Shadow

ராயர் பரம்பரை விமர்சனம்

பரம்பரை பரம்பரையாக நம் அனைவருக்கும் தெரிந்த கதை தான் ராயர் பரம்பரை திரைப்படத்தின் கதை. ஒரு முனையில் காதல் பிடிக்காத அப்பா, க மறுமுனையில் காதலிக்கும் மகள், சண்டை, பிரச்சனை, இறுதியில் சுபம். இதுதான் ராயர் பரம்பரை.

பரம்பரைக்கே பழக்கப்பட்ட கதையாக இருப்பது ஒன்றும் ஆகப் பெரிய தவறில்லை. ஆனால் அந்தக் கதை சுவாரசியமும் இல்லாமல், உணர்வோடும் ஒன்றாமல், சிரிக்கவும் வைக்காமல் அலைக்கழிப்பதைத் தவிர்த்திருக்கவேண்டும். கதை வலுவில்லாமல் இருக்கும் போது, அதன் திரைக்கதையாவது வலுவாக நின்று கதையைத் தாங்க வேண்டும். இப்படத்திலோ திரைக்கதை எங்கே போகிறது என்றே தெரியாமல் ஏதோ ஒரு திசையில் போய்க் கொண்டிருக்கிறது.

முதற்பாதி முழுவதும் நாயகன் – நாயகி இருவரும் முறைத்துக் கொண்டு திரிகிறார்கள். நாயகன் கழுகு கிருஷ்ணாவைக் காதலிப்பதாக சொல்லி அவரின் இரண்டு தோழிகள் லூட்டி அடிக்கிறார்கள். தங்கை ஓடிப் போனதால் காதலே பிடிக்காத ராயராக ஆனந்தராஜும், ஓடிப் போன மகளை நினைத்து உருகும் அம்மாவாக கே.ஆர்.விஜயாவும் வருகிறார்கள். இவர்களுக்கு இடையே ‘காதலரைக் கண்டால் பிரிக்கும் கட்சி’ என்ற பெயரில் நான்கு பேரைக் கொண்ட ஒரு கட்சி நடத்திக் கொண்டு, நாயகனுடன் சேர்ந்து கடுங்கோபம் வரும் அளவிற்கு காமெடி என்ற பெயரில் எதையோ செய்கிறார் மொட்டை ராஜேந்திரன்.

இப்படியான சொதப்பலான முதற்பாதிக்குப் பிறகு, இரண்டாம் பாதியில் நாயகன் நாயகி இருவருக்கும் திருமணம் ஆகிவிட்டது என்று புதுக்கதை தொடங்குகிறது. அதை அறிந்து துரத்தும் ராயர் ஆனந்தராஜ். இந்த சேசிங்குக்கு இடையில் இவர்களுக்குள் எப்படி காதல் மலர்ந்தது, எப்படி திருமணம் நடந்தது என எரிச்சலூட்டும் படியான ப்ளாஷ்பேக் திருப்பங்களுடன் படம் சுபமாக முடிகிறது.

இரண்டாம் பாதியில் வகை வகையாக சொன்ன கதையில் ஒரு சிறு பகுதியையாவது முதல் பாதியில் சொல்லி, கதாபாத்திரங்களைக் கொஞ்சம் நேர்த்தியாக ஸ்கெட்ச் செய்து திரைக்கதையை மாற்றி அமைத்திருந்தால் படம் கொஞ்சமாவது தப்பித்திருக்கும்.

நாயகி சரண்யா நாயர் சில ப்ரேம்களில் அழகாக தெரிகிறார். இது காதல் படமாகவும் இல்லை, நகைச்சுவைப் படமாகவும் இல்லை. இயக்குநர் ராம்நாத்திற்கு இது முதல் திரைப்படம். திரைப்பட வகைமைகளிலேயே மிகவும் கடினமானது காமெடி தான். அதை தன் முதல் படத்திலேயே கையிலெடுத்த அசட்டுத் துணிச்சலை வியக்காமல் இருக்க முடியவில்லை. ராம்நாத் இப்படத்தில் பாடலாசிரியராகவும் பணியாற்றி இருக்கிறார். அவர் வரிகளில் ‘அரபு நாட்டு ஈச்சமரம்’ கேட்க இனிமையாக இருக்கிறது. படத்தின் ஒரே ஆறுதல் இசையமைப்பாளர் கணேஷ் ராகவேந்திராவின் பின்னணி இசையும் பாடல்களும் தான்.

– இன்பராஜா ராஜலிங்கம்