Shadow

ஏற்றத்தாழ்வினைப் பேசும் பாராசைட்

parasite-review‘பாராசைட் (Parasite)’ என்பது ஒட்டுண்ணியைக் குறிக்கும். மற்றொரு உயிரினத்தை ஒட்டி வாழும் உயிரை ஒட்டுண்ணி என்பர். படத்தின் கருவை உணர்த்தும் குறியீட்டுப் பெயராக, ‘பாராசைட்’ எனும் தலைப்பினைக் கொள்ளலாம்.

இந்தக் கொரியன் படம் மொத்தமாக 4 ஆஸ்கார் விருதுகளை அள்ளியிருக்கிறது. அதுவும் சிறந்த படம், சிறந்த சர்வதேச படம் எனும் இரண்டு முக்கிய கேட்டகரியிலும் வென்றதால் வியத்தகு பாராட்டுகளையும், கடுமையான விமர்சனங்களையும் சம அளவில் சந்தித்து வருகிறது. ஆஸ்கார் விருதுகளில் லாபி அதிகம், அதே போல ஹாலிவுட் தயாரிப்பாளர்களின் வணிக நோக்கமும் விருதுக்கான தேர்வில் அழுத்தத்தினைக் கொடுக்கும். ஆசிய மார்கெட்டை ஹாலிவுட் பக்கம் திருப்பக் கூடுதல் கவனத்தை, சமீப வருடங்களில் ஆஸ்கார் விருதின் போது அளிக்கப்பட்டு வருகிறது. ஆகவே, ஆஸ்கார் விருதுகளைப் பெரிய அங்கீகரமாக எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை.

இந்த விருதுகளைத் தாண்டி, உண்மையிலேயே இந்தப் படம் முக்கியமான படமா என்றால், நிச்சயமாக ‘ஆம்’ எனச் சொல்லலாம். கடந்த பத்து ஆண்டுகளில் வெளிவந்த சிறந்த உலகப்படங்களில் ஒன்றாக பாராசைட் படத்தினை வைக்கலாம். இப்படத்தினை இயக்குநர் பாங்-ஜீன்-ஹோ உலக அளவில் மதிக்கப்படும் செலபிரிட்டி இயக்குநர். இவரது ‘மெமரிஸ் ஆஃப் மர்டர்’, ‘த ஹோஸ்ட்’, ‘மதர்’ எல்லாம் மாஸ்டர் க்ளாஸ் திரைப்படங்கள். அந்தப் படங்களின் வரிசையில் இப்போது பாராசைட்டையும் சேர்த்துக் கொள்ளலாம்.

இந்தப் படத்தில், ஒரு காட்சியில் ஒரு வசனம் வரும். “She is nice and rich” என்று ஒரு கதாபாத்திரம் தனது முதலாளியம்மா குறித்து சொல்ல, இன்னொரு கதாபாத்திரம், “No.. she is nice because she is rich” எனக் கூறும். ‘நான் நினைத்தது எல்லாம் கிடைக்கும் அளவுக்கு பணமும் வசதியும் இருந்தால், நான் அறம் குறித்தும், நல்ல விஷயங்கள் குறித்தும் நிறைய பேசலாம், நடந்து கொள்ளலாம்’ என்பது அந்தக் கதாபாத்திரத்தின் வாதம். எப்பவோ படித்த கவிதை ஒன்று ஞாபகத்துக்கு வருகிறது.

வானம் அழகு!
நிலா அழகு!
என் கையில்
ரொட்டித்துண்டு.

அடிப்படை தேவைகள் பூர்த்தியடைந்த பிறகு தான் வாழ்வின் அழகியல் குறித்த சிந்தனையே தோன்றும். இதனையே மாஸ்லோவின் மனிததேவைகளின் பிரமிட் தத்துவமும் குறிப்பிடுகிறது. அதனால பணக்காரர்களின் பெருந்தன்மை பெரிய மேட்டரே கிடையாது.

நான் வலுவாக நம்பும் இன்னொரு விஷயம், சமூகத்தில் வறுமையை விட மிக ஆபத்தானது ஏற்றத்தாழ்வு என்பதாகும். ஒரு ஊரில் எல்லோருமே ஏழையாக இருந்தால் கூட அது பெரிய பிரச்சனை இல்லை. அவர்கள் இருப்பதை வைத்து அனுசரித்து வாழப் பழகிவிடுவார்கள். ஆனால், ஊரில் பத்து பேருக்கு, ஏழு ஏழைகளும், மூன்று மிகப்பெரிய பணக்காரர்களும் இருந்தால் தான் சிக்கல். அது கண்ணை உறுத்தும். நகரங்களில் அதிகரித்து வரும் க்ரைம்களின் அடிப்படையே இந்த ஏற்றத்தாழ்வு தான். இதைப் பற்றித் தான் “பாராசைட்” படம் பேசுகிறது.

கதைப்படி, கி-வூ தனது தாய், தந்தை, சகோதரியுடன் ஒரு நகரத்தின் ஒரு மூத்திரச்சந்தில் தெருவுக்கு கீழே அமைந்திருக்கும் சிறிய பேஸ்மென்ட்டில் பிழைப்புக்கே வழியில்லாமல் வாழ்கிறார்கள். கடுமையான வறுமை. ஒரு நாள், கி-வூவின் பள்ளிகால நண்பன் ஒருவன் அவர்களைப் பார்க்க வருகிறான். அவன் வெளிநாட்டுக்கு செல்லப் போவதால், அவன் ஆங்கில ஆசிரியராகப் பணியாற்றிவரும் ஒரு பணக்காரக் குடும்பத்துப் பெண்ணுக்கு கி-வூ தொடர்ந்து ஆங்கிலம் சொல்லித்தர அவன் ரெகமன்ட் செய்வதாகச் சொல்கிறான். அதனை ஏற்று, போலி சர்டிஃபிகேட்களைத் தயார் செய்து, மிகப் பெரிய பணக்காரரான பார்க்-டாங் என்பவருடைய வீட்டில் அவரது மகளுக்கு ஆங்கிலம் சொல்லித்தரும் ஆசிரியராக கி-வூ சேருகிறான். அதனைத் தொடர்ந்து பார்க் குடும்பத்துக்குத் தவறான தகவல்கள் சொல்லித் திட்டமிட்டு காய் நகர்த்தி, கி-வூ தனது சகோதரி, தந்தை, தாய் என அனைவரையும் வேறு வேறு வேலைகளில் அதே வீட்டில் சேர்க்கிறான்.

அவர்கள் எல்லாரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என யாருக்கும் தெரியாத வகையில் பார்த்துக்கொள்வார்கள். பார்க் குடும்பத்தில் முன்பு வேலை செய்த ஒரு வேலைக்காரியை தொற்று நோய் இருப்பதாக பார்க் குடும்பத்தை நம்பவைத்து அவளை வேலையை விட்டு துரத்தி, அந்த வேலைக்கு தனது அம்மாவை நியமிக்க வைக்கிறான் கி-வூ.

புதிய பிரம்மாண்டமான வீட்டில் அனைவரும் வேலை பெற்று ஓரளவுக்குப் பணம் கிடைக்க ஆரம்பிக்கிறது. கூடவே சற்று பேராசையும் அவர்களிடையே தலை தூக்குகிறது. ஒரு நாள் பார்க் குடும்பத்தினர், அவர்களுடைய மகன் பிறந்தநாளைக் கொண்டாட வெளியூருக்கு பிக்னிக் செல்கிறார்கள். அந்த இரவு, அதே வீட்டில் கி-வூ மற்றும் அவனுடைய குடும்பத்தினர் சேர்ந்து குடித்து, சாப்பிட்டு அந்த வீட்டுக்கு அவர்களே ஓனர்கள் போல நினைத்து கும்மாளமிட்டு மகிழ்கின்றனர். வெளியே நல்ல மழை பெய்ய ஆரம்பிக்கிறது. அப்போது ஏற்கனவே வேலையை விட்டுத் துரத்தப்பட்ட முன்னாள் வேலைக்காரி கதவைத் தட்டுகிறார். வீட்டில் ஒரு பொருளை விட்டுவிட்டதாகவும் அதனை எடுத்துச் செல்ல ஒரே ஒருமுறை வீட்டுக்குள் அனுமதிக்கும்படி கெஞ்சுகிறாள். இவர்களும் அனுமதிக்கிறார்கள். உள்ளே, பார்க் குடும்பத்துக்குக் கூடத் தெரியாத ஒரு சுரங்க அறைக்கு அவள் செல்கிறாள். அங்கு அவளது கணவனை வைத்து பல ஆண்டுகளாக யாருக்கும் தெரியாமல் பராமரித்து வருகிறாள் என கி-வூ குடும்பத்துக்குத் தெரிந்து சண்டை நடக்கிறது. அதே போல கி-வூ குடும்பத்தினர் அனைவரும் ஏமாற்றி இந்த வீட்டில் வேலை செய்கிறார்கள் என்பதையும் அந்தப் பழைய வேலைக்காரி கொஞ்ச நேரத்தில் கண்டுபிடித்து விடுகிறாள்.

அதே சமயத்தில் பார்க் குடும்பம் அதிக மழை காரணமாக அவர்களுடைய பிக்னிக்கைப் பாதியிலேயே முடித்துவிட்டு வீடு திரும்பி விடுகிறார்கள். வீட்டில் இருக்கும் கி-வூ குடும்பத்தினர், பழைய வேலைக்காரியை அடித்துப் போட்டுவிட்டு, பார்க்குக்குத் தெரியாமல் வீட்டை விட்டு வெளியேறி, அவர்களுடைய வீட்டுக்கு கொட்டும் மழையில் நனைந்து கொண்டே செல்கின்றனர். அங்கு, அவர்களுடைய வீடு மழைவெள்ளத்தில் முற்றாக மூழ்கிப் போயிருக்கிறது. எல்லாப் பொருட்களும் வெள்ளத்தில் மிதந்து கொண்டிருக்கிறது. இவர்கள் அரசாங்கத்தின் ஒரு முகாமில் அந்த இரவு தங்க வைக்கப்படுகின்றனர். அடுத்த நாள் காலை, பார்க் குடும்பம் தனது மகனுக்கு பிறந்தநாள் பார்ட்டி ஏற்பாடு செய்திருப்பதாகவும் அதற்கான தயாரிப்புக்காக இவர்களை போனில் கூப்பிடுகிறார்கள். தங்களின் வீட்டை மொத்தமாக இழந்த நிலையில், பார்க் வீட்டின் சுரங்க அறையில் அந்த வேலைக்காரிக்கு இவர்களின் உண்மை தெரிந்த நிலையில், பெருங்குழப்பத்துடன், இவர்கள் அனைவரும் பிறந்தநாள் பார்ட்டியில் கலந்து கொள்ள அவசர அவசரமாகச் செல்கின்றனர்.

பிறந்த நாள் நிகழ்வு நன்றாக நடந்ததா? இவர்கள் அந்த வேலைக்காரியிடம் இருந்து தப்பித்தார்களா? பார்க் குடும்பம் என்னவானது போன்றவைகளுக்கான விடையாக க்ளைமாக்ஸ்அமைந்திருக்கிறது. ஒருவகையில் ஷாக்கிங்கான, டிஸ்ட்ரப் செய்யும் க்ளைமாக்ஸ் தான். ஆனால், அந்த க்ளைமாக்ஸ் தான் இந்தப் படத்தின் தரத்தை உயர்த்தி, உலக அளவில் விவாதங்களை ஏற்படுத்தியிருக்கிறது.

கதையை விட அதனை பிரசன்ட் செய்த விதம், மெட்டாஃபராக வைக்கப்பட்ட பல குறியீடுகள் படத்தின் பல அடுக்குகளை விரித்துச் செல்கிறது. அந்த கி-வூ குடும்பம் தான் பாராசைட்கள் என மேம்போக்காக தெரிந்தாலும் உண்மையில் பாராசைட்கள் அந்தப் பணக்கார பார்க் குடும்பம் தான்.

பார்க் குடும்பத்திடம் பணம் எக்கச்சக்கமாக உள்ளது. அந்த வீட்டு எஜமானிக்கு சமைக்கத் தெரியாது, வீட்டைப் பராமரிக்கத் தெரியாது. ஆனால் அனைத்தையும் பணத்தால் விலைக்கு வாங்கிவிட முடியும் என்பது பாராசைட்டின் மனநிலை தானே. சமூகத்தில் மிதமிஞ்சிய வளங்களை தனிநபர் உறிஞ்சும் போது, பிற மனிதர்களின் வாழ்வு அவர்களின் பாடு பற்றிய சுரணையே இல்லாமல் வாழ்வது அனைத்துமே பார்க் குடும்பமே பாராசைட் எனப் புரியவைக்கும்.

பார்க் குடும்பம், மழை பெய்ததால் வானம் கிளியராகி, நல்ல பசுமையுடன் பிறந்த நாள் விழாவைச் சிறப்பாக கொண்டாடும் வகையில் இருப்பதை மகிழ்கிறது. ஆனால் அதே மழை ஆயிரக்கணக்கான எளிய மக்களின் வாழ்வைப் புரட்டிப் போட்டு ஒண்டுவதற்கு கூட இடமில்லாமல் ஆக்கியிருக்கும். கி-வூவின் வீடு முழுக்கத் தண்ணீர் நிரம்பியிருக்க கி-வூவின் சகோதரி, சாக்கடை தெறிக்கும் டாய்லெட் பேசினில் செய்வதறியாது உட்கார்ந்து சிகரெட் பிடிக்கும் காட்சியும் அதற்கு ஒரு மணிநேரம் முன்னதாக அந்தப் பெரிய பங்களாவில் உலகமே அவர்களுக்கு தான் என்பது போல ஏகபோகமாக சுகித்திருந்ததும் வாழ்வின் எதிர்பாராமையைக் கூறும் படிமங்கள். கி-வூவின் வீட்டில் ஒரு விளையாட்டுப் போட்டியில் வென்ற மெடல் இருக்கும். இரண்டு முறை காண்பிக்கப்படுகிறது. ஆனால், அதற்கு எந்தப் பொருளாதார மதிப்பும் இருக்காது.

பங்களாவின் அன்டர்க்ரௌண்டில் இருக்கும் முன்னாள் வேலைக்காரியின் கணவர் கீழிருக்கும் ஒரு லைட் ஸ்விட்ச்சை வைத்துத் தொடர்ந்து மோர்ஸ் கோட் தகவலை அனுப்பிக் ல்கொண்டே இருப்பார். ஆனா அதனை யாரும் புரிந்து கொள்ள மாட்டார்கள். இந்தச் சமூகமும் ஏற்றத்தாழ்வின் ஆபத்தைத் தொடர்ந்து வெளிப்படுத்திக் கொண்டு தான் இருக்கிறது. ஆனால் புரிந்து கொள்ள தான் யாருமில்லை என ஒப்பீடு பண்ணிக் கொள்ளலாம்.

கி-வூவின் தந்தை பார்க்குடைய விலையுயர்ந்த பென்ஸ் காரின் டிரைவராக வேலை செய்வார். ஒரு சமயத்தில் பார்க், அவரது மனைவியிடம் அந்த டிரைவரைப் பற்றிக் கூறும் போது, டிரைவர் பேசும் போது லைனை க்ராஸ் செய்வதில்லை என்றும், அவரிடமிருந்து ஒரு வித அருவருப்பான சப்வே ஸ்மெல் வருவதாகவும் கூறுவார். அதனை மேசைக்கு அடியில் மறைந்திருக்கும் கி-வூவின் தந்தை கேட்பார். அதுவே கடைசி க்ளைமாக்ஸில் உணர்வு வெடிப்புக்குk காரணமாய் அமைந்துவிடும். அவர்களுக்குச் சாதகமாக முடிந்திருக்கவேண்டிய விஷயம் மொத்தமும் கொலாப்ஸ் ஆகிவிடும்.

இதற்கிடையில், நம் தமிழ் கூறும் நல்லுலகின் உலக சினிமாகாரர்கள் சிலர் இந்தப் படம் விஜய் நடித்த ‘மின்சார கண்ணா’ படத்தின் காப்பி என அலப்பறை கொடுத்துக் கொண்டுள்ளனர். இதை பாங்-ஜீன் மட்டும் கேட்டால், படத்தில் அவர் காட்டின அந்தப் பாறையை அப்படியே தூக்கிக் கொண்டு வந்து இவங்க தலையில் போட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

– ஜானகிராமன் நா