Shadow

திறனாய்வுப் பார்வையில் ரஜினிகாந்த்

rajinikanth4

‘திறனாய்வுப் பார்வையில் ரஜினிகாந்த்’ என்ற புத்தகத்தை எழுதியுள்ளார் தொல்காப்பியன்.

“சரிகமபதநி” எனும் ஏழு ஸ்வரங்களைப் போல 7 தலைப்புகளில் தொல்காப்பியன், தன் மேன்மைத் தமிழில் , அவருடைய உளவியல் பார்வையைப் படரவிட்டு, சமூகம், கலை, பண்பாடு ஆகிய மூன்றையும் ஒன்றுக்கொன்று தொடர்புப்படுத்தி மிகச் சிறந்த ஆய்வுப் புத்தகத்தைப் பொருத்தமான நேரத்தில் வெளியிட்டு இருக்கிறார்.

இந்தப் புத்தகம் ஒரு ‘சினிமா அறிவியல் (Cinema Science)’ புத்தகம் என்ற வகைப்பாட்டில் முதன்மைப்படுத்தி வைக்கலாம். ஓர் எழுத்தாளன் எழுத்துக்களை எப்படிக் கோர்த்து எழுதவேண்டும் என்பதற்கு இந்தப் புத்தகமே சரியான முன்னுதாரணம். முனைவர் பட்டம் பெறுவதற்கான அனைத்துத் தகுதிகளையும் கொண்ட புத்தகமாகத் தயாரிக்கப்பட்டிருக்கிறது. அவ்வளவு அற்புதமான செய்திகளைத் தாங்கி நிற்கிறது.

சினிமாவைப் பற்றிய புரிதலும் ஆர்வமும், அதன் மீது கொண்ட காதலும் வெறியும், ஒரு சேரக் கொண்ட ஒருவரால் மட்டுமே இது போன்ற புத்தகத்தைப் படைக்க முடியும்.

திரு.தொல்காப்பியன் அவர்களின் மனைவி பெயர் ‘தேவிகா’ என்றால், துணைவி பெயர் ‘சினிமா’ ஆகத்தானிருக்க வேண்டும். அந்தளவு சினிமாவை நேசித்திருக்கிறார். இவரை ‘சினிமா கலைஞன்’ என்ற வட்டத்திற்குள் மட்டும் சுருக்கி விட முடியாது அதையும் தாண்டி சீரிய சமூக சிந்தனையாளன் என்றே கூறலாம்; இவருடைய எழுத்துக்களில் இருக்கிற நேர்மையையும் நாம் அறிய முடிகிறது. ஓர் இடத்தில், சில இயக்குநர்கள் செய்யத் தவறிய விடயத்தையும் நேரடியாக சாடியிருக்கிறார்.

Thiranaiyvu paarvaiyil Rajiniநடிப்பிற்கான வரையறையை, சினிமா உலகமே வரையறுக்காமல், யதார்த்தமான பொழுது போக்கு வியாபாரத் தொழிலாக மேற்கொண்டிருக்கும் போது, நடிப்பு என்றால் என்ன என்கிற வறையறையை அறிவியல் ரீதியாகத் தந்த தொல்காப்பியனுக்கு சினிமா உலகம் நன்றி சொல்ல வேண்டும்.

சினிமா என்றால் என்ன என்கிற கேள்விக்கான விடையை மிகச் சரியாகவும் தெளிவாகவும் சொல்லியுள்ளார். இதற்கு முன்னர், பல்வேறு அறிஞர்கள் அதற்கான வறையறையைக் கூறினாலும், மிகப் பொருத்தமான கோட்பாட்டை உருவாக்கியுள்ளார் தொல்காப்பியன்.

சினிமா துறையில் இருக்கும் நடிகர், நடிகைகள், உட்பட அனைத்துத் துறை கலைஞர்களும், படித்து பயன்பெற வேண்டிய புத்தகம். தமிழ் சினிமாவை உலகத்தரத்திற்கு எடுத்துச் செல்ல முயற்சிக்கும் நடிகர்களுக்கும் தயாரிப்பாளர்களுக்கும், மத்தியில், ஓர் எழுத்தாளனாகத் தமிழ் சினிமாவையே இப்புத்தகம் மூலம் உலகத் தரத்திற்கு உயர்த்தி விட்டார் என்று டொன்னால் அது மிகையில்லை.

நாடக நடிப்பிற்கும், சினிமா நடிப்பிற்கும் உள்ள வேறுபாட்டை இவர் பகுத்தாய்ந்த விதம் புதிய மைல்கல். இது எவரும் தொட்டிராத கோணம். இவர் பல இடங்களில், நடைமுறை புழக்கத்தில் இல்லாத தமிழ் சொற்களைக் கையாண்ட விதம் மிக அற்புதம். சுவைஞன், விகடகலை, போலச் செய்தல் போன்ற சொற்களுக்கு இவர் அளிக்கும் விளக்கம் இலக்கிய உலகமே இவரை உச்சத்தில் வைத்து மெச்சும் அளவிற்கு உள்ளது. ஆகச்சிறந்த உளவியல் ஆய்வைத் திறம்படச் செய்திருக்கிறார்.

இவர் யாரைப் பற்றி திறனாய்வு செய்ய முற்பட்டாரோ, அந்த மனிதனே ஆச்சரியப்பட்டு போவார். அவரின் மனைவி, குழந்தைகள், சகோதர சகோதரிகள், நண்பர்கள், உறவினர்கள் என எவரும் அறிய முற்படாத பாத்திரத்தைத் தொட்டிருக்கிறார். அவர்களுக்கே அந்த மனிதனைப் பற்றி தெரிந்திராத விஷயத்தை இவர் கையாண்டு வெளிப்படுத்திய விதம் ஆச்சர்யக்குறி! ஏனென்றால் இம்மனிதன் அம்மனிதனை நேருக்கு நேராக இன்று வரை ஒருமுறை கூடச் சந்திக்கவில்லை.

இவர் மூன்று படங்களை மட்டுமே, இப்புத்தகத்தில் மேற்கோள் ஆய்வு செய்திருக்கிறார். ‘முள்ளும் மலரும்’, ’16 வயதினிலே’, ‘ஜானி’ ஆகிய மூன்று படங்களை மட்டுமே இவர் எடுத்துக்காட்டிற்காகக் கையாண்டிருக்கிறார். அதில் ஜானியைப் பற்றி இவர் ஆய்வு செய்த விதம் மெச்சத்தகுந்தது.

பக்தன், ரசிகன், சமூகம் ஆகிய மூன்றையும் ஒன்றுக்கொன்று தொடர்புப்படுத்தி சுட்டிக் காண்பித்த விதங்களில் இருக்கும் உண்மையை நம்பத்தான் வேண்டி இருக்கிறது. இதை யாரும் மறுதலிக்க முடியாது. சினிமா தனிமனித வாழ்விலும், சமூகத்திலும் மாபெரும் சமூக நீதியை நிலைநாட்டி இருக்கிறது என்கிற புரிதலைச் சமூகத்திற்கு அடையாளப்படுத்திய கோணம் மிகப் புதுமை. நம்மை அறியாமல் சினிமா இந்தச் சமூகத்தை மாற்றிக் கட்டமைத்ததில் உள்ள பெருமையைச் சொல்லும் போது, நான் அகமகிழ்ந்து போனேன். இந்தப் புத்தகம் பல்வேறு விருதுகளை வாங்கி குவிக்க வேண்டும் என்று நெஞ்சத்தில் இருந்து வாழ்த்துகிறேன்.

– பெ.செந்தில்குமார்

(இந்தக் கட்டுரையில் வரும் கருத்துகள் அனைத்தும் கட்டுரையாளரின் சொந்தக் கருத்துகள். இவை இதுதமிழின் கருத்துகள் அல்ல – ஆசிரியர்)

புத்தகம் கிடைக்குமிடம்: டிஸ்கவரி புக் பேலஸ்