Shadow

ஃபர்ஹானா விமர்சனம்

ஆஃபீஸ் ரூமில் இருந்து வகுப்பறைக்கு அறிக்கை வந்து, ஃபீஸ் கட்டாதவர்களின் பெயர் படிக்கப்பட்டுக் குற்றவாளிகள் போல் மாணவர்கள் எழுந்து நிற்க வைக்கப்படுவது என்பது மிகக் குரூரமான உளவியல் தாக்குதல். அத்தகைய தாக்குதல்களில் இருந்து தன் குழந்தைகளைப் பாதுகாக்க, ஃபர்ஹானா வேலைக்குச் செல்ல முடிவெடுக்கிறார். டீமானிடைசேஷன், ஜி.எஸ்.டி., கொரோனா கால ஊரடங்குகள் என வாழ்க்கை, குறிப்பாக சிறு தொழிலில் ஈடுபட்டோரை நிலைகுலைய வைத்துள்ளது. அப்படி, செருப்புக் கடை வைத்துள்ள ஃபர்ஹானாவின் தந்தைக்கும் வருமானத்தில் இழப்பு நேரிடுகிறது.

வங்கியின் பிபிஓ (BPO)-வில் வேலைக்குச் சேரும் ஃபர்ஹானாவிற்கு, ஓர் அவசரத் தேவைக்காகக் கூடுதல் பணம் தேவைப்படுகிறது. பொருளாதாரச் சுமையைச் சமாளிக்கும் பொருட்டு, ஊக்கத்தொகை அதிகம் கிடைக்கும், அலுவலகத்திற்குள்ளேயே இயங்கும் வேறொரு பிரிவிற்குப் பணிக்குச் செல்கிறார் ஃபார்ஹானா. தனிமையில் வாடுபவர்கள் நட்புடன் பேசிப் பழக அழைக்கும் ஒரு சர்வீஸ் (!?) பிபிஓ அது. அநேகமாக, டிஜிட்டல் இந்தியாவெனும் பெயரில் வங்கிகளால் தொட்டதற்கெல்லாம் சுரண்டப்படுவதால் காண்டாகும் வாடிக்கையாளர்களைக் குளிர்விக்க, வங்கியே அளிக்கும் ஸ்பெஷல் சர்வீஸ் போல! அத்தகைய சேவை என்பது பாலியல் வறட்சியைத் தீர்த்துக் கொள்ளும் ‘செக்ஸுவல் உரையாடல’ என்றறிந்து, கலாச்சார அதிர்ச்சிக்கு உள்ளாகி, அதிலிருந்து வெளியேற நினைக்கும் ஃபர்ஹானாவை ஓர் ஆதுரமான குரல் வசீகரம் செய்கிறது. மெய்நிகர் வசீகரத்தை உண்மையென நம்பும் ஃபர்ஹானா, நிறுவனத்தின் விதிமுறைகளை மீறி, தன்னிடம் பேசும் அந்த ஆதுரமான குரலுக்குரியவரின் முகத்தைப் பார்க்க நினைக்கிறார். அது, ஃபர்ஹானாவிற்கு எத்தகைய விளைவுகளை உண்டாக்குகின்றது என்றும், அதிலிருந்து அவர் எப்படி வெளியில் வருகிறார் என்பதுமே படத்தின் கதை.

மனுஷ்யபுத்திரனின் வசனங்கள், ஆதுரமான குரலுக்குச் சொந்தக்காரரான தயாளனை, மண்ணில் காணக் கிடைக்காத அருமாணிக்கமாக நம்பவைக்க உதவுகின்றன. தயாளனாகச் செல்வராகவன் நடித்துள்ளார். தேனொழுகப் பேசிய அதே குரல், தொந்தரவாகவும் உபத்திரவமாக மாறி ஃபர்ஹானா மீது வன்மத்தைக் கக்குகிறது. எது வசீகரித்ததோ, அதுவே வஞ்சிக்கத் தொடங்குகிறது. ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது என பிக்பாஸைப் போலக் கண்காணிப்பிலேயே வைத்து அச்சுறுத்துகிறது.

இத்தகைய அச்சுறுத்தல்கள், வேலைக்குப் போகும் அனைத்துப் பெண்களுக்குமே நேரக்கூடியதுதான். ஆனால், இப்படத்தில் மையக் கதாபாத்திரம் இஸ்லாமியப் பெண்ணாகப் படைக்கப்பட்டிருக்கிறது. அதற்கு ஒரு நியாயத்தையும் கற்பிக்க முயற்சி செய்துள்ளார் இயக்குநர். செருப்புக்கடை வைத்திருக்கும் ஃபர்ஹானாவின் வாப்பா, பெண்கள் வேலைக்குப் போவதைப் பற்றி பிளாட்ஃபாரத்தில் கடை வைத்திருக்கும் பூக்கார அம்மாவிடம் குறைப்பட்டுக் கொள்வார். அந்தம்மா, பெண்கள் தன் சொந்த கால்களில் நிற்க வேண்டிய அவசியத்தினைத் தெளிவாக எடுத்துரைப்பார். எந்த இனமானாலும், மதமானாலும், சாதியானாலும் சரி, பெண்களின் பொருளாதாரச் சுதந்திரம் என்பது மிக மிக அவசியமான ஒன்றாகும்.

சினிமா எனும் மாஸ் மீடியாவைக் கூடுதல் பொறுப்புடன் கையாள வேண்டியது ஒரு படைப்பாளியின் தார்மீகக் கடமை. வங்கியின் பிபிஓ-வே, செக்ஸ் உரையாடலுக்கான சேவையையும் அளிக்கிறது என்ற பிம்பத்தை ஏற்படுத்துகிறார் நெல்சன் வெங்கடேசன். பிபிஓ வேலைக்குச் செல்லுபவர்கள் மீது திட்டமிட்டு ஏற்றப்பட்டிருக்கும் வில்லங்கமான முத்திரை இது. ‘புனைவுக்குத்தானே! கற்பனை தானே!’ என சால்ஜாப்புகள் செல்லுபடியாகா. கொஞ்சம் மெனக்கெட்டு, செக்ஸுவல் உரையாடலுக்கான பிபிஓ-வை வங்கியின் பின் நிலை (Backend) சேவை எனக் காட்டாமல், தனிச்சேவை மையம் என்று காட்டியிருக்கவேண்டும்.

தெரிந்தோ தெரியாமலோ, தயாளன் போன்ற நச்சுக்குணம் (Toxic) கொண்டோரிடம் சிக்கிய பின், விலகி ஓட முனைந்தாலும் பிரச்சனை ஒரு முடிவுக்கு வராது. அது மேலும் பிரச்சனையின் தீவிரத்தை அதிகப்படுத்தவே செய்யும். அதை எப்படி எதிர்கொள்வதென பாரதியார் சொல்கிறார்.

பாதகஞ் செய்பவரைக் கண்டால் – நாம்
பயங்கொள்ள லாகாது பாப்பா,
மோதி மிதித்துவிடு பாப்பா – அவர்
முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா.

துன்பம் நெருங்கிவந்த போதும் – நாம்
சோர்ந்துவிட லாகாது பாப்பா,
அன்பு மிகுந்ததெய்வ முண்டு – துன்பம்
அத்தனையும் போக்கிவிடும் பாப்பா.

பெண்கள், பிரச்சனைகளுக்கான தீர்வுகளை விட, தன் பிரச்சனையை யாரேனும் காது கொடுத்துக் கேட்பதையே பெரிதும் எதிர்பார்ப்பார்கள் என்ற பாடத்துடன் தொடங்கும் ‘ஆண்களின் பூர்வீகம் செவ்வாய், பெண்களின் பூர்வீகம் சுக்கிரன்’ எனும் புத்தகம். இந்தப் படம் சுட்டிக் காட்டுவதும் அதையே! தன் மனதிலுள்ளதைப் பகிர்ந்து கொள்ள வாய்ப்பில்லாத பெண்ணின் மனதில் எழும் வெற்றிடமே, ஃபர்ஹானா தடுமாறும் புள்ளியும் கூட! அந்த வெற்றிடத்தை நிரப்புவதையே தீர்வாகவும் முன்மொழிகிறது படம்.