32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

“ரஜினி சார் தான் இன்ஸ்பிரேஷன்” – சாய் தரம் தேஜ்

Dinesh R சேலம் Published: 30/04/2023 4 நிமிட வாசிப்பு Updated: 10/05/2023 இது புதிது
எழுத்து அளவு:

தெலுங்கு நடிகர் சாய் தரம் தேஜ் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘விரூபாக்‌ஷா’ எனும் திரைப்படம், மே மாதம் 5 ஆம் தேதியன்று தமிழில் வெளியாகிறது.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

அறிமுக இயக்குநர் கார்த்திக் வர்மா டண்டூ இயக்கத்தில் தயாராகி இருக்கும் முதல் திரைப்படம் ‘விரூபாக்‌ஷா’. இந்தத் திரைப்படத்தில் சாய் தரம் தேஜ், கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை சம்யுக்தா நடித்திருக்கிறார். இவர்களுடன் சுனில், பிரம்மா ஜி, ரவி கிருஷ்ணா, அஜய் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். சம்ஹத் சாய்நூதீன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தத் திரைப்படத்திற்கு, ‘காந்தாரா’ புகழ் அஜனீஸ் லோக்நாத் இசையமைத்திருக்கிறார். தமிழ்ப் பதிப்பிற்கு என்.பிரபாகர் வசனம் எழுத, மிஸ்டரி த்ரில்லர் ஜானரில் தயாராகி இருக்கும் இந்தத் திரைப்படத்தை ‘ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி சித்ரா’ எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் பி.வி.எஸ்.என். பிரசாத் மற்றும் சுகுமார் ரைட்டிங்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் இயக்குநரும், தயாரிப்பாளருமான சுகுமார் ஆகியோர் இணைந்து பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கிறார்கள். இந்தத் திரைப்படத்தைத் தமிழில் ஸ்டுடியோ க்ரீன் சார்பில் தயாரிப்பாளர் கே. ஈ. ஞானவேல்ராஜா வெளியிடுகிறார்.

ஏப்ரல் 21ஆம் தேதியன்று தெலுங்கில் வெளியான இந்தத் திரைப்படம், வெளியான ஒரு வாரத்திற்குள் 65 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து சாதனை படைத்திருக்கிறது. இந்தத் திரைப்படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்வு சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது. இதன் போது தமிழில் வெளியிடும் ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் தனஞ்செயன் மற்றும் விநியோகஸ்தர் சக்திவேலன், தயாரிப்பாளர் பி.வி.எஸ்.என். பிரசாத், இயக்குநர் கார்த்திக் வர்மா, நடிகை சம்யுக்தா, படத்தின் நாயகனான சாய் தரம் தேஜ் கலந்து ஆகியோர் கலந்து கொண்டனர்.

நாயகன் சாய் தரம் தேஜ், ”நான் சாதாரண சென்னை தி. நகர் பையன் தான். 91iல் அடையாறில் உள்ள பள்ளியில் தான் படித்தேன். தெலுங்கில் நாயகனாக அறிமுகமாகி, பல வெற்றிகளைp பெற்றிருந்தாலும் தமிழில் நாயகனாக வெற்றி பெற வேண்டும் என நீண்ட நாட்களாக நினைத்திருந்தேன். அந்தக் கனவு ‘விரூபாக்‌ஷா’ படத்தின் மூலம் நிறைவேறி இருக்கிறது. இந்தத் திரைப்படம் தெலுங்கில் வெற்றியைப் பெற்றது போல், தமிழிலும் வெற்றி பெறும் என உறுதியாக நம்புகிறேன். தமிழில் உள்ள அனைத்து நட்சத்திர நடிகர்களின் ரசிகர்களும் இந்தத் திரைப்படத்தைப் பார்த்து, எனக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். தமிழ் மக்கள் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது. இந்தத் திரைப்படத்தைத் தமிழில் வெளியிடும் ஸ்டுடியோ க்ரீன் ஞானவேல்ராஜா, தயாரிப்பாளர் தனஞ்ஜெயன், விநியோகஸ்தர் சக்திவேலன் ஆகியோருக்கு இந்தத் தருணத்தில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் படத்தில் நடித்ததற்கு ரஜினி சார் தான் இன்ஸ்பிரேஷன். அவர் நடித்த ‘சந்திரமுகி’ படம், கதையின் நாயகிக்குத்தான் முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருக்கும். அதே போல் இந்தப் படத்திலும் கதையின் நாயகிக்கு தான் முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருக்கிறது. இருப்பினும் இந்தத் திரைப்படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டதற்கு வித்தியாசமான கதையும், சுகுமாரின் விறுவிறுப்பான திரைக்கதையும் தான் காரணம்” என்றார்.

நடிகை சம்யுக்தா, ” எனக்குத் தமிழ் மொழியும், தமிழ்நாடும் மிகவும் பிடிக்கும். வாத்தி படத்திற்கு அளித்த ஆதரவிற்கு நன்றி. அதனைத் தொடர்ந்து தெலுங்கில் ‘விரூபாக்‌ஷா’ எனும் திரைப்படத்தில் நடித்திருக்கிறேன். ஒரு திரைப்படம் வெளியாகி அதனை ஓடிடியில் காண்பதற்கான வாய்ப்பு இருக்கிறது. ஆனால் ‘விரூபாக்‌ஷா’ திரையரங்கில் கண்டு மகிழ வேண்டிய படம். ஏனெனில் இது தொழில்நுட்ப ரீதியாகப் புதிய அனுபவத்தை வழங்கக்கூடியது. இப்படத்தில் இடம்பெற்றிருக்கும் பிரம்மாண்டமான காட்சி அமைப்புகள், ஒலி என அனைத்தின் சிறப்பம்சங்களும் திரையரங்கில் மட்டுமே சாத்தியம். இந்த அனுபவம் ஓடிடி மற்றும் சிறிய திரையில் கிடைக்காது” என்றார்.

இயக்குநர் கார்த்திக் வர்மா, ”தமிழ் மொழியில் இயல்பாகப் பேச வராது. இருந்தாலும் தமிழ்த் திரைப்பட ஆளுமைகளான மணிரத்னம், ஷங்கர், கார்த்திக் சுப்புராஜ், லோகேஷ் கனகராஜ், வெற்றிமாறன் என ஏராளமான திறமையாளர்கள் மீது அதிக ஈடுபாடு உண்டு. தமிழ் மக்களின் திரைப்பட ஆர்வம் எனக்கு மிகவும் பிடிக்கும். தமிழில் வெளியான ‘பீட்சா’, நயன்தாரா நடித்த ‘மாயா’ ஆகிய படங்களைப் பார்த்திருக்கிறேன். இந்தத் திரைப்படத்தை, சுகுமார் சாரின் திரைக்கதை வெற்றி பெற வைத்திருக்கிறது. முதலில் நாயகனைச் சந்தித்தபோது அவர் என்னிடமிருந்து காதல் கதையைத்தான் எதிர்பார்த்தார். ஆனால் நான் ‘விரூபாக்‌ஷா’ கதையைச் சொல்லும் போது, முதலில் தயங்கி பிறகு ஒப்புக்கொண்டார். இந்தத் திரைப்படம், திரையரங்கிற்குச் சென்று பார்த்து ரசிக்க வேண்டிய திரைப்படம். தெலுங்கு ரசிகர்கள் ரஜினி சார், கமல் சார், சூர்யா சார், கார்த்தி சார் ஆகியோருக்கு வரவேற்பும் ஆதரவும் அளித்தது போல், தமிழ் ரசிகர்கள் சாய் தரம் தேஜுக்கும் ஆதரவும் வரவேற்பும் அளிப்பார்கள்” என்றார்.

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.