Shadow

இராவண கோட்டம் விமர்சனம்

‘மதயானைக் கூட்டம் (2013)’ படம் தந்த அனுபவத்தைப் பத்தாண்டுகளாகியும் மறக்க முடியாதளவு மிக நேர்த்தியாக நேட்டிவிட்டியுடன் இயக்கியிருந்தார் விக்ரம் சுகுமாரன். அந்தப் படம், ஹிந்தியில் ‘ராவன்பூர்’ என மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியானது. விக்ரம் சுகுமாரனின் அடுத்த படைப்பிற்காகச் சினிமா ஆர்வலர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். ரசிகர்களின் மிக நீண்ட காத்திருப்பிற்குப் பிறகு, ஒருவழியாக அவரது அடுத்த படைப்பான “இராவண கோட்டம்” திரையரங்கை எட்டிவிட்டது.

ஏனாதி எனும் கிராமம் மட்டுமல்லாமல், சுற்றியுள்ள 16 கிராமங்களையும் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் நல்லவர் போஸ். அந்தக் கோட்டத்திலேயே, நல்லது கெட்டது அறிந்த ஒரே ஆள். அந்த ஏரியா சமஉ (MLA) கூட போஸைப் பார்த்தால் பம்முவார். போஸ், ஊர் ஒற்றுமையைக் காப்பாற்ற உயிரையும் கொடுப்பார்; ஊர் ஒற்றுமைக்குப் பாதகமென்றால் உயிரையும் எடுப்பார். ஆளுங்கட்சி அமைச்சரே, கட்சி வேட்டி அணிந்து ஊருக்குள் செல்லக்கூடாது. அவ்வளவு கட்டுக்கோப்பாக ஊரை வைத்துள்ளார் போஸ். அமைச்சருக்கு வரும் கோபத்தில், ஏனாதி ஊருக்குள் சாதிக் கலவரத்தை உருவாக்கிவிடுகிறார். அதைப் பயன்படுத்தி, இராவண கோட்டத்திற்குள் சதிக்காரர்கள் நுழைந்து, ஒரே இரசாபாசம் ஆகிவிடுகிறது. ஏனாதிக்கு என்னானது ஏதானது என்பதே படத்தின் முடிவு.

ஏனாதி எனும் ஊர் எவ்வளவு ஒற்றுமையாக உள்ளதென்பதை (!?) முதல் காட்சியிலேயே இயக்குநர் சொல்லிவிடுகிறார். எப்படியென்றால், மேலத்தெரு இளைஞர்கள் தனி அணியாகவும், கீழத்தெரு இளைஞர்கள் தனி அணியாகவும்தான் சண்டையின்றி கபடி விளையாடுகிறார்கள் “எப்பொழுதும்”. ‘அட, ஏன்ய்யா எப்பவும் தனித்தனி அணியாவே விளையாடுறீங்க? எல்லாரும் ஒன்னுமண்ணா கலந்து விளையாடுங்கய்யா’ என்று புத்திமதி சொல்ல ஏனோ போஸ்க்குத் தோன்றாமல் போய்விடுகிறது. அப்படித் தனித்தனியாகப் பிரிந்து விளையாடுவதுதான் ஒற்றுமை என இளைஞர்களும் நினைத்துக் கொள்கின்றனர். ஷ்ஷ்ப்ப்பாஆஆ..! சரி, போஸ்தான் ஊரை ஒற்றுமையாக வைத்திருப்பது பற்றிய யோசனையில் சின்ன பசங்க விளையாட்டைக் கண்டுக்காமல் விட்டுவிடுகிறார் என்று வைத்துக் கொள்ளலாம். ஆனால், இந்த சமஉ-வை என்ன செய்வது? என்றும் எதிலும் சேராத இந்த இரண்டு தெருவினரை எப்படிப் பிரிப்பது என்று தானும் குழம்பிப் படம் பார்ப்பவர்களையும் குழப்புகிறார் சமஉ அருள்தாஸ்.

உண்மை அனைவரது கண்களுக்கும் புலப்படாது. தத்துவ ஞானிகளால் மட்டுமே மேலோட்டமான புகைமூட்டத்திற்குள் மறைந்திருக்கும் உண்மையைக் கண்டுகொள்ள இயலும். படத்தில், அப்படி ஒரே ஒரு கதாபாத்திரம்தான் உள்ளது. கீழத்தெருவில் பிறந்த அந்த மகான், போஸின் ஆதிக்கப் போக்கிற்குப் பணியாததோடு மட்டுமின்றி, அந்த ஊரின் போலித்தனத்தையும் பாசாங்கையும் வெளியில் கொண்டு வருகிறார். ஒரு கை இழந்தவரான அந்தக் கதாபாத்திரத்தின் தன்னம்பிக்கையும் மனவுறுதியையும் தொலைநோக்கையும் ஆச்சரியப்படத்தக்கும் வகையில் அமைத்து அசத்தியுள்ளார் இயக்குநர்.

போஸின் இரண்டு கைகளாக உள்ளனர் செங்குட்டுவனும் மதிமாறனும். செங்குட்டுவனாக ஷாந்தனு பாக்யராஜ் நடித்துள்ளார். ராம்நாடு மண்ணில் ஒருவராக அவர் தன்னை மாற்றிக் கொண்டு அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். அவரும், இந்திரா பிரியதர்ஷினியாக நடித்திருக்கும் கயல் ஆனந்தியும் ஃப்ரேம்களில் வரும் காட்சிகள், கந்தகப்பூமியின் கொதிப்பை மறக்கடிக்கும் தென்றலாய் உள்ளன. அவமானப்படுத்துபவரைக் காதலிக்கும் பிற்போக்குத்தனம் மண்டிக் கிடக்கும் லூசுப்பெண்ணாக வந்தாலும், கயல் ஆனந்தியை ரசிக்க முடிகிறது. மதிமாறனாகச் சீரியசான பாத்திரத்தில் சஞ்சய் சரவணன் நடித்திருந்தாலும், பார்வையாளர்கள் தங்களை மறந்து சிரிக்க இரண்டு காட்சிகளில் உதவி செய்துள்ளார். ‘SI’ எனப் பொறிக்கப்பட்ட லாக்கெட்டைப் பார்த்து அவரடையும் புளகாங்கிதத்தின் பொழுதும் பார்வையாளர்கள் நகைக்கின்றனர், அதே லாக்கெட்டை நாயகியின் கழுத்தில் பார்த்து அவர் கோபமுறும் பொழுதும் பார்வையாளர்கள் விழுந்து புரண்டு சிரிக்கின்றனர். ஊரே அங்கு பற்றி எரிகிறது என புத்திக்கு உறைத்தாலும், சஞ்சயின் நகைச்சுவைக்குச் சிரிக்காமல் இருப்பது மிகவும் கடினம். நல்ல கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுக்கும் பட்சத்தில், சிறந்த நடிகராகப் பரிணமிப்பார் சஞ்சய் சரவனன். தன்னை மனபூர்வமாகத் தாழ்த்திக் கொள்ளும் சித்திரவேல் எனும் கதாபாத்திரத்தில் இளவரசுவைப் பார்க்கவே பரிதாபமாக உள்ளது. போஸாக பிரபு நடித்துள்ளார்.

படத்தில் வில்லன் யாரென்பதைப் பார்வையாளர்களின் யூகத்திற்கே விட்டுவிடுகிறார் விக்ரம் சுகுமாரன். ஊரிலுள்ளோரைச் சுயமாக யோசிக்க விடாமல் கட்டுக்குள் வைத்திருந்த போஸா, நீரை உறிஞ்சு விடும் ராட்சசனான கருவேலமரமா, அந்த மரங்களை அழிக்க விடாமல் தடுக்கும் பெருநிறுவனமா (Corporate), பெருநிறுவனங்களுக்கு விலை போன அரசியல்வாதிகளா, அரசியல்வாதிகளின் சூதிற்கு சுலபமாகப் பலியாகும் மக்களா, இதில் யார் வில்லன் என்பதைப் பட்டிமன்றம் வைத்துக் கூட முடிவெடுக்க முடியாது.

காலம் எத்தனை பொல்லாதது? தலைப்பின் ஊடாகவே சமூக அரசியல் பேசிய ஓர் இயக்குநர், அதற்கு நேரெதிரான கருத்தை ஒவ்வொரு ஃப்ரேமிலும், ஒவ்வொரு வசனத்திலும் பேசி ஆச்சரியத்தில் மூழ்கடித்து விடுகிறார்.