனுக்கு அரசியல் பிடிக்காது என்பது போல் படத்தின் வசனம் தொனிக்கிறது. ‘இவன்தான்ப்பா ஹீரோ’ என்றளவே விஜய் தேவரகொண்டா அறிமுகமுள்ளதே தவிர கதாப்பாத்திர டீட்டெயிலிங் என்பது மிஸ்ஸிங். இது படத்தின் அனைத்துக் கதாப்பாத்திரங்களுக்குமே பொருந்தும்.
நாசர் தன்னை ஒரு வில்லனாகப் பாவித்துக் கொண்டு நடித்துள்ளார். ‘தீ குளித்தால் கட்சி 5 லட்சம் கொடுக்கும்.. கொடுக்கும்’ என ஒரு சீரியஸ்னஸ் இல்லாமல் காமிக்கலாக அறிமுகப்படுத்தப்படுகிறார். விபத்துக்குப் பிறகான அவரது மேக்கப்க்கு என்ன அவசியம் நேர்ந்தது எனத் தெரியவில்லை. மிகப் பெரிய பவர் கேமில், வருண் பகடையாக்கப்படுகிறான் என்ற பதற்றம் நாயகனுக்கே இல்லை. இப்படித் தாக்கம் தரவேண்டிய காட்சிகள் எல்லாம் சொடுக்கு போடும் வேகத்தில் நகர்கிறது.
பெண் கதாப்பாத்திரங்கள் அவ்வளவு வலுவாகக் கட்டமைக்கப்படாதது மிகவும் குறை. சத்யராஜின் மகள் கதாப்பாத்திரம் திணிக்கப்பட்டதாய்த் தொக்கி நிற்கிறது. மகிளரணி தலைவியாக வரும் கயலுக்கும் வருணுக்குமான நட்பு, வாங்கிற்கும் வருணுக்குமான நட்பு, பத்திரிகையாளர் மகேந்திரனுக்குமான வருணுக்குமான பந்தம் என எதிலும் ஒரு ஒட்டல் இல்லை. அதை விட ஸ்வாதிக்கும் வருணுக்குமான காதலோ நட்போ கூடச் சரியாகச் சொல்லப்படவில்லை. கதாப்பாத்திரங்களுக்கும் இடையேயான உறவு மிக மிகப் பலவீனமாகக் காட்டப்பட்டுள்ளது மிகப் பெரும் குறை.
திரைக்கதையை ஷானும் ஆனந்தும் இணைந்து எழுதியுள்ளனர். நாவலில் உள்ள பல அடுக்குகளைத் திரைக்கதையில் கொண்டு வரத் தவறியுள்ளனர். படம், தந்தை மகனுக்கான அதிகாரப் போட்டியாகவும் இல்லாமல், ஒரு மாநிலத்தின் முதல்வர்க்கும், கார்ப்ரேட் சாமியாருக்குமான மோதலாகவும் இல்லாமல், இரண்டுக்குமிடையில் இலக்கைத் தவற விட்டுள்ளனர். இரண்டாம் பாதியில், சத்யராஜ், நாசர், அபிராமி ஐயர் ஃப்ளாஷ்-பேக்கையாவது தவிர்த்திருக்கலாம். ஸ்பூஃப் மூவியோ என்றெல்லாம் அநாவசிய ஐயம் எழுகிறது.
ஷான் கருப்புசாமியின் கதையும், விஜய் தேவரகொண்டாவின் ஸ்க்ரீன் ப்ரெசன்ஸும் நோட்டாவைக் கரை சேர்க்கிறது. திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் மெனக்கெடல் இருந்திருந்தால், படம் வேற லெவலில் இருந்திருக்கும்.