Shadow

பம்பர் விமர்சனம்

பம்பர் என்றதும் என்ன நினைவுக்கு வருகிறது. பம்பர் ப்ரைஸ் தானே. பல்வேறு விதமான பம்பர் ப்ரைஸ் இருக்கின்றன. ஆனால் லாட்டரியின் பம்பர் ப்ரைஸுக்கு தனி மவுசு. கூவிக் கூவி மூலை முடுக்கெல்லாம் லாட்டரி சீட்டை விற்ற காலம் 2003ஆம் ஆண்டோடு தமிழகத்தில் முடிவுக்கு வந்தது. ஆனால் இன்னும் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் லாட்டரி சீட்டுகள் தடையின்றி இயங்கி வருகின்றன. குறிப்பாக நம் அண்டை மாநிலமான கேரளாவில் லாட்டரி சீட்டை அரசாங்கமே ஏற்று நடத்தி வருகிறது. எதற்கு இந்தத் தகவல் என்றால், படத்தின் டைட்டிலைப் போல், படத்தின் மையமே அந்தப் பம்பர் தான்.

பம்பர் பரிசாக விழும் 10 கோடி ரூபாய் மனிதர்களை எப்படியெல்லாம் மாற்றுகின்றது, அதே நேரம் ஒரு மனிதனை மட்டும் மாற்ற முடியாமல் எப்படி அவன் காலடியில் அது தோற்கிறது என்பதே இந்த “பம்பர்” திரைப்படத்தின் கதை.

மேற்சொன்ன விசயங்களை வைத்தே நீங்கள் நூல் பிடித்தாற் போல் இதுதான் கதையென்று கணித்திருப்பீர்கள். ஒரே ஒரு விசயத்தைத் தவிர, பணமே ஒரு மனிதன் முன் தோற்றுப் போனது என்றால் அவன் ஹீரோவாகத்தான் இருக்கும் என்று யூகித்திருப்பீர்கள். அது தான் பிழை. கதையின் நாயகன் கண்டிப்பாக அவர் தான். ஆனால் கதாநாயகன் வேறு.

தன் நண்பர்கள் மூன்று பேரைத் தன்னுடன் கூட்டுச் சேர்த்துக் கொண்டு சிறு சிறு குற்றங்களில் ஈடுபட்டு, அதில் கிடைக்கும் பணத்தின் மூலம் எப்படியாவது பணக்காரனாகி விடவேண்டும் என்ற பொன்னான லட்சியத்துடன் இருக்கிறார் நாயகன். ‘எம் புள்ளைக்கி கிரகம் சரியில்லை. அதான் அவனுக்குப் பத்து வயசாகும் போதே புருஷனை இழந்த என்னைக் காப்பாத்த கைல அரிவாளை எடுத்தான். ஆனி போயி ஆவணி வந்தா அவன் டாப்பா வந்திருவான்’ என பையன் பண்ணுகின்ற தப்புக்கெல்லாம் ஒத்தூதி வட்டிக்கு காசு வாங்கிக் கொடுத்து கள்ளச் சந்தையில் சரக்கு ஓட்ட உடந்தையா இருக்குற வெள்ளந்தி (!?) அம்மா. நாயகனும், அவன் நண்பர்களும் பண்ணுகின்ற குற்றத்தில் கிடைக்கும் பணத்தில் தனக்கொரு பங்கு கமிஷன் வாங்கிக் கொண்டு காலத்தைத் தள்ளும் ஹெட் கான்ஸ்டேபிள். ‘ஒரிஜினல் துப்பாக்கிக்கும், பொம்மை துப்பாக்கிக்கும் வித்தியாசம் தெரியாம, முரட்டுத்தனமாக வட்டிக்கு விட்டுப் பொழைக்குற ஒரு காமெடி பீஸ், ஊதாரியா ஊர் சுத்திட்டுத் திரியுற ஒன் புள்ளைக்கி என் பொண்ணைக் கேட்டு என் வீட்டுப் படிய இனி மிதிக்காத’ எனச் சொல்கின்ற தாய்மாமன் குடும்பம், ‘மாமன் பத்து வயசுலயே அத்தையக் காப்பாத்த அருவா எடுத்ததால தான் இப்டி இருக்கான்’ எனப் புரிந்து மதி மயங்கிப் போய்க் காதலில் விழுகின்ற நாயகி, ஊதாரியாக நாயகனோட சுற்றிக் கொண்டிருக்குற நண்பர்களைத் திட்டித் தீர்க்கின்ற அவர்களது குடும்பம், இவர்களுக்கு மத்தியில பெண்ணின் நிக்காஹ்க்கு கையில் பணமில்லாமல், தன்னோட லாட்டரி முதலாளிகிட்ட கடன் கேட்டுவிட்டு, அது கிடைக்குமா கிடைக்காதா எனத் தெரியாமல், லாட்டரி சீட்டு விற்றுக் கொண்டு தன்னோட அன்றாட வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருக்கும் முஸ்லிம் பெரியவர். இவ்வளவு தான் படத்தோட மொத்த கதாபாத்திரங்களும்.

படத்தின் முதல்பாதி முழுவதும் கதாபாத்திர வடிவமைப்பிலேயே போவதாலும், படத்தின் மையம் லாட்டரி டிக்கெட் தான் என்று தெரிந்துவிடுவதாலும் கதை இன்னும் தொடங்கவே இல்லையே என்கின்ற ஒரு உணர்வு ஏற்படுகின்றது. படத்தின் மையமான அந்த லாட்டரி சீட்டை வாங்கும் சம்பவம் இடைவேளை பகுதியில் தான் வருவதால், அதற்கு முந்தைய காட்சிகள் அனைத்துமே தேவையற்ற முன் இணைப்பாகவே தோன்றுகிறது. அந்தக் காட்சிகளை அப்படியே மொத்தமாக தூக்கிவிட்டு அதற்குப் பதிலாக புதிதாகக் காட்சிகளைக் கோர்த்தால் கூட இரண்டாம்பாதி கதை எந்த விதத்திலும் பாதிக்கப்படாது என்பதும் திரைக்கதையின் மிகப் பெரிய பலவீனம்.

இதைத் தவிர்த்து கதையின் மையக் கதாபாத்திரமான நாயகனுக்கு முதற்பாதியில் இருக்கும் காட்சிகளால் சாமானியப் பார்வையாளனுடன் எந்தவிதமான ஒட்டுதலும் ஏற்படுவதில்லை என்பதால், அவனுக்கு ஒரு பத்து கோடி கிடைத்தது என்றதும் மகிழ்ச்சியும் வரவில்லை. பிற்பாதியில் அவனுக்கு அந்தப் பணம் கிடைக்காமல் போய்விடுமோ என்கின்ற பதட்டத்துடன் கூடிய கவலையும் வரவில்லை. இது கதை மற்றும் கதாபாத்திர வடிவமைப்பின் மிகப் பெரிய பலவீனம். அது போக ஒன்றுக்கும் உதவாமல் வெட்டியாக ஊர் சுற்றிக் கொண்டு குற்றப் பின்னணியோடு திரியும் இவனுக்குப் பத்து கோடி கிடைத்தது என்பது தவறான முன்னுதாரணம் ஆகிவிடக்கூடாதே என்கின்ற கவலையும் இதனோடு சேர்ந்து கொள்கிறது. நிற்க.

இப்படி படம் பற்றிக் குறைபட்டுக் கொள்ள பக்கம் பக்கமாக நமக்குக் காரணங்கள் இருந்தாலும் கூட, படத்தில் ஆங்காங்கே தலைகாட்டும் அரசியல் தெளிவுள்ள சில நையாண்டிகளுக்காகவும், அரசியல் தொலைநோக்குடனும், சகோதரத்துவத்துடனும், கலை அழகுடனும் மிகுந்த செய்நேர்த்தியோடு உருவாக்கப்பட்டு இருக்கும் இஸ்மாயில் என்கின்ற முஸ்லிம் பெரியவரின் கதாபாத்திரத்திற்காகவும், மறக்கப்பட்டு பின்னர் அதுவே பழக்கப்பட்டுப் போன நேர்மை, மனிதாபிமானம் போன்ற இத்யாதிகளை அந்தக் கதாபாத்திரம் நம்முள் மீட்டெடுக்க முயன்றிருப்பதாலும், முதன்முறையாக அண்டை மாநிலத்தானை உச்சாணிக் கொம்பில் உயர்த்தி வைத்து தமிழ் சினிமாவில் அழகு பார்த்திருப்பதாலும் தவிர்க்கமுடியாத, தவிர்க்கவே கூடாத ஒரு தரமான படைப்பாகவே கருத வேண்டிய தேவையை உருவாக்கியிருக்கிறது இப்”பம்பர்” திரைப்படம்.

இஸ்மாயில் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நடிகர் ஹரிஷ் பேரடி நிஜமாகவே அக்கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார் என்றே சொல்ல வேண்டும். இரண்டாம் பாதியில் ஒற்றை ஆளாக முழுப்படத்தையும் தன் தோளில் சுமந்திருக்கிறார் இந்த மகா நடிகன். நாயகன் புலிப்பாண்டியாக வரும் நாயகன் வெற்றியின் கதை தேர்வு மிகவும் வித்தியாசமாகத் தான் இருக்கிறது. கதைகளைத் தேர்வு செய்வதில் நல்ல தேர்ச்சி இருந்தாலும் நடிப்பிலும் முக பாவங்களிலும் இன்னும் அவர் பல மைல் தூரம் போக வேண்டியிருக்கிறது. எல்லா உணர்வுகளையும் ஒரே மாதிரியான முக பாவனையில் கடத்த முயல்வது போல் தோன்றுகிறது. கோபப்படும் உணர்வுகள் எளிதாகக் கொப்பளித்தாலும் காதலோ, கழிவிரக்கமோ, பரிவோ, இயலாமையோ எட்டிக் கூடப் பார்க்க மறுக்கிறது. இருப்பினும் இன்னும் ஒரு நம்பிக்கை நட்சத்திரமாகவே மிளிர்கிறார்.

ஹெட் கான்ஸ்டேபிளாக வரும் இயக்குநர் கவிதா பாரதிக்கு மெச்சிக் கொள்ளும்படியான நடிப்பு. கொள்ளை போனது கள்ள நோட்டு என்று தெரியாமல் அதில் இரண்டு கட்டை தன் பாக்கெட்டில் சொருகிக் கொண்டு, உண்மை தெரிந்ததும் அதைப் பதறிக் கொண்டு விசிறி அடிப்பதும், தான் பணம் சம்பாதிப்பதற்காகப் புலிப்பாண்டியையும் அவனின் அல்லக்கைகளையும் வளர்த்து விடும் சூதும், ஒரு கொலையை அவர்களை செய்யத் தூண்டி அதில் குளிர்காய நினைக்கும் வில்லத்தனமும், நண்பர்களுக்குள்ளே கோல் மூட்டி அவர்களைப் பிரிக்கப் பார்க்கும் குள்ளநரித்தனமும் என வெரைட்டியான நடிப்பால் விருந்து படைக்கிறார்.

கோவிந்த் வசந்தாவின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை படத்திற்கு மிகப் பெரிய பலம். காட்சிகள் பலவீனமாகும் இடத்தில் பின்னணி இசை, காட்சிக்கு வலு சேர்த்து நம் உணர்வு நிலை பிறழாமல் இருக்க உதவுகிறது. அது போல் கார்த்திக் நேத்தாவின் வரிகளில் பாடல்கள் மனதை வருடவும் கணக்கவும் செய்கின்றன.

வினோத் ரத்தினசாமியின் ஒளிப்பதிவில் தூத்துக்குடியின் உப்புக் காற்றையும், புனலூர் வழி கேரளம் வந்தப் பின்னர் இயற்கை எழில் கொஞ்சும் இதமான காற்றையும் ஒன்றாகத் தரிசிக்க முடிகிறது. காசி விஸ்வநாதனின் கத்தரிக்கோல் திரைப்படத்தை முடிந்தளவிற்கு தொய்வில்லாமல் காப்பாற்ற முயற்சி செய்துள்ளது.

ஒரே ஒரு ஒற்றைக் கதாபாத்திரம் ஒட்டு மொத்த படத்தின் உணர்வு நிலையையும் மாற்றியமைக்கக் கூடும் என்பது ஐயப்பாட்டுடன் கூடிய விடயம் தான். ஆனால் அந்த விடயத்தை வெகு அற்பமாக அற்புதமாக நிகழ்த்திக் காட்டியிருக்கிறார் இப்படத்தின் இயக்குநர் எம்.செல்வகுமார். இவருக்கு இது முதல்படம் என்பதை நம்பவே முடியவில்லை. ஒவ்வொரு கதாபாத்திரத்தில் நடித்தவர்களும் ஏதோ நடிப்பில் டாக்டர் பட்டம் பெற்றவர்களைப் போல் நடித்திருக்கிறார்கள். இதில் வெற்றிக்கு மட்டும் வெற்றி கிட்டவில்லை. தூத்துக்குடியின் சொல் வழக்கையும், வாழ்வியலையும் தத்ரூபமாக காட்சிகளில் கொண்டு வந்திருக்கிறார். அதுபோல் அவரது அரசியல் புரிதலும், பார்வையும் மகிழ்ச்சியும் ஆறுதலையும் கொடுக்கிறது. இயக்குநர் எம்.செல்வகுமாரிடம் இருந்து இனி வரும் காலங்களில் இதைவிட இன்னும் தரமான படைப்புகளை எதிர்பார்க்கலாம் என்னும் நம்பிக்கையை அவர் விதைத்திருக்கிறார்.
முன்பாதியில் வலுவான கதையோ, காட்சி அமைப்புகளோ இல்லாமல் இருப்பது மைனஸ் என்றால், இரண்டாம் பாதியில் வரும் இஸ்மாயில் கதாபாத்திரமும், அந்த க்ளைமாக்ஸ் காட்சியும் படத்திற்கு மிகப்பெரிய ப்ளஸ். அது போல், “கவர்மெண்டே இத வித்துத்தான பொழப்பு நடத்துது”, ”சுடுறது எல்லாம் ஒங்க வேலய்யா.. என்னய்யா அந்த 13 பேரை சுட்டதை மறக்கலையோ…”, ”ஒங்க ஊரும் எங்க ஊரும் எப்டியா ஒன்னாகும், நீங்க புரோட்டாக்கு தனி காசு, குருமாக்கு தனி காசுல்ல வாங்குறீங்க”, ”நான் பொழைக்க வந்தவன் தான்டா, ஆனா இங்க இருக்குற போலீஸ் ஸ்டேஷன், கோர்ட், சட்டம் இதெல்லாம் எனக்கும் சேத்துதாண்டா..” என ஆங்காங்கே சரவெடியாய் வெடிக்கும் வசனங்கள் படத்திற்கு மைலேஜ் கொடுக்கின்றன.

மொத்ததில் பம்பர் – பத்து கோடிக்கு வொர்த் இல்லை என்றாலும் கூட, லாட்டரி போல் உங்களை ஏமாற்றத்தில் தள்ளாது என்பது உறுதி.

– இன்பராஜா ராஜலிங்கம்