
வணக்கம் தோழிகளே,
போளி (அதாங்க ஒப்பிட்டு), எல்லோருக்கும் பிடிச்ச ஒரு இனிப்புன்னே சொல்லலாம். விநாயகர் சதுர்த்தி, வீட்ல எதாவது பூஜைனாலும், இந்தப் பலகாரம் கண்டிப்பா இருக்கும். அந்த மிருதுவான பருப்புப் போளியோ இல்ல தேங்காய் போளியோ, சுடச் சுடவே எங்க வீட்ல தட்டு காலியாகிரும். இன்னிக்கு பருப்புப் போளி செய்யறது எப்படின்னு பார்க்கலாம்!
தேவையான பொருட்கள்:
- ஒப்பிட்டு பருப்பு- ½ கிலோ
- மைதா மாவு – ½ கிலோ
- சக்கரை – ½ கிலோ
- எண்ணெய் – 1 கப்
- ஏலக்காய் – 3
Step1:
பருப்பை, நல்லா தண்ணில ஒரு 2 மணி நேரம் ஊறவச்சு, குக்கர்ல 3 விசில் வரும் வரை வேக விடவும்.
Step 2:
மைதாவை ஒரு பாத்திரத்தில் கொட்டி, ஒரு 2 ஸ்பூன் சக்கரை போட்டு, 3 ஸ்பூன் எண்ணெய் ஊத்தி நல்லா கலக்கி வைங்க. பிறகு, தேவையான தண்ணீர் சேர்த்து நல்லா மாவைப் பிசைங்க. கொஞ்சம் பிசுபிசுன்னுதான் இருக்கணும். அப்படியே, மூடி போட்டுப் பாத்திரத்தை 10 நிமிஷம் மூடி வச்சிருங்க.
Step 3:
இப்போ வெந்த பருப்பை, தண்ணியை நல்லா வடிச்சு விட்டுடுட்டு, மிக்சியில் போட்டு (தண்ணி விடாம), ஏலக்காயையும் சேர்த்து நல்லா அரைச்சு எடுத்துக்கோங்க. அரைச்ச மாவை பாத்திரத்தில் கொட்டிப் பொடிச்ச சக்கரையைப் போட்டு, நல்லா கலக்கி வைங்க.
Step 4:
நல்லா கலந்த பிறகு, சின்னச் சின்ன உருண்டை பிடிச்சு எடுத்து வைங்க. இப்போ மைதாவும் நல்லா ஊறியிருக்கும். அதையும் சின்னச் சின்ன உருண்டையா பிடிச்சு வைங்க. அதில் ஒரு மைதா உருண்டைய எடுத்து, எண்ணெய் தடவிய வாழை இலையில் வைங்க.
Step 5:
கையால, இப்போ அதைச் சின்ன வட்டமா தட்டுங்க. அதன் நடுவில் ஒரு பருப்பு உருண்டையை வச்சு, மைதாவால் போர்த்தி விடுங்க. இதேபோல், எல்லா உருண்டைகளையும் தயார் செஞ்சு வைங்க
Step 6:
இப்போ, வாழையிலையில் கொஞ்சம் எண்ணெய் தடவிட்டு, ஒரு உருண்டையை வச்சு, கையாலோ அல்லது கட்டையாலோ வட்டமா தேய்ச்சு எடுங்க. அதைச் சூடான தோசைக் கல்லில் போட்டு, இரண்டு பக்கமும், பிரட்டிப் போட்டு வேக விட்டு எடுத்து அடுக்கி வைங்க.
அவ்ளோதாங்க. சுவையான பருப்புப் போளி தயார். வீட்லயே சுலபமா செய்யலாம். மைதாவிற்கு பதிலாகக் கோதுமை போட்டும் செய்யலாம். சுவை பெரிசா மாறாதுங்க.
செஞ்சு பார்த்திட்டு சொல்லுங்க. 🙂
– வசந்தி ராஜசேகரன்