Shadow

Deadpool & Wolverine விமர்சனம்

வானத்தின் கீழ் இருக்கும் எதுவுமே புனிதமில்லை என சகலத்தையும் கேலிக்கும் கிண்டலுக்கும் உள்ளாக்கும் டெட் பூல், இம்முறை பன்னண்டத்தில் (Multi-verse) இருக்கும் அத்தனையையுமே கேலிக்கும் கேள்விக்கும் கிண்டலுக்கும் உரியவை தான் என டாப் கியரில் கலாய்த்துள்ளார். முத்தாய்ப்பாக டெட்பூல் படத்தின் முன்னாள் உரிமையாளரான ’21st Century Fox’-ஐ சகட்டுமேனிக்குக் கலாய்த்துத் தள்ளுகிறார் டெட்பூல். ஆங்கில வசனங்களின் சாறு குறையாதவண்ணம் தமிழ் டப்பிங்கையும் மிகக் கலகலப்பாக எழுதியுள்ளனர். சூப்பர் ஹீரோ நகைச்சுவைப் படம் என்றாலும் A சான்றிதழ் பெற்ற படமென்பதை நினைவில் கொள்க. படத்தை வால்ட் டிஸ்னி கையகப்படுத்தி இருந்தாலும், டெட்பூலின் வாய்க்குப் பூட்டு போடாமல் அப்படியே அனுமதித்துள்ளது சிறப்பு.

ஒரு சூப்பர் ஹீரோவுக்கு எப்படி மரியாதையுடன் ‘குட் பை’ சொல்லி வழியனுப்பி வைப்பதென்பதற்கான செவ்வியல் எடுத்துக்காட்டாக லோகன் திரைப்படம் விளங்குகிறது. காவிய நாயகனாகி விட்ட வுல்வெரினின் காவியத்தன்மை பாதிக்கப்படாத அளவு, மீண்டும் இப்படத்தில் அவரை மார்வெல் அழைத்து வந்துள்ளது. அவர்கள் கொண்டு வந்த விதத்தையும், ‘தொடர் தோல்விக்குப் பின்னுமா நீங்க மல்ட்டிவெர்ஸை விடலை?’ என டெட்பூல் கலாய்க்கிறார்.

சூப்பர் ஹீரோ படங்களின் வெற்றியைத் தீர்மானிப்பது சூப்பர் வில்லன்களே! இந்தப் படத்தில் அப்படியான வில்லனும் இல்லை, வலுவான கதையும் இல்லை. எனினும் டெட்பூலின் ஓயாத வாய் படத்தை ரசிக்க வைக்கிறது. வுல்வெரினுக்கும் அவருக்குமான காட்சிகளை மிக அருமையாகக் கொண்டு சென்றுள்ளனர். வுல்வெரினை உள்ளபடிக்கே மிகவும் வெறுக்கும் டெட்பூல், அவரை ஏன் தேடுகிறார், எப்படித் தேடுகிறார் என்ற முதல் சட்டகத்தில் இருந்தே அதகளம் தொடங்கி விடுகிறது. அதுவும் Ryan Reynolds என்ற பெயரைத் திரையில் வருமிடம் மிகவும் ரசிக்க வைக்கிறது. 21st Century Fox லோகோ புதையுண்ட இடத்தில் வுல்வெரினும் டெட்பூலும் பயங்கரமாக மோதிக் கொள்கின்றனர். “இந்த இடம் ‘மேட் மேக்ஸ்’ செட் போலிருக்கே! காப்பிரைட்ஸ் பிரச்சனை வருமோ?” என பார்வையாளர்களிடம் கேட்கிறார்.

திரையில் சாகசத்தை விட, பார்வையாளர்களிடம் நேரடியாக உரையாடும், மன்னிக்க, வாய் ஓயாமல் பேச மட்டுமே செய்யும் ஒரே சூப்பர் ஹீரோ டெட்பூல் தான். தன்னாலும் பார்வையாளர்களிடம் நேரடியாகப் பேச முடியுமென அழகான நைஸ் பூல் சொல்லும்பொழுது, ‘தனக்குக் கேட்க மட்டுந்தான் தெரியும்’ என பதற்றமாகும் திருவிளையாடல் தருமி போல் பதற்றமாகிறார் டெட்பூல். வாய் இல்லாவிட்டால் தன்னை ஒரு மார்வெல் ரசிகனும் ரசிக்கமாட்டான் என்ற தெளிவே படத்தின் மையமும் வெற்றியும். ‘அறிவார்ந்த வேண்டுதல்’ என்பது பொய்க்கு டெட்பூல் வைத்திருக்கும் அருமையான பெயராகும். சகலகலா வாயின் சொந்தக்காரர் என்றே டெட்பூலைச் சொல்லலாம்.

படத்தில் வில்லன் இல்லாவிட்டாலும், சூப்பர் வில்லிக்கான அத்தனை குணாம்சங்களுடன் யூகிக்க முடியாத ஆபத்தாகக் கலக்கியுள்ளது கஸாண்ட்ரா நோவா எனும் கதாபாத்திரம். கஸாண்ட்ராவாக நடித்துள்ள எம்மா கொரின் எக்ஸ் மேன் சார்லஸ் ஸேவியரின் இரட்டை சகோதரியாக வருகிறார். அவர் தலைக்குள் விரலை விட்டு எதிராளியின் மனதை ஊடுருவும் சக்தி படைத்தவர். அவர் ஜானி ஸ்டார்மைக் கொல்லும் விதம், எவருக்குமே நிகழக்கூடாத மிகக் கொடூரமான மரணங்களில் ஒன்றாகும். கண் சிமிட்டும் நேரத்தில் அத்தனை பயங்கரத்தினைச் செய்யக்கூடியவரை சிறப்பாகத் திரைக்கதையில் உபயோகித்துக் கொள்ளப்படவில்லை.

தானோஸின் சொடுக்கில் மறைந்த மார்வெல் மேஜிக்கை, இடுகாட்டையும் குப்பைக்கூளங்களையும் கிளறி மீண்டும் கொண்டு வந்துள்ளார் டெட்பூல்.

1 Comment

Comments are closed.