Search

வெனம் விமர்சனம்

Venom-movie-review

உலகம் வாழத் தகுதியற்ற கிரகம் என நம்புகிறார் லைஃப் ஃபெளண்டேஷனின் கார்ல்டன் ட்ரேக். சமீபமாய் ஹாலிவுட் வில்லன்கள் அனைவரையுமே இந்த பயம் ஆட்டுவிக்கிறது. அவர்களை இரு சாரராகப் பிரிக்கலாம். முதல் வகையினர், மக்கள் தொகையைப் பாதியாகக் குறைத்துவிட்டால், பூமி பழையபடி பூத்துக் குலங்கத் தொடங்கிவிடும் என நம்புவர்கள். இன்னொரு சாரார், மூட்டை முடிச்சுகளைக் கட்டிக் கொண்டு பூமியை விட்டே போய்விடுவது என நம்புவர்கள். கார்ல்டன் ட்ரேக், இந்த இரண்டாம் வகையைச் சேர்ந்த வில்லன்.

சரி, பூமியை விட்டு வெளியில் போய்விட்டால் போதுமா? மனிதர்கள் விண்வெளியில் வாழ அவர்களின் உடலினை, அந்தச் சூழலுக்கு ஏற்றவாறு தகவமைக்க வேண்டுமா? அதனால் விண்கல்லில் ஒட்டிக் கொண்டிருக்கும் நான்கு கூட்டுயிரிகளை (Symbiote) ஆய்வு செய்கிறார். மனிதரோடு கூட்டுச் சேராமல், அவ்வுயிரிகள் கார்ல்டன் ட்ரேக்கிற்கு ஆட்டம் காட்டிக் கொண்டிருக்க, ஒரு விபத்து போல் எடி ப்ரோக்கிற்குள் தன்னைப் பொருத்திக் கொள்கிறது கூட்டுயிரி.

மார்வெல் படம் போல் இல்லாமல் மிகவும் அசுவரசியமாய் நகர்கிறது. எடி ப்ரோக்கிற்கு உள்ளிருக்கும் வெனம், எடியுடன் பேசத் தொடங்கிய பின் படம் கொஞ்சம் கலகலப்பு எட்டிப் பார்க்கிறது. ‘நீயும் தோத்தவன். என் கிரகத்தில் நானும் தோத்தவன். அதனால் எனக்கு உன்னை ரொம்பப் பிடிச்சிருக்கு’ எனச் சொல்லும் “வெனம்”, பூமியைக் கைப்பற்ற நினைக்கும் ரையட் எனும் சக்திமிக்க சிம்பயாட்டிடம் இருந்து பூமியைக் காப்பாற்றுகிறது.

கூட்டுயிரிகளின் நெளியும் உருவம், அருவருக்கத்தக்க வகையில் மிகப்பெரும் குறை. கரப்பான்பூச்சிக்கே துள்ளிக் குதிப்பவர்களால், வெனத்திடம் இருந்து கன்னாபின்னா என நீளும் டென்ட்டகள்ஸை ஏற்றுக் கொள்வது சாத்தியமா? தேனோஸ் போல் கம்பீரமான சூப்பர் வில்லனைப் பார்த்துவிட்ட ரசிகர்களுக்கு, வெனம் சரியான தீனி இல்லை என்றே சொல்லவேண்டும். மேலும், தட்டையான திரைக்கதையுடன் இணைந்து, வெனம் மனதைக் கவர மறுக்கிறது. அடுத்தடுத்த பாகங்களில் வெனம் மனதுக்கு நெருக்கமாகும் என நம்பலாம். பத்திரிகையாளர் எடி ப்ரோக்காக டாம் ஹார்டி அசத்தியுள்ளார். படம் அவரைச் சுற்றியே நகர்கிறது. அதை அழகாக அவர் சுமந்திருந்தாலும், எடி ப்ரோக் பாத்திரத்தை இன்னும் அழுத்தமாகச் சித்திரித்திருக்கலாம். ஏனோ தானோ என்றுள்ளது. கார்ல்டன் ட்ரேக் பாத்திரத்திற்கு, பிரட்டனில் வாழும் பாகிஸ்தானியான ரிஸ் அஹமெத் நல்ல தேர்வு. ‘அட, ஹாலிவுட் படத்தில் ஓர் இந்திய முகம்’ என்ற அற்ப மகிழ்ச்சி எட்டிப் பார்ப்பதைத் தவிர்க்க முடியவில்லை.

வெனத்திற்கு எல்லாப் பக்கமும் பார்வையுண்டு. பைக்கில், கார்ல்டன் ட்ரேக்கின் ஆட்களிடமிருந்து தப்பிக்கும் போது வெனம் செய்யும் ஆக்‌ஷன் சாகசம் ரசிக்க வைக்கிறது. எடி ப்ரேக்கின் முன்னாள் காதலியைப் பார்த்து, ‘எனக்கு அவளைப் பிடிச்சிருக்கு’ என வெனம் காரில் ஏறும் காட்சிக்குத் திரையரங்கம் சிரிப்பொலியில் குலுங்குகிறது. ஆனால், ஓவர் ஆல் படமாக, வென்ம தரும் அனுபவம் பிரமாதமாக இல்லை. அன் வெயிங் எனும் பாத்திரத்தில் மிஷேல் வில்லியம்ஸ் கலக்கியுள்ளார். கோரமாகச் சண்டை நடக்கும் இடத்திற்குப் பெண்கள் வரக்கூடாது என அன் வெயிங்கைக் கழட்டி விட்டுட்டு, வெனமும் எடி ப்ரோக்கும் செல்கின்றனர். ஆனால், இரண்டு இடங்களில் கூட்டுயிரியின் பலவீனத்தைப் பயன்படுத்தி, சிம்பயாட்டைத் தெறிக்க விடுவது மிஷேல்தான்.

மிட் க்ரெடிட் சீனில், சீரியல் கில்லர் க்ளீட்டஸ் கேசடியைச் சந்திக்கிறார் எடி ப்ரோக். அடுத்த பாகத்தில், தெறிக்க விடப்போவது கார்னேஜ் எனும் வில்லன் சிம்பயாட் என ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளனர். போஸ்ட் க்ரெடிட் சீனில், ‘ஸ்பைடர் வெர்ஸ்’ படத்திலிருந்து வரும் காட்சியினைக் காத்திருந்து தவறாமல் காணவும்.