யூகித்தறிய முடியாத கொலைக் குற்றங்களைத் துப்பறியும் இரு காவலர்களின் கதை.
காவலர் வேலை என்பது போர்த் தொழிலுக்கு நிகரானது. வேலைக்கான அவார்டும் ரிவார்டும் நம் எதிரிலேயே அடுத்தவங்களுக்குச் செல்லும் சூழலும் காவல்துறை பணியில் உண்டு. இவற்றை எல்லாம் உள்வாங்கியும், ‘தன் கடன் பணி செய்து கிடப்பதே’ எனப் பணியாற்றும் கம்பீர அதிகாரி சரத்குமார். அவருடன் வேலை பழகும் வேட்கையுடன் வந்து இணைகிறார் அசோக் செல்வன். இந்நிலையில் திருச்சியில் அடுத்தடுத்து இரு இளம் பெண்கள் கொடூரமாக கொல்லப்படுகிறார்கள். அந்தக் கொலைகளுக்கான காரணி என்ன, கொலைகளை நிகழ்த்திய கர்த்தா யார் என சரத் – அசோக் செல்வன் கூட்டணி நூல் பிடித்துக் கண்டுபிடிப்பதே படத்தின் முழுக்கதையும்.
நாடி நரம்பெல்லாம் க்ரைம் டிப்பார்ட்மென்ட் காவல் அதிகாரி மேனரிசம் ஊறிப்போன ஒருவரால் தான் இப்படி நடிப்பில் அசரடிக்க முடியும். அதைச் சிறப்பாகச் செய்திருக்கிறார் சரத்குமார். அசோக் செல்வன் முகத்தில் இயல்பாகவே தெரியும் ஒரு பாசிட்டிவ் அம்சம் இந்தக் கதைக்கு மிக அழகாகப் பொருந்துகிறது. கோழையாக இருந்து திடீர் வீரனாக மாறாமல், கோழை என்பதை உணர்ந்து அதைத் தவிர்த்தெழ அவர் முயற்சிக்கும் காட்சிகளில் நடிப்பின் முதிர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். நாயகி நிகிலா விமல் போகிற போக்கில் கூடச் சிறப்பாக நடித்துள்ளார். திருச்சிராப்பள்ளி பின்னணியில் அசோக் செல்வனிடம் மொட்டை மாடியில் நின்று அவர் பேசும் ஒரு காட்சி, அவரின் சிறந்த நடிப்பிற்கான சாட்சி. ஏனைய பாத்திரங்களை அறிமுகம் செய்வது கதையை வெளிப்படுத்துவதாக மாறி விடும். ஆக, எல்லோர் நடிப்பும் சிறப்பு என்று முடித்துக் கொள்ளலாம்.
பின்னணி இசை இப்படத்திற்கு கூடுதல் பலம். எங்கெங்கு எந்தெந்த வாத்தியக்கருவி தேவை என்பதை உணர்ந்து இசை அமைத்துள்ளார் இசையமைப்பாளர். கலைச்செல்வன் சிவாஜியின் ஒளிப்பதிவு இருண்மை நிறைந்த காட்சிகளில் மிகச் சிறப்பான பங்களிப்பைச் செய்திருக்கிறது. திருச்சி மாவட்டத்தில் நாம் காணாத நிலப்பரப்புகளைப் படம் பிடித்திருப்பது கூடுதல் சிறப்பு.
கொலைகளையும், அதைத் தொடர்ந்து நடைபெறும் விசாரணைகளையும் நாம் பல படங்களில் பார்த்திருக்கிறோம். மிகத் தெளிவான திட்டமிடலுடன் கூடிய திரைக்கதையும், பட உருவாக்கமும், போர்(த்) தொழில் படத்தைத் தனித்துக் காட்டுகிறது. மேலும் வெறும் காட்சிப்படுத்துதல், விறுவிறுவென கதை சொல்லி கவனிக்க வைத்தல் என்பதோடு மட்டும் நின்று விடாமல் படத்தின் இறுதிக்காட்சியில் சொல்லும் அறம் நம்மை கரம் தட்ட வைக்கிறது. இடைவேளை வரை சீறிப்பாயும் படம் இடைவேளைக்குப் பிறகு மெதுவாக நகர்ந்தாலும் மிக ஆழமான காட்சிகளைக் கொண்டிருக்கிறது. அந்தக் காட்சிகள் இந்தக் கதைக்கான நியாயத்தைச் சரியாகச் செய்கின்றன. ஒரு மனிதன் பெரும் குற்றவாளியாகும் காரணிகளில் உளவியல் பிரச்சனை பெரும் பங்காற்றுகிறது என்பதை பக்கா கமர்ஷியல் பேக்கேஜோடு சொல்லியிருக்கும் ‘போர்(த்) தொழில்’ இந்தக் கோடையில் வாகை சூடவுள்ளது.
– ஜெகன் கவிராஜ்